PHPWord

 

نُبذَةٌ فِي العَقِيدَةِ الإِسْلَامِيَّة (شَرْحُ أُصُولِ الإِيمَانِ)

 

இஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்

 

بِقَلَم فَضِيلَة الشَّيخ العَلَّامَة

مُحَمَّدِ بْنِ صَالِحٍ العُثَيمِين غَفَرَ اللَّهُ لَهُ وَلِوَالِدَيْهِ وَلِلْمُسْلِمِين

ஆக்கம் : பேரறிஞர் அஷ்ஷைக்

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)

 

அல்லாஹ் அவரதும், அவரது பெற்றோரினதும், அனைத்து முஸ்லிம்களினதும் பாவங்களை மன்னிப்பானாக!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸ்லாமியக் கொள்கை பற்றிய சுருக்கமான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)

முன்னுரை

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவனைப் போற்றி, அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே பாவமன்னிப்புக்கோரி மீளுகிறோம், எமது உள்ளங்களின் தீங்குகளிருந்தும், செயல்களின் தீங்குகளிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பை தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அவன் வழிதவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையாளருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். மற்றும், முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனின் அடியாரும் திருத்தூதருமாவார் எனவும் நான் சான்று பகர்கிறேன். நபியவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் மறுமை நாள்வரை அவர்களை நல்ல முறையில் பின்பற்றி நடப்போர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் ஸலாதும் அவனின் ஸலாமும் உண்டாவதாக.

நிச்சயமாக ஓரிறைக் கொள்கை பற்றிய அறிவுதான் அனைத்து அறிவுகளிலும் மிகச் சிறந்ததாகும், மதிப்பு மிக்கதாகும், வேண்டப்படுவதில் மிக அவசியமானதுமாகும். ஏனெனில் அது அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகள், மற்றும் அடியார்கள் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அறிவதோடு சம்பந்தப்படுகிறது, அதுமாத்திரமின்றி இது அல்லாஹ்வின் பக்கம் செல்வதற்கான திறவுகோலாகவும், அவனது மார்க்க சட்டதிட்டங்களின் அஸ்திவாரமாகவுமுள்ளது.

இதனால்தான் அனைத்து இறைத்தூதர்களும் அதன்பால் அழைப்பு விடுப்பதில் ஒருமித்திருந்தனர். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ25﴾

“நிச்சயமாக விஷயமாவது, என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” (அல்அன்பியாஃ : 25)

தான் தனித்தவனெனத் தனக்கு சான்று பகர்ந்துள்ளான், அவனது வானவர்களும் மற்றும் கல்வியாளர்களும் அவனுக்கு அதைக்கொண்டு சான்று பகர்ந்துள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ 18﴾

நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஆல இம்ரான் : 18)

ஓரிறைக்கொள்கையின் இம்மகத்தான நிலையை உணர்ந்து ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைத் தூய்மையான அஸ்திவாரம், மன அமைதி, முழுமையான அடிபணிதல் போன்ற அம்சங்களின் மீது கட்டியெழுப்புவதற்காக அதனை (தௌஹீதை) கற்பதும், கற்பிப்பதும், சிந்திப்பதும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது, அப்போதுதான் அதன் உயரிய முடிவுகள், அதனால் கிடைக்கும் பலாபன்கள் மூலம் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்வுற முடியும்.

எல்லா விடயங்களிலும் நல்லதை தெரிவு செய்து ஈடேற்றத்தை அடைந்து கொள்ள உதவியாளனாய் அல்லாஹ்வே உள்ளான்.

நூலாசிரியர்.

இஸ்லாமிய மார்க்கம்

இஸ்லாமிய மார்க்கம் : அல்லாஹ் இதனை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுத்தனுப்பி, இதன் மூலம் அனைத்து மதங்களுக்கும் முற்றுப் புள்ளிவைத்தான், தனது அடியார்களுக்கு அதனை முழுமைப்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு அருட்கொடைகளைப் பூரணமாக்கி, அதனை அவர்களுக்கு மார்க்கமாகவும் பொருந்திக்கொண்டான். எனவே, இதுவன்றி வேறெந்த மதத்தையும் யாரிடமிருந்தும் அவன் ஏற்க மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا 40﴾

முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அஹ்ஸாப் : 40)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ...﴾

இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். (மாஇதா : 3).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُ...﴾

நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்... (ஆல இம்ரான் : 19)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ85﴾

இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார். (ஆல இம்ரான் : 85)

இம்மார்க்கத்தின் அடிப்படையில் வாழுவதையே அல்லாஹ் அனைத்து மக்கள் மீதும் கடமையாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்களை விழித்து பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான் :

﴿قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡ جَمِيعًا ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ 158﴾

(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்! (அஃராப் : 158)

முஸ்லிமின் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

«وَالَّذِي ‌نَفْسُ ‌مُحَمَّدٍ ‌بِيَدِهِ ‌لَا ‌يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ».

முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்"1.

அன்னாரை நம்புவது என்பது வெறும் நம்பிக்கையுடன் மாத்திரமின்றி ஏற்றுக்கொள்ளல், கட்டுப்படலுடன் கூடிய நம்பிக்கையாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தி, அதுதான் சிறந்த மார்க்கம் என சாட்சி கூறியும் கூட அபூதாலிப் முஃமினாக இருக்கவில்லை.

இஸ்லாமிய மார்க்கம் முன்னைய மதங்கள் கொண்டிருந்த அனைத்து நலன்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், அனைத்து காலம், இடம், சமூகத்திற்கும் இது பொருத்தமான மார்க்கம் என்ற வகையில் பிற மதங்களை விட்டும் இது தனித்து நிற்கின்றது. அல்லாஹ் தனது தூதரரை விழித்து பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِ...﴾

இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது... (அல் மாஇதா : 48).

அனைத்து காலம், இடம், சமூகத்திற்கும் இது பொருந்தும் என்பதன் அர்த்தம், இதனைப் பின்பற்றுவது எக்காலத்திலும், எவ்விடத்திலும் சமூகத்தின் நலன்களுக்கு முரணாகாது, மாறாக அதைப்பின்பற்றுவதில்தான் அவர்களுக்கு நலன் இருக்கிறது, சிலர் நினைப்பது போன்று அனைத்து காலம், இடம், சமூகத்திற்கும் இது வளைந்து கொடுக்கும் என்பது அர்த்தமில்லை.

இஸ்லாமிய மார்க்கம் : அதனை உண்மையாகப் பற்றிப்பிடித்தோருக்கு அல்லாஹ் உதவுவதாகவும், ஏனையோரை விட மிகைக்கச் செய்வதாகவும் பொறுப்பேற்றுள்ளான். அல்லாஹ் கூறுகிறான் :

﴿هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ 9﴾

அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே! (அஸ்ஸஃப் : 9).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡـٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ 55﴾

உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள். (அந்நூர் : 55)

இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள் இரண்டையும் உள்ளடக்கியதாகும். அது தனது அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள் இரண்டிலும் முழுமையானதாகும் :

1. ஓரிறைக் கொள்கையை ஏவி, இணைவைப்பைத் தடுக்கின்றது.

2. உண்மையை ஏவி, பொய்யைத் தடுக்கின்றது.

3. நீதியை ஏவி, அநீதியைத் தடுக்கின்றது. நீதம் என்பது ஒரே மாதிரியானவற்றுக்கு மத்தியில் சமநிலையை கடைப்பிடிப்பதும், வேறுபாடானவற்றுக்கு மத்தியில் வித்தியாசப்படுத்திப் பார்ப்பதுமாகும். இஸ்லாம் சமத்துவத்தின் மார்க்கம் என்று கூறும்போது, சிலர் கூறுவது போல் அது பொதுப்படையான சமத்துவம் என விளங்குவது நீதமல்ல, ஏனெனில் வேறுபாடுள்ளவற்றுக்கு மத்தியில் சமத்துவப்படுத்துவது இஸ்லாம் காட்டாத அநீதியாகும். அவ்வாறு செய்பவர் பாராட்டுக்குரியவரும் அல்லர்.

4. அமானிதத்தை ஏவி, துரோகத்தைத் தடுக்கின்றது.

5. வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஏவி, மோசடியைத் தடுக்கின்றது.

6. பெற்றோருக்கு உபகாரம் செய்வதை ஏவி, அவர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கின்றது.

7. உறவினர்களுடன் சேர்ந்து நடக்குமாறு ஏவி, உறவைத் துண்டிப்பதைத் தடுக்கின்றது.

8. அயலவர்களை உபசரிப்பதை ஏவி, அவர்களுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது.

சுருங்கக் கூறின் : இஸ்லாம் அனைத்து நற்குணங்களையும் ஏவி, அனைத்து தாழ்ந்த குணங்களை விட்டும் தடுக்கின்றது. அனைத்து நற்செயல்களையும் ஏவி, அனைத்து தீய செயல்களையும் தடுக்கின்றது.

அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ 90﴾

நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான். (அந் நஹ்லு: 90).

இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள் : இஸ்லாம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அடிப்படைகள் ஐந்தாகும் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்ததில் குறிப்பிடப்பட்டதாவது: அவர் கூறினார்கள்:

«بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةٍ: عَلَى أَنْ يُوَحِّدَ اللَّه - وَفِي رِوَايَةٍ عَلَى خَمْسٍ -: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصِيَامِ رَمَضَانَ، وَالْحَجِّ».

''இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: அல்லாஹ்வை ஒருவனாகக் கொள்ளுதல் —உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல், தொழுகையை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், ரமழானில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல்.'' அதற்கு ஒரு மனிதர், “ஹஜ்ஜு மற்றும் ரமழான் நோன்பு?” எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள்:

«لَا، صِيَامُ رَمَضَانَ، وَالْحَجُّ».

“இல்லை, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல், மற்றும் ஹஜ் செய்தல்.” என்று  இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுவதை நான் செவிமடுத்தேன். (2).2

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்- முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் சான்று பகர்தல் என்பது இச்சாட்சியத்தை நாவினால் வெளிப்படுத்தும் விதத்திலான உறுதியான நம்பிக்கையாகும். இதனை உறுதியாக அவர் நம்புவதன் மூலம் அதனைக் காண்பவர் போன்றாகும். சான்று பகர வேண்டியவை இரண்டிருந்தும் இதனை ஒரே கடமையாக ஆக்கப்படக் காரணம் :

ஒன்றிருக்கில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து எத்திவைப்பவர்கள், எனவே அன்னார் அவனது அடிமை, தூதர் என சாட்சியம் கூறுவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுவதன் முழு வடிவம் என்பதற்காகவாகும்.

அல்லது இவ்விரு சாட்சியங்களும்தான் நற்செயல்கள் செல்லுபடியாகி, ஏற்கப்பட அடிப்படையாகும். ஏனெனில் அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடனும், நபிவழிக்கு உடன்பாடாகவும் செய்யப்படாத எந்தவொரு நற்செயலும் செல்லுபடியாகவோ, ஏற்கப்படவோ மாட்டாது.

அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செய்யப்படும் போது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற சாட்சியம் உறுதியாகிறது, நபிவழிக்கு உடன்படும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் ஆவார்கள் என்ற சாட்சியம் உறுதியாகிறது.

படைப்பினங்களுக்கு அடிமையாகுவதிலிருந்தும், இறைத்தூதர்கள் அல்லாதோரைப் பின்பற்றுவதிலிருந்தும் உள்ளத்தையும், ஆன்மாவையும் விடுவிப்பது இந்த மகத்தான சாட்சியத்தின் பயன்களில் உள்ளதாகும்.

2. தொழுகையை நிலைநாட்டுதல் : இது தொழுகையை உரிய நேரத்தில், உரிய விதத்தில் தொடர்ந்து பூரணமாக நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

உள்ளம் விரிவடைதல், கண்குளிர்ச்சி, மானக்கேடான, தீய செயல்களைத் தடுத்தல் போன்றன இதன் பயன்களில் உள்ளதாகும்.

3. ஸகாத் வழங்கல் : இது ஸகாத் விதியாகும் குறித்த சொத்துக்களில் இருந்து கடமையானளவு செலவு செய்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

கஞ்சத்தனம் போன்ற இழி குணங்களை விட்டும் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல், இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் தேவைகளை நிறைவேற்றல் போன்றன இதன் பயன்களில் உள்ளதாகும்.

4. ரமழான் மாதம் நோன்பு நோற்றல் : இது ரமழான் மாத பகல் வேளையில் நோன்பை முறிக்கும் விடயங்களை விட்டும் தடுத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நோக்கில், மனதுக்கு விருப்பமான அனுமதிக்கப்பட்டவற்றைக்கூட விட்டுவிட உள்ளத்தைப் பயிற்றுவித்தல் இதனால் கிடைக்கும் பயன்களில் ஒன்றாகும்.

5. அல்லாஹ்வின் மாளிகையை ஹஜ் செய்தல் : இது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக புனித கஃபாவை நாடிச் செல்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் உடல், பொருள் ரீதியாக செலவு செய்ய உள்ளத்தைப் பயிற்றுவித்தல் இதனால் கிடைக்கும் பயன்களில் ஒன்றாகும். இதனால்தான் ஹஜ் அல்லாஹ்வின் பாதையில் மேற்கொள்ளப்படும் அறப்போரின் ஒரு வகையாக உள்ளது.

இந்த அடிப்படைகளுக்கான நாம் கூறிய, கூறாத பயன்பாடுகள் தூய்மையான, பரிசுத்தமான, சத்திய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய, படைப்பினங்களுடன் நீதி, நேர்மையுடன் நடக்கக்கூடிய ஒரு இஸ்லாமிய சமுதாயமாக மனித சமூகத்தை மாற்றுகின்றன. ஏனெனில், இந்த அடிப்படைகள் சீராகுவதின் மூலம் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் ஏனைய அம்சங்கள் சீராகின்றன, இச்சமூகத்தின் நிலமைகள் அதன் மார்க்க விடயங்கள் சீராவதன் மூலம் சீராகும். மார்க்க விடயங்களில் ஏற்படும் குறைகளின் அளவு அச்சமூகத்தின் நிலமைகளிலும் குறைகள் ஏற்படும்.

இதனைத் தெளிவாக விளங்க விரும்புவோர் பின்வரும் இறைவசனத்தை ஓதிப்பார்க்கவும் :

﴿وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ 96 أَفَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا بَيَٰتٗا وَهُمۡ نَآئِمُونَ 97 أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ98 أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ 99﴾

இன்னும், ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ நமது தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (தண்டனையால்) அவர்களைப் பிடித்தோம்.

ஆக, ஊர்வாசிகள், - அவர்களோ தூங்கியவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு இரவில் வருவதை - அச்சமற்று விட்டார்களா? (97)

அல்லது, ஊர்வாசிகள், - அவர்களோ விளையாடுபவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை - அச்சமற்று விட்டார்களா? 98

ஆக, அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்று விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, அல்லாஹ்வின் சூழ்ச்சியை யாரும் அச்சமற்று இருக்க மாட்டார்கள்,. 99 (அல்அஃராப் : 96-99).

மேலும் முன்சென்றோரின் வரலாற்றைப் படிக்கவும், ஏனெனில் வரலாறு புத்தியுள்ளோருக்குப் படிப்பினையாகும். மேலும், யாருடைய இதயம் திரையால் மூடப்படவில்லையோ, அவர்களுக்கு தெளிவான நுண்ணறிவுமாகும். அல்லாஹ்வே போதுமானவன்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள்

நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியது போன்று இஸ்லாமிய மார்க்கம் அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள் இரண்டையும் உள்ளடக்கியதாகும். அதன் சட்டதிட்டங்களில் சிலதை சுட்டிக்காட்டி அதன் அடிப்படைகளாகக் கணிக்கப்படும் பிரதான தூண்களையும் கூறினோம்.

இஸ்லாமிய (அகீதா) கொள்கையின் பிரதான அடிப்படை விடயங்கள் : அல்லாஹ்வையும், அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், நன்மை தீமை அனைத்தும் அவனின் ஏற்பாட்டில்தான் என்ற விதியையும் நம்பிக்கை கொள்வதாகும்.

இந்த அடிப்படைகள் பற்றி அல்குர்ஆன், ஸுன்னா இரண்டிலும் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகின்றான் :

﴿لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ...﴾

நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்... (அல்பகரா : 177). விதி பற்றி பின்வருமாறு கூறுகின்றான் :

﴿إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ 49 وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ 50﴾

நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.

(“ஆகு” என்று நாம் கூறுகின்ற) ஒற்றை வார்த்தையைத் தவிர நமது கட்டளை இல்லை, (நாம் எதை கட்டளையிட்டோமோ அது உடனே ஆகிவிடும்) கண் சிமிட்டுவதைப் போல்.(50) (அல்கமர் : 49, 50).

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஈமான் பற்றிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது :

«الْإِيمَانُ: أَنْ تُؤْمِنَ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ: خَيْرِهِ وَشَرِّهِ».

ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், மேலும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்பபடியே நடைபெறும் என்பதையும் விசுவாசம் கொள்வதாகும்"3.

அல்லாஹ்வை நம்புதல் ( ஈமான் கொள்ளுதல்)

அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல் நான்கு விடயங்களை உள்ளடக்குகின்றது :

முதலாவது வியடம் : அல்லாஹ்வின் இருப்பை நம்புதல் :

இயற்கை சுபாவம், பகுத்தறிவு, மார்க்கம், உணர்வு ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் இருப்பை அறிவிக்கின்றன.

அல்லாஹ்வின் இருப்பை இயற்கை உணர்வு அறிவிக்கும் முறையானது : ஒவ்வொரு படைப்பும் சிந்திக்காமல், கற்றுக்கொல்லாமல் அவற்றை படைத்த ஒருவன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ளும் சுபாவத்திலேயே படைக்கப் பட்டுள்ளன. அவ்வுள்ளங்களில் இயற்கைச்சுபாவத்திற்கு மாற்றமான சிந்தனைகள் ஊடுருவாத வரை அவை அந் நம்பிக்கையிலே வளர்கின்றன. இதற்கு ஆதாரமாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது. நபியவர்கள் கூறினார்கள்

«‌مَا ‌مِنْ ‌مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ».

«பிறக்கும் எந்தப் பிள்ளையும் இஸ்லாத்தை ஏற்கும் இயல்பிலேயே பிறக்கின்றது, அதன் பெற்றோர்களே யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர்»4.

2- (தற்போதுள்ள) இந்தப் படைப்புகள், முன் உண்டான படைப்புகள், இதற்கு பின்னர் படைக்கப்பட இருப்பவைகள் அனைத்திற்கும் படைத்தவன் ஒருவன் இருப்பது அவசியமே, ஏனெனில் எந்த ஒரு பொருளும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளவோ அல்லது இயற்கையாகத் திடீரென உண்டாகவோ முடியாது.

ஏனெனில் எந்தவொன்றும் தன்னைத் தானே உருவாக்க முடியாது; ஏனெனில் எந்தவொன்றும் தன்னைத் தானே படைக்காது; அது உருவாக முன் இல்லாமை என்ற நிலையிலிருந்து கொண்டு எவ்வாறு படைப்பாளனாக மாற முடியும்?!

இயற்கையாகத் திடீரென உருவாகவும் முடியாது, ஏனெனில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு பொருளுக்கும் உருவாக்குபவன் ஒருவன் அவசியம் என்பது நியதியாகும். இந்த அற்புதமான ஒழுங்கில், பொருத்தமான இணக்கமாக அமைந்துள்ள அதன் இருப்பு, காரண காரணிகளுக்கிடையிலும், உயிரினங்களில் ஒன்றுக்கொன்றுக்கு இடையிலும் உள்ள ஒத்திசைவான இணைப்பு அவற்றின் இருப்பு ஒரு தற்செயலாக உருவான இயற்கை நிகழ்வாக இது இருப்பதை அடியோடு மறுக்கின்றன, ஏனெனில் எதேச்சையாக உருவான ஒன்று அதன் உருவாக்கத்திலேயே ஒரே ஒழுங்கிலில்லாத பட்சத்தில் அது தொடர்ந்து நிலைத்து, முன்னேற்றமடையும் போது ஒரே ஒழுங்கில் எவ்வாறு இருக்க முடியும்?!

இந்தப் படைப்புகள் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளவோ அல்லது இயற்கையாகவே உண்டாகவோ முடியாது எனும் போது அவற்றை உருவாக்கிய ஒருவன் இருந்தே ஆக வேண்டுமென்பது அவசியமாகிறது. அவன்தான் அகிலத்தாரைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வாகும்.

ஸூரா தூரில் இதற்கான பகுத்தறிவு ரீதியான, உறுதியான ஆதாரத்தைக் கூறியுள்ளான் :

﴿أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ 35﴾

ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா? (அத்தூர் : 35) அதாவது படைப்பாளனின்றி அவர்கள் படைக்கப்படவுமில்லை, தம்மைத் தாமே அவர்கள் படைத்துக் கொள்ளவுமில்லை, எனவே அவர்களைப் படைத்தவன் அல்லாஹ்தான் என்பது உறுதியாகி விட்டது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ஸூரா தூரை ஓதும் போது செவிமடுத்துக் கொண்டிருந்த ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள்:

﴿أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ 35 أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ 36 أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ 37﴾

ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா?

இவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்களோ படைக்கப்பட்டவர்கள், படைப்பவர்கள் அல்ல. பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கிறார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். (39)

இவர்களிடம் உமது இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது, இவர்கள் (அல்லாஹ்வை) அடக்கி கட்டுப்படுத்தி வைப்பவர்களா? (அத்தூர் : 35-37)

இணைவைப்பாளராக இருந்த ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : எனது இதயம் பறந்து விடும் போலிருந்தது, அதுதான் முதன்முதலில் எனது உள்ளத்தில் ஈமான் பதிந்த சந்தர்ப்பமாகும் (5)5

இதனைத் தெளிவுபடுத்தும் உதாரணமொன்றைக் கவனிப்போம் : தோட்டங்கள் சூழ்ந்துள்ள, இடையே ஆறுகள் ஓடக்கூடிய, பலவித கட்டில்கள், விரிப்புகள் நிரப்பப்பட்டுள்ள, தேவையான, முழுமைப்படுத்தக்கூடிய அத்தனைவித அலங்காரங்களாலும் அலங்கரிக்கப் பட்ட ஓர் அரண்மனையைப் பற்றி ஒருவர் கூறுகின்றார் என வைத்துக் கொள்வோம், இந்த மாளிகை, மற்றும் அதிலுள்ள அனைத்து அலங்காரங்களும் தம்மைத்தாமே உருவாக்கிக்கொண்டன, அல்லது உருவாக்கியவனின்றி தற்செயலாகவே உருவாகின என அவர் உம்மிடம் கூறினால் உடனடியாக அதனை மறுத்து, அவரைப் பொய்ப்பித்து விடுவீர், அறிவீனமான கூற்றாக இதனைக் கணிப்பீர். இதற்கும் பின்னரும், வானம், பூமி, கோள்கள், பிரமிக்க வைக்கும் அற்புதமான ஒழுங்குடன் கூடிய இப்பிரமாண்டமான பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளவோ, அல்லது தற்செயலாக உருவாகவோ முடியுமா?!

3. அல்லாஹ்வின் இருப்பை மார்க்கம் அறிவிக்கும் முறையானது : அனைத்து இறைவேதங்களும் அதனைக் கூறுகின்றன. அவை கொண்டு வந்த படைப்பினங்களின் அனைத்து நலன்களையும் உள்ளடக்கிய, நீதமான சட்டதிட்டங்களாவன, தனது படைப்பினங்களின் தேவைகளை மிக அறிந்த, மதிநுட்பமுள்ள இரட்சகனிடமிருந்துதான் அவை வந்துள்ளன என்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கின்றன. மேலும் நம் கண்களால் காணும் யதார்த்தம் உண்மையென சாட்சி சொல்லும் இவ்வேதங்கள் கூறியுள்ள உலக செய்திகளும், தான் அறிவித்துள்ள விடயங்களை உருவாக்க சக்தியுள்ள இரட்சகனிடமிருந்துதான் அவை வந்துள்ளன என்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கின்றன.

4. உணர்வுகளும் இறைவன் ஒருவன் உள்ளான் என்பதற்கு சான்றாக இரண்டு விதங்களில் அமைகின்றன :

முதலாவது : பிராத்திப்பவனின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவது, கஷ்டத்திற்குள்ளானவர்களுக்கு உதவியளிக்கப்படுவது போன்ற விடயங்களை நாம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம். இவையும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை திட்டவட்டமாக எமக்குணர்த்தவே செய்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ...﴾

இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக! அவர் இதற்கு முன்னர் (நம்மை) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து... (அல்அன்பியாஃ : 76). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ...﴾

உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்... (அல்அன்பால் : 9).

ஸஹீஹ் புஹாரி நூலில், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«إنَّ أعرابيًّا دَخَلَ يَوْمَ الجُمُعَةِ -والنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ يَخْطُبُ- فقالَ: يا رسُولَ اللَّهِ، هَلَكَ المَالُ، وجَاعَ العِيَالُ، فَادْعُ اللَّهَ لنَا؛ فَرَفَعَ يَدَيْهِ ودَعَا، فَثَارَ السَّحَابُ أمثَالَ الجِبَالِ، فَلَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حتَّى رَأَيْتُ المَطَرَ يَتَحَادَرُ عَنْ لِحْيَتِهِ».

ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி நுழைந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன, குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி பிரார்த்தித்தார்கள், அப்போது மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பார்த்தேன்.6

மறு ஜும்ஆவில் அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன, செல்வங்கள் மூழ்குகின்றன; எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி கூறினார்கள் :

«اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا».

((யா அல்லாஹ்! இந்த மழையை எங்களுக்கு சாதகமானதாக்கி எங்கள் சுற்றுப் புறங்களில் பொழியச் செய்வாயாக!)) அவர்கள் சுட்டும் எந்தத் திசையிலும் (மேகங்கள்)  நீங்கிவிடும்7.

அல்லாஹ்விடம் உண்மையாக ஒதுங்கி, பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகளைப் பேணி பிரார்த்திப்போருக்கு பதிலளிக்கப்படுவதை இன்றும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இரண்டாவது : நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட முஃஜிஸாத் எனும் அற்புதங்கள், இவற்றை அப்போதைய மக்கள் கண்டார்கள், கேள்விப்பட்டுமிருக்கிறார்கள். இது போன்ற தெளிவான அத்தாட்சிகள் அவற்றை அனுப்பிய அல்லாஹ் இருக்கிறான் என்பதை எமக்குணர்த்தச்செய்கின்றன. ஏனெனில் இவை மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன, நபிமார்களைப் பலப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்யவே இவற்றை அல்லாஹ் நிகழ்த்திக்காட்டுகிறான்.

உதாரணமாக, மூஸா (அலை) அவர்களுக்கு தனது தடியால் கடலில் அடிக்குமாறு அல்லாஹ் பணித்த போது அது பன்னிரண்டு வரண்ட பாதைகளாகப் பிளந்த அத்தாட்சியைக் கூறலாம். ஒவ்வொரு பாதைக்கும் இடையே தண்ணீர் மலை போன்று உயரத்தில் இருந்தது. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ 63﴾

ஆக, “உமது தடியினால் கடலை அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஆக, ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது. (அஷ்ஷுஅரா : 63).

மற்றுமோர் உதாரணம் : ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியின்படி மரித்தவர்களை உயிர்ப்பித்து, மண்ணறைகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அத்தாட்சியையும் கூறலாம். இது பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ...﴾

மரணித்தோரையும் அல்லாஹ்வின் அனுமதியினால் உயிர்ப்பிப்பேன். (ஆல இம்ரான் : 49) மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿...وَإِذۡ تُخۡرِجُ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِيۖ...﴾

...இன்னும், என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து உயிருடன்) வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக!... (அல்மாஇதா : 110).

மூன்றாவது உதாரணம் : முஹம்மத் (ஸல்) அவர்களிடம் குரைஷியர் அற்புதமொன்றை நிகழ்த்திக் காட்டுமாறு கோரிய போது அன்னார் சந்திரனைச் சுட்டிக்காட்டினார்கள், அது இரண்டாகப் பிளந்தது, மக்களும் அதனைக் கண்டனர். இது பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

﴿ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ 1 وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ2﴾

மாலை நேரம் நெருங்கிவிட்டது, சந்திரன் பிளந்துவிட்டது. அவர்கள் ஒரு அடையாளத்தைப் பார்த்தால், அதை மறுத்து, "இது தொடர்ச்சியான மாயை" என்று கூறுவார்கள். (அல்கமர் : 1, 2).

தனது தூதர்களைப் பலப்படுத்தவும், அவர்களுக்கு உதவவும் அல்லாஹ் நிகழ்த்திக்காட்டிய இந்த உணர முடியுமான அத்தாட்சிகள் அல்லாஹ்வின் இருப்பை உறுதியாக அறிவித்து நிற்கின்றன.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உட்பொதிந்துள்ள இரண்டாவது விடயம் : அவனது பரிபாலணத்துவத்தை நம்புதலாகும், அதாவது படைத்துப் பரிபாலிப்பவன் அவன் ஒருவன் மாத்திரம்தான், அதில் அவனுக்கு இணையாளனோ, துணையாளனோ இல்லை என நம்பிக்கை கொள்ளலாகும்.

ரப்பு எனும் அரபு வார்த்தை படைப்பாற்றல், அதிகாரம், கட்டளை பிரப்பித்தல் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒருவனுக்கே பயன்படுத்தப்படும். எனவே படைப்பாளன் அவனைத்தவிர யாருமில்லை, ஆட்சியதிகாரமுள்ளவன் அவனைத்தவிர யாருமில்லை, அவனுக்கே கட்டளை பிரப்பிக்கும் முழு அதிகாரம் உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ...﴾

அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. (அல்அஃராப் : 54) மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿...ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا يَمۡلِكُونَ مِن قِطۡمِيرٍ﴾

(இவற்றை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய) அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள் (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (தானிய கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள். (ஃபாதிர் : 13).

பெருமையடித்து, தான் கூறுவதை உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாதவனைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் பரிபாலணக் கோட்பாட்டை மறுத்ததாக வரலாற்றில் அறியப்படவில்லை, பிர்அவ்ன் தனது சமூகத்திற்கு கூறியபோது நிகழ்ந்ததுபோல்:

﴿فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ 24﴾

இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான். (24) (அந்நாஸிஆத் : 24), மேலும் அவன் கூறினான்:

﴿...يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ مَا عَلِمۡتُ لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرِي...﴾

“முக்கிய பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுளை உங்களுக்கு நான் அறியமாட்டேன்.” (அல்கஸஸ் : 38), ஆனால், அது உள்ளத்தால் நம்பிக் கூறிய ஒன்றல்ல. அல்லாஹுத் தஆலா கூறுகிறான்

﴿وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ...﴾

(அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன.) (அந் நம்லு : 14). மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னுக்குக் கூறியதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿...لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا﴾

(மூஸா) கூறினார்: “வானங்கள் மற்றும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்துள்ளாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக கருதுகிறேன்”. (அல்இஸ்ராஃ : 102), இதனால்தான் மக்கா நகர் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் இறைமையில் அவனுக்கு இணைவைக்கும் நிலையிலும், அவனது பரிபாலணக் கோட்பாட்டை ஏற்கக்கூடியவர்களாக இருந்தனர். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ 84 سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ85 قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ 86 سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ 87 قُلۡ مَنۢ بِيَدِهِۦمَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ 88 سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ 89﴾

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: பூமியும் அதில் உள்ளவர்களும் யாருக்கு உரிமையானவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்)! அவர்கள் கூறுவார்கள்: 'அல்லாஹ்வுக்கே'. (நபியே!) கூறுவீராக: நீங்கள் நினைவுகூராதவர்களா? (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ஏழு வானங்களின் இறைவனும், மகத்தான அர்ஷின் இறைவனும் யார்? அவர்கள் கூறுவார்கள்: 'அல்லாஹ்வுக்கே'. (நபியே!) கூறுவீராக: நீங்கள் பயப்படாதவர்களா? (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: யாருடைய கையில் எல்லாவற்றின் ஆட்சி இருக்கிறது? அவர் பாதுகாப்பளிக்கிறார், ஆனால் அவருக்கு எதிராக யாரும் பாதுகாப்பளிக்க முடியாது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்)! அவர்கள் கூறுவார்கள்: 'அல்லாஹ்வுக்கே'. (நபியே!) கூறுவீராக: நீங்கள் எப்படி மாயைப்பட்டு செல்கிறீர்கள்? (அல்முஃமினூன் : 84-89).

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ 9﴾

வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்: (அஸ்ஸுஃஹ்ருப் : 9)

மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ 87﴾

அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்! (அஸ்ஸுஹ்ருப் : 87)

அல்லாஹ்வின் கட்டளை என்பது உலக, மற்றும் மார்க்க கட்டளைகள் அனைத்தையும் உள்ளடக்கக்கூடியதாகும், அவன் பிரபஞ்சத்தை நிர்வகித்து, அதில் தான் நாடியதைத் தனது மதிநுட்பத்திற்கு ஏற்ப தீர்மானிப்பது போன்றே, அவன் தனது மதிநுட்பத்திற்கு ஏற்ப வணக்க வழிபாடுகள், கொடுக்கல், வாங்கல் சட்டங்களையும் தீர்ப்புச் செய்பவனாக உள்ளான். அல்லாஹ்வுடன் வணக்கங்களை உருவாக்கக் கூடிய, கொடுக்கல் வாங்கல் சட்டங்களைத் தீர்மானிக்கக் கூடிய வேறொருவரை யார் எடுக்கின்றாரோ அவர் ஈமானை முறையாக நிலைநாட்டாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவறாகின்றார்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உட்பொதிந்துள்ள மூன்றாவது விடயம் : அவனது இறைமையை நம்புதலாகும், அதாவது அவன் ஒருவன்தான் உண்மையான வணங்கப்படத் தகுதியானவன், அவனுக்கு எந்த இணையாளனும் கிடையாது என்பதாகும். இலாஹ் எனும் அரபு வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ் நேசத்துடனும், கண்ணியத்துடனும் வணங்கப்படக் கூடியவன் என்பதாகும்.

அல்லாஹுத் தஆலா கூறுகிறான்

﴿وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ 163﴾

இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அல்பகரா: 163) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ 18﴾

நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.(18) (ஆல இம்ரான் : 18). அல்லாஹ்வுடன் அவனல்லாது வணங்கப்படுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து கடவுள்களின் இறைமையும் பொய்யான இறைமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ 62﴾

அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். (அல் ஹஜ் : 62) அவற்றுக்கு கடவுள்கள் எனப்பெயர் சூட்டுவதால் மாத்திரம் அவற்றுக்கு உண்மையான இறைமையை வழங்கிடாது. லாத், உஸ்ஸா, மனாத் போன்ற அவர்களுடைய கடவுள்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ...﴾

இவை எல்லாம் (வெறும்) பெயர்களாகவே தவிர (உண்மை) இல்லை. இந்த பெயர்களை நீங்களும் உங்கள் மூதாதைகளும் (இந்த சிலைகளுக்கு) சூட்டினீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு ஆதாரம் எதையும் இறக்கவில்லை. (அந்நஜ்ம் : 23).

ஹூத் (அலை) தனது சமூகத்திற்குக் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ...﴾

நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! (அல்அஃராப் : 71).

யூஸுப் (அலை) சிறைத் தோழர்கள் இருவருக்கும் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான் :

﴿يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ ءَأَرۡبَابٞ مُّتَفَرِّقُونَ خَيۡرٌ أَمِ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ 39 مَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ...﴾

என் சிறைத் தோழர்களே! (பலவீனமான) பலதரப்பட்ட தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது, (நிகரற்ற) ஒரே ஒருவனான (அனைவரையும்) அடக்கி ஆளுபவனான அல்லாஹ் மேலானவனா? நீங்கள் அவனைத் தவிர வணங்குவதெல்லாம் நீங்கள் மற்றும் உங்கள் பிதாக்கள் பெயரிட்ட பெயர்களே; அல்லாஹ் அவற்றுக்கு எந்த அதிகாரத்தையும் அருளவில்லை... (யூஸுப் : 39, 40).

இதனால்தான் இறைத்தூதர்கள் தமது சமூகத்திற்குப் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் :

﴿...ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُ...﴾

அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. (அல்அஃராப் : 59) இருப்பினும் இணைவைப்பாளர்கள் அதனை மறுத்து, அல்லாஹ்வுடன் அவனல்லாதோரை வணங்கி உதவியும் பாதுகாப்பும் தேடும் கடவுல்களை எடுத்துக் கொண்டனர்

இணைவைப்பாளர்கள் தங்கள் கடவுள்களாக இவற்றை எடுத்துக் கொண்டதை இரண்டு பகுத்தறிவு ஆதாரங்களின் மூலம் அல்லாஹ் பொய்ப்பித்துள்ளான் :

முதலாவது : அவர்கள் எடுத்துக் கொண்ட இந்தக் கடவுள்களிடம் இறைமைக்குரிய எந்தவொரு சிறப்பம்சங்களும் இல்லை, இவை படைக்கப்பட்டவையே தவிர படைக்கக் கூடியவையல்ல, தம்மை வணங்குவோருக்கு எந்த பயனையும் அளிக்கவும் முடியாது, எந்தத் தீங்கையும் தடுக்கவும் முடியாது, அவர்களுக்கு உயிர்கொடுக்கவோ, மரணிக்கச் செய்யவோ முடியாது, வானங்களில் உள்ள எதுவும் அவர்களுக்கு சொந்தமுமில்லை, அதில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை.

அல்லாஹுத் தஆலா கூறுகிறான் :

﴿وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا 3﴾

அ(ந்த இணைவைப்ப)வர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை (வழிபாடுகளுக்கு) ஏற்படுத்திக் கொண்டனர். அந்த கடவுள்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) செய்யப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் சக்தி பெற மாட்டார்கள். இன்னும், (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (அல் ஃபுர்கான் : 3).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ مِثۡقَالَ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَمَا لَهُمۡ فِيهِمَا مِن شِرۡكٖ وَمَا لَهُۥ مِنۡهُم مِّن ظَهِيرٖ 22 وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنۡ أَذِنَ لَهُۥ...﴾

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி (தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். இன்னும், அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளராக இல்லை. அவன் அனுமதித்தவர்களைத் தவிர, அவனிடம் பரிந்துரைகள் பயனளிக்காது, (ஸபஃ : 22,23)

وقال تعالى: ﴿أَيُشۡرِكُونَ مَا لَا يَخۡلُقُ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ 191 وَلَا يَسۡتَطِيعُونَ لَهُمۡ نَصۡرٗا وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ 192﴾

எந்த ஒரு பொருளையும் படைக்காதவர்களை (அவனுக்கு) இணையாக்(கி வணங்)குகிறார்களா? (வணங்கப்படும்) அவர்களோ படைக்கப்படுகிறார்கள். (அவர்கள் எதையும் படைக்கவில்லை.) அவர்களுக்கு உதவ முடியாது, தமக்குத் தாமே உதவ முடியாது. (அல்அஃராப் : 191-192).

அக் கடவுள்களின் நிலையே இதுவென்றால், அவற்றைக் கடவுள்களாக எடுப்பது எவ்வளவு பெரிய அறிவீனமாகவும் பொய்யாகவும் இருக்கிறது!

இரண்டாவது : இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் ஒருவன் மாத்திரம்தான் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகன், அவனிடமே அனைத்து வஸ்த்துக்களின் அதிகாரமும் உண்டு, அவன்தான் பாதுகாப்பவன், அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை என்பவற்றை ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்கள். இது அவர்கள் அல்லாஹ்வின் பரிபாலனத்தில் அவனை ஒருமைப்படுத்தியது போன்றே இறைமையிலும் அவனை ஒருமைப்படுத்துவதைக் அவர்களுக்குக் கட்டாயமாக்குகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ 21 ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ 22﴾

மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்.  அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச் செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்பகரா : 21,22)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ 87﴾

அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) எப்படி திருப்பப்படுகிறார்கள்! (அஸ்ஸுஹ்ருப் : 87)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ 31 فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ32﴾

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் உணவளிக்கிறான்? அல்லது, (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வான்? இன்னும், இறந்ததிலிருந்து உயிருள்ளதையும்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் உற்பத்தி செய்கிறான்? இன்னும், எல்லா காரியங்களையும் யார் திட்டமிட்டு நிர்வகிக்கிறான்?” ஆக, (அதற்கு பதிலில்), “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, நீர் கூறுவீராக: “ஆகவே, நீங்கள் அந்த அல்லாஹ்வை அஞ்சவேண்டாமா?” அதுவே உங்களுடைய உண்மையான இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பிறகு தவறுதலே தவிர வேறென்ன இருக்க முடியும்? ஆகவே, நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்? (யூனுஸ் : 31-32).

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உட்பொதிந்துள்ள நான்காவது விடயம் : அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை நம்புவதாகும்.

அதாவது, அல்லாஹ் தனக்கு எப்பெயர்களையும் பண்புகளையும் தனது அல்குர்ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இருப்பதாகக்கூறியுள்ளானோ அவற்றை அவனுக்குத்தகுந்த விதத்தில் அவ்வாறே ஈமான் கொள்வதாகும். அவற்றில் எவ்வித கருத்துமாற்றமோ, பாழ்படுத்தலோ, (அவற்றிற்கு) வடிவம் கொடுத்தலோ, உவமை கற்பித்தலோ செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்வது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ وَذَرُواْ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ أَسۡمَٰٓئِهِۦۚ سَيُجۡزَوۡنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ 180﴾

அல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்அஃராப் : 180). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ﴾

இன்னும், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத் தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான். (அர்ரூம் : 27) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ﴾

அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அஷ்ஷூரா : 11).

இவ்விடயத்தில் இரு பிரிவினர் வழிதவறிச் சென்றுள்ளனர் :

முதல் பிரிவினர் : (முஅத்திலாக்கள்) அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அவனுக்கு இருப்பதாகக் கூறுவது அவனைப் படைப்பினங்களுக்கு ஒப்பாக்குவதாக நினைத்து அவையனைத்தையுமோ, அல்லது சிலவற்றையோ மறுப்போர். இவ்வெண்ணம் பல விதங்களில் தவறாகும் :

1. இது அல்லாஹ்வின் வார்த்தையில் முரண்பாடுள்ளது போன்ற தவறான பாத்திரங்களை வேண்டி நிற்கின்றது, ஏனெனில் அல்லாஹ் தனக்கு பெயர்கள், பண்புகள் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளான். அவனைப் போன்று எப்பொருளும் இருப்பதையும் மறுத்துள்ளான். அப்பெயர்கள், பண்புகளை உறுதிப்படுத்துவது உவமையை ஏற்படுத்துமெனில் அல்லாஹ்வின் வார்த்தையில் முரண்பாடுள்ளதாகி விடும், ஒன்றையொன்று பொய்ப்பிப்பதாகவும் ஆகி விடும்.

2. பெயரிலோ, பண்பிலோ இரு பொருட்கள் ஒன்றுபட்டிருப்பதால் அவ்விரண்டும் யதார்த்தத்திலும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய, பேசக்கூடிய விடயங்களில் ஒன்றுபடும் இரு மனிதர்களை நீர் காண்கிறீர், இதன் மூலம் மனித பண்பங்களில், செவிமடுத்தல், பார்வை, பேச்சு என்பவற்றில் அவ்விருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

கைகள், கால்கள், கண்களைக் கொண்ட விலங்குகளையும் நீர் காண்கிறார், அவை மனிதனுடன் ஒன்றுபட்டிருப்பதால் அவற்றின் கைகள், கால்கள், கண்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை.

பெயர்கள், பண்புகளில் ஒன்றாக இருக்கும் படைப்பினங்களுக்கு மத்தியிலேயே வேற்றுமை தென்பட்டால் படைத்தவனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை மிக மிகத் தெளிவானது, பாரியது.

இரண்டாவது பிரிவினர் : (முஷப்பிஹாக்கள்) அல்லாஹ் அடியார்களை அவர்கள் புரியும் விதத்திலேயே விழிக்கின்றான், எனவே இறைவசனங்கள், நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் படைப்பினங்களுக்கு ஒப்பாவதையே வேண்டி நிற்கின்றன என நினைத்து அல்லாஹ்வைப் படைப்பினங்களுக்கு ஒப்பாக்குவோர். இவ்வெண்ணமும் பல விதங்களில் தவறாகும் :

1. அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகுதல் என்பது மார்க்கமோ, பகுத்தறிவோ ஏற்காத விடயமாகும். இறைவசனங்கள், நபிமொழிகள் வேண்டி நிற்கும் அம்சம் தவறான ஒன்றாக இருக்கவே முடியாது.

2. அல்லாஹ் அடிப்படைக் கருத்தில் அடியார்கள் புரியும் விதத்திலேயே அவர்களுடன் உரையாடியுள்ளான். இருப்பினும் அல்லாஹ்வின் பெயர், பண்புகள் விடயத்தில் அக்கருத்து கொண்டிருக்கும் யாதர்த்தம், உண்மைத் தோற்றம் அல்லாஹ் மாத்திரம் அறிந்து வைத்துள்ள விடயமாகும்.

அல்லாஹ் தான் செவிமடுப்பவன் எனக் கூறினால் செவியேற்றல் என்பது கேட்கும் திறனாகுமென்பது அடிப்படை அர்த்தமாகும். இருப்பினும் அல்லாஹ் எவ்வாறு கேட்கிறான் என்பது அறியப்படாத விடயமாகும், ஏனெனில் கேட்கும் திறன் படைப்பினங்களுக்கு மத்தியிலேயே வேறுபடுகின்றது, எனவே படைத்தவனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை மிக மிகத் தெளிவானதும், பாரியதுமாகும்.

அல்லாஹ் தன்னைப் பற்றி அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான் எனக் கூறினால் இங்கு உயர்ந்து விட்டான் என்பதன் அர்த்தம் தெளிவானதாகும், இருப்பினும் அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான் என்பதன் யதார்த்தம் எம்மைப் பொறுத்தவரை அறியப்படாததாகும். ஏனெனில் உயர்தல் என்பதன் யதார்த்தம் படைப்பினங்களுக்கு இடையிலேயே வேறுபடுகின்றது. அசையாத ஒரு கதிரையில் அமர்தல் என்பது ஓடும் ஒட்டகத்தில் சிரமப்பட்டு அமர்வதைப்போன்றல்ல. படைப்பினங்களுக்கு மத்தியிலேயே இதில் வேற்றுமை தென்பட்டால் படைத்தவனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை மிக மிகத் தெளிவானதும், பாரியதுமாகும்.

நாம் கூறிய பிரகாரம் அல்லாஹ்வை நம்புவதால் விசுவாசிகளுக்கு பல மகத்தான பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில :

முதலாவது : அல்லாஹ் அல்லாதோரை ஆதரவு வைக்காமல், அஞ்சாமல், வணங்காமல் ஓரிறைக் கொள்கை உறுதியாகுதல்.

இரண்டாவது : அல்லாஹ்வை முழுமையாக நேசித்து, அவனது அழகிய திருநாமங்கள், உயர்ந்த பண்புகளுக்கமைய அவனை மகத்துவப்படுத்தல்.

மூன்றாவது : அவன் ஏவியதைச் செய்து, விலக்கியதைத் தவிர்ப்பதன் மூலம் அவனை வணங்குவதை உறுதிப்படுத்தல்.

 

 

மலக்குகளை ஈமான் கொள்ளல்

மலக்குகள் என்போர் அல்லாஹ்வை வணங்கக்கூடிய, படைக்கப்பட்ட, மறைவான உலக்தினராகும். பரிபாலனத்தினலோ, இறைமையிலோ அவர்களுக்கு எந்தத் தன்மையும் இல்லை, அல்லாஹ் அவர்களை ஒளியினால் படைத்துள்ளான், அவனது கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து, அமுல்படுத்தும் சக்தியை அவர்களுக்குக் கொடுத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ 19 يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ 20

அவனிடம் இருக்கின்ற (வான)வர்கள் அவனை வணங்காமல் வீம்புபிடிக்க மாட்டார்கள். இன்னும் (அதில்) சோர்வடைய மாட்டார்கள். அவர்கள் இரவும் பகலும் அவனை மகிமைப்படுத்தி, சோர்வடையாமல் இருக்கின்றனர். (அல்அன்பியாஃ : 19-20).

அவர்கள் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், அவர்களது தொகையை அல்லாஹ்வைத் தவிர யாரும் மட்டிட முடியாது. புஹாரி, முஸ்லிமில் இடம்பெறும் அனஸ் (ரலி) அறிவிக்கக் கூடிய செய்தியில் "நபி (ஸல்) அவர்களுக்கு வானிலுள்ள பைதுல் மஃமூர் எனும் மாளிகை உயர்த்திக் காட்டப்பட்டதாகவும், அதில் தினமும் எழுபதாயிரம் மலக்குகள் தொழுவதாகவும், அவர்கள் வெளியேறி விட்டால் மீண்டும் அடுத்த வாய்ப்புக் கிடைத்து அங்கு செல்ல மாட்டார்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மலக்குகளை நம்புவதென்பது நான்கு விடயங்களை உட்பொதிந்துள்ளது :

1. அவர்களது இருப்பை நம்புதல்.

2. ஜிப்ரீல் (அலை) போன்று, அவர்களது பெயர்களில் நாம் அறிந்தவற்றை பெயர்களுடனும், பெயர் அறியாதோரைப் பொதுவாகவும் நம்புதல்.

3. ஜிப்ரீல் (அலை) அவர்களின் தோற்றத்தைப் போன்று, அவர்களது தோற்றங்களில் நாம் அறிந்தவற்றை நம்புதல். ஜிப்ரீலை அவர்களது உண்மைத் தோற்றத்தில் நபி ஸல் அவர்கள் கண்டதாகவும், வானை அடைக்குமளவு அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருப்பதாகவும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் ஒரு மலக்கு சிலவேலை மனித தோற்றமெடுப்பார். ஜிப்ரீல் (அலை) அவர்களை மர்யம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய போது அவர்கள் சராசரி மனித தோற்றமெடுத்துச் சென்றார்கள். நபி (ஸல்) தமது தோழர்களுடன் அமர்ந்திருந்த வேளை அன்னாரிடம் ஜிப்ரீல் (அலை) மிகைத்த வெண்மை நிற ஆடையுடனும், மிகைத்த கருமை நிறத்துடனான தலைமுடியுடனும் கூடிய ஒரு மனிதரின் தோற்றத்தில் வந்தார்கள். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. தோழர்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும் இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான், மறுமை, அதன் அறிகுறிகள் என்பவற்றைப் பற்றி வினவ, நபியவர்களும் பதிலளிக்க, அவரும் சென்று விட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள்:

«هَذَا جِبْرِيلُ؛ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ».

இவர் ஜிப்ரீல் (அலை), உங்களது மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத்தர வந்தார்கள்"8.

அதேபோன்றுதான் இப்ராஹீம் (அலை), லூத் (அலை) ஆகியோரிடம் வந்த மலக்குகளும் மனித தோற்றத்திலேயே இருந்தனர்.

4. மலக்குகளை நம்புவதில் உட்பொதிந்துள்ள நான்காவது விடயம் : அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளில் நாம் அறிந்தவற்றை நம்புதல். உதாரணமாக அவனைத் துதித்தல், சடைவின்றி, இடைவிடாமல் இரவு, பகலாக அவனை வணங்குதல் போன்றவற்றைக் கூறலாம்.

அவர்களில் சிலருக்குப் பிரத்தியேகமான பணிகள் இருக்கின்றன.

உதாரணமாக : இறை வஹியின் நம்பிக்கையாளரான ஜிப்ரீல் (அலை) அவர்கள் எல்லா தூதர்களுக்கும் இறைக்கட்டளைகளை கொண்டு செல்லும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தார்கள்.

மழை, பயிர்களுக்கு : மீகாயீல் (அலை) அவர்கள் சாட்டப்பட்டுள்ளார்கள்.

இறுதி நாளின் போதும், படைப்பினங்களை மீளெழுப்பவும் ஸூர் ஊத இஸ்ராபீல் (அலை) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்புக்கு மலகுல் மௌத் அவர்கள் சாட்டப்பட்டுள்ளார்கள்.

நரகத்திற்குப் பொறுப்பாக மாலிக் (அலை) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், அவர்தான் நரகின் காவலாளியாகும்.

மேலும் தாயின் கருவறையில் உள்ள சிசுவுக்குப் பொறுப்பாக சில மலக்குகள் உள்ளனர். கருவறையில் நான்கு மாதங்கள் முழுமை பெற்றுவிட்டால் அச்சிசுவின் வாழ்வாதார அளவு, ஆயுட்காலம், செயற்பாடுகள், அவன் பாக்கியசாலியா? துர்ப்பாக்கியசாலியா? என்பவற்றை எழுதக் கட்டளை பிறப்பித்து அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்புகின்றான்.

மனிதர்களது செயல்களை கண்காணிக்கவும், எழுதவும் நியமிக்கப்பட்ட மலக்குகள், ஒவ்வொரு மனிதனது வலதிலும், இடதிலும் இரு மலக்குகள் இருப்பர்.

ஒருவர் மரணித்தால் அவர் பற்றிய விடயங்களை விசாரிப்பதற்காகவும் இரண்டு பேர் சாட்டப்பட்டுள்ளனர். அம்மனிதன் அடக்கம் செய்யப்பட்டதும் அவ்விருவரும் அவரிடத்தில் தனது இறைவன், மார்க்கம், நபி பற்றி விசாரிப்பார்கள்.

மலக்குகளை ஈமான் கொள்வதால் மகத்தான பல பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில :

1) அல்லாஹ்வின் வல்லமையையும், ஆற்றலையும், அதிகாரத்தையும் அறிய முடிகிறது. படைப்புகளின் ஆற்றல் அவற்றை படைத்தவனின் ஆற்றலையே உணர்த்துகிறது.

2) மனிதர்களது விடயத்தில் அல்லாஹ் செலுத்தும் விஷேட கவனிப்புக்காக அவனுக்கு நன்றி செலுத்தத் தூண்டுகிறது. மனிதர்களை கண்காணித்து, அவர்களது செயல்பாடுகளை குறித்து, அவர்களது பிற நலன்களிலும் கவனம் செலுத்துவதற்காக அவனே மலக்குகளை நியமித்துள்ளான்.

3) அவர்கள் அல்லாஹ்வை வணங்கும் விதத்தைப் பார்த்து அவர்கள் மீது அன்பு ஏற்படுகிறது.

வழிதவறிய ஒரு குழுவினர், மலக்குகள் உடலமைப்பைக் கொண்டவர்களல்லர் எனக் கூறுகின்றனர். அவர்கள் படைப்பினங்களில் மறைந்துள்ள சிறந்த சக்திகளின் மறுவடிவம் மாத்திரமே என்கின்றனர். ஆனால் இது அல்குர்ஆனையும், ஸுன்னாவையும், அனைத்து முஸ்லிம்களின் கருத்துக்களையும் பொய்ப்படுத்துவதாக அமைகின்றது.

அல்லாஹுத் தஆலா கூறுகிறான் :

﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ جَاعِلِ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلًا أُوْلِيٓ أَجۡنِحَةٖ مَّثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۚ...﴾

வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ள தூதுவர்களாக மலக்குகளை படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (பாதிர்: 1)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَلَوۡ تَرَىٰٓ إِذۡ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُم...﴾

(நபியே!) வானவர்கள், நிராகரித்தவர்களை - அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக - உயிர் கைப்பற்றும் போது நீர் பார்த்தால் (அது ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும்). (அல்அன்ஃபால் : 50).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ...﴾

இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல் அன்ஆம் : 93).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمۡ قَالُواْ مَاذَا قَالَ رَبُّكُمۡۖ قَالُواْ ٱلۡحَقَّۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ﴾

...இறுதியாக, அவர்களது உள்ளங்களை விட்டு திடுக்கம் (பயம்) சென்றுவிட்டால் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று (சில வானவர்கள்) கேட்பார்கள். உண்மையைத்தான் (கூறினான்) என்று (மற்ற வானவர்கள் பதில்) கூறுவார்கள். அவன்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன். (ஸபஃ : 23).

மேலும் சுவனவாதிகள் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

﴿...وَٱلۡمَلَٰٓئِكَةُ يَدۡخُلُونَ عَلَيۡهِم مِّن كُلِّ بَابٖ 23 سَلَٰمٌ عَلَيۡكُم بِمَا صَبَرۡتُمۡۚ فَنِعۡمَ عُقۡبَى ٱلدَّارِ 24

வானவர்கள் ஒவ்வொரு வாசலில் இருந்தும் இவர்களிடம் பிரவேசிப்பார்கள். “நீங்கள் பொறுமை காட்டியதற்காக உங்களுக்கு சமாதானம் உண்டாகுக. இல்லத்தின் நல்ல முடிவு எவ்வளவு சிறந்தது! (என்று கூறுவார்கள்). (அர்ரஃது : 23-24).

புகாரியின் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :

«إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحْبِبْهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ».

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரீலை அழைத்து 'நிச்சயமாக அல்லாஹ் இன்னாளை நேசிக்கின்றான், நீங்களும் அவனை நேசியுங்கள்' என்று கூறுவான். உடனடியாக அவனை ஜிப்ரீல் நேசிப்பார். பின்னர் ஜிப்ரீல் வானவர்களை அழைத்து 'நிச்சயமாக அல்லாஹ் இன்னாளை நேசிக்கின்றான். நீங்களும் அவனை நேசியுங்கள்' என்று கூறுவார். அப்பொழுது வானவர்கள் அவனை நேசிப்பர். பின்னர் உலகில் அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கும்."9

இதில் மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

«إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلَائِكَةُ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ، فَإِذَا جَلَسَ الْإِمَامُ طَوَوْا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ».

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் ஒவ்வொரு வாசலிலும் இருந்த வண்ணம் முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து வருவோரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், மிம்பர் மேடையில் அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு அவரின் உபதேச உரையைச் செவிமடுத்த வண்ணம் உள்ளே வருவார்கள்."10

மேற்கண்ட வசனத்தொடர்களெல்லாம் மலக்குமார்கள், வழிகேடர்கள் கூறுவதைப் போன்று உள்ரங்கமான சக்திகளல்ல, மாறாக வெளிப்படையான உடலமைப்பைக் கொண்டவர்கள் என்பதை தெளிவாக அறிவிக்கின்றன. இக்கருத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்துள்ளனர்.

 

இறை வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்)

வேதங்களைக் குறிக்கும் அரபு வார்த்தையான குதுப் என்பது கிதாப் என்ற சொல்லின் பன்மையாகும், எழுதப்பட்டது என்பதே இதன் அர்த்தமாகும்.

இங்கு வேதங்கள் என்பது : படைப்பினங்கள் ஈருலகிலும் வெற்றியடையும் பொருட்டு, அவர்களது நேர்வழிக்காகவும், அருளுக்காகவும் அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கிய தொகுப்புகளாகும்.

வேதங்களை நம்புவது நான்கு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது :

1. இவை அல்லாஹ்விடமிருந்து உண்மையாகவே இறங்கியவை என நம்புதல்.

2. அவற்றில் நாம் பெயர் அறிந்தவற்றை அந்தப் பெயர்களுடன் நம்ப வேண்டும். உதாரணமாக : அல்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், தௌராத் வேதம் மூஸா (அலை) அவர்களுக்கும், இன்ஜீல் வேதம் ஈஸா (அலை) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது. ஸபூர் வேதம் தாவுத் (அலை) அவர்களுக்கும் அருளப்பட்டன என குறிப்பாகவும், ஏனைய பெயர் அறியாதவற்றை பொதுவாகவும் ஈமான் கொள்ள வேண்டும்.

3. அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளில் ஆதாரபூர்வமானவற்றை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்குர்ஆனின் தகவல்களையும், அதற்கு முன்னருள்ள வேதங்களின் தகவல்கள் திருத்தப்படாமலோ, மாற்றப்படாமலோ இருப்பின் அவற்றையும் உண்மை என ஏற்க வேண்டும்.

4. அது கூறக்கூடிய சட்டங்களை பின்னர் (அச்சட்டங்கள்) மாற்றப்படாமல் இருப்பின் அவற்றை செயல்படுத்த வேண்டும். மேலும் அச்சட்டங்களின் நோக்கம் நமக்கு புரிந்தாலும், புரியாவிடினும் அவற்றை உள்ளத்தால் பொருந்தி பூரணமாக அவற்றிற்கு கட்டுப்படவும் வேண்டும். முந்தைய அனைத்து வேதங்களும் அல்குர்ஆனின் வருகையால் மாற்றப்பட்டே உள்ளன. அல்லாஹுத் தஆலா கூறுகிறான்:

﴿وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِۖ...﴾

இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது... (அல் மாஇதா : 48) அதாவது : அதன்மீது தீர்ப்பளிப்பளிக்கக்கூடியதாக.

எனவே, முன்னைய வேதங்களின் எந்தவொரு சட்டத்தையும் அது ஆதாரபூர்வமானதாகவோ, அல்குர்ஆன் அங்கீகரிக்கும் பட்சத்தில்தான் அதனை அமுல்படுத்த முடியும்.

வேதங்களை ஈமான் கொள்வதால் மகத்தான பல பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில :

1. அல்லாஹ் தன் அடியார்கள் மீது எவ்வளவு கரிசனையோடு இருக்கிறான் என்பதை இது உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் நேர்வழி காட்ட அவ்வப்போது அவன் வேதங்களை இறக்கியிருப்பதன் மூலம் இதனைத்தெளிவாக புரிய முடிகின்றது.

2. அவன் இயற்றிய ஷரீஆவின் மூலம் அவனது மதிநுட்பத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது நிலமைகளுக்கு பொருத்தமாக மார்க்கச்சட்டங்களை இயற்றியிருப்பதின் மூலம் இதனைத்தெளிவாக புரிய முடிகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

﴿...لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ...﴾

உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். (அல் மாஇதா : 48).

3. இவ்விடயத்தில் அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செலுத்துதல்.

 

இறைத்தூதர்களை நம்புதல் (ஈமான் கொள்ளல்)

தூதர்களைக் குறிக்கும் "ருஸுல்" எனும் அரபு வார்த்தை "ரஸூல்" என்பதன் பன்மையாகும். ஒன்றை எத்திவைப்பதற்காக அனுப்பப் பட்டவர் என்பதே இதன் அர்த்தமாகும்.

இங்கு தூதர் என நாடப்படுபவர், மார்க்கம் கொடுக்கப்பட்டு, அதனை எத்திவைக்கும் படி ஏவப்படுபவராகும்.

முதலாவது தூதர் நூஹ் (அலை), இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆகியோராகும்.

அல்லாஹுத் தஆலா கூறுகிறான்:

﴿ إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِ...﴾

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். (அன்நிஸாஃ : 163)

ஷபாஅத் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புஹாரியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :

«ذُكِرَ أَنَّ النَّاسَ يَأْتُونَ إِلَى آدَمَ؛ لِيَشْفَعَ لَهُمْ، فَيَعْتَذِرُ إِلَيْهِمْ وَيَقُولُ: ائْتُوا نُوحًا أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ» وذكر تمام الحديث.

தமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்க வேண்டி நபி ஆதம் (அலை) அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது அவர் பின்வாங்கி விட்டு "அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் நூஹிடம் செல்லுங்கள்" எனக் கூறுவதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். (இது நீண்ட ஹதீதின் சிறிய பகுதியாகும்)11.

மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விடயத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ...﴾

முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். (அல் அஹ்ஸாப்).

தனித்துவமான மார்க்கம் கொடுக்கப்பட்ட எந்த தூதரோ, முன்னைய மார்க்கத்தைப் புதுப்பிக்க இறைச்செய்தி அறிவிக்கப்பட்ட எந்த நபியோ இல்லாமல் எச்சமூகமும் இருந்ததில்லை. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ...﴾

“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். (அன்நஹ்லு : 36)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

﴿...وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ﴾

எந்த ஒரு சமுதாயத்திற்கும், அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர இல்லை.  (பாதிர் : 24)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ...﴾

நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள்... (அல்மாஇதா : 44).

இறைத்தூதர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதர்களே, பரிபாலணக் கோட்பாடு, இறைமை போன்ற எந்தவொரு தனித்துவமும் அவர்களுக்கில்லை. இறைத்தூதர்களின் தலைவரான, அல்லாஹ்விடம் மிக கண்ணியத்திற்குரியவரான தனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ 188﴾

(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.” (அல்அஃராப் : 188) .

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا 21 قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا 22﴾

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களுக்கு கெடுதிக்கோ (-உங்களை விட்டும் அதை அகற்றுவதற்கும்) நல்லதுக்கோ (-உங்களுக்கு அதை செய்து தருவதற்கோ) சக்தி பெறமாட்டேன். (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து என்னை யாரும் பாதுகாக்கமாட்டார்கள்; அவரைத் தவிர நான் அடைக்கலமாக எதையும் காணமாட்டேன். (அல்ஜின் : 21- 22).

மனிதர்களுக்கு ஏற்படும் நோய், மரணம், பட்டினி, தாகம் போன்றன அவர்களுக்கும் ஏற்படுகின்றன. இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது இரட்சகனை வர்ணித்ததை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ 79 وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ 80 وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ 81﴾

இன்னும், அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர் புகட்டுகிறான். இன்னும், நான் நோயுற்றால், அவன்தான் எனக்கு குணமளிக்கிறான். இன்னும், அவன்தான் எனக்கு மரணத்தை வரவழைக்கிறான். பின்னர், மீண்டும் உயிர்ப்பிக்கிறான். (அஷ்ஷுஅராஃ : 79- 81).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي».

நானும் உங்களைப் போன்ற மனிதன்தான், நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கின்றேன், அவ்வாறு நான் மறந்தால் எனக்கு நினைவூட்டுங்கள்"12.

அல்லாஹ் இறைத்தூதர்களின் உயர்ந்த ஸ்தானத்தை வர்ணிக்கின்ற போதும் அடிமைத்தனத்தைக்கொண்டே அவர்களை வர்ணிக்கிறான். நபி நூஹ் அவர்களைப் புகழும்போது அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :

﴿...إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا﴾

நிச்சயமாக அவர் (அல்லாஹ்விற்கு) அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார். (அல் இஸ்ராஃ : 3), மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விடயத்தில் பின்வருமாறு கூறினார் :

﴿تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا 1﴾

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல் ஃபுர்கான் : 1).

இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை) ஆகியோர் விடயத்தில் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ 45 إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ 46 وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ 47﴾

நமது அடியார்களான, (வணக்க வழிபாட்டில்) வலிமைகளும் (அல்லாஹ்வை அறிவதில்) அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக! நாங்கள் அவர்களை (அகிலத்திற்கான) நினைவாகத் தேர்ந்தெடுத்தோம். நிச்சயமாக அவர்கள் நம்மிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லவர்களில் ஆவார்கள். (ஸாத்: 45- 47)

ஈஸா (அலை) அவர்கள் விடயத்தில் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ 59﴾

(ஈஸா) அவர் மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளோ, கடவுளின் மகனோ இல்லை.) இன்னும், நாம் அவரை இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். (அஸ்ஸுஃக்ருப் : 59).

இறைத்தூதர்களை இறைவிசுவாசிப்பது நான்கு அம்சங்களை உட்பொதிந்துள்ளது :

1. அவர்கள் கொண்டு வந்த தூது அல்லாஹ்விடமிருந்து உண்மையாக அருளப்பட்டது என ஈமான் கொள்ளல் வேண்டும். அவர்களில் ஒருவரின் தூதை மறுத்தால் அனைத்து தூதர்களையும் மறுத்தவராவார். அல்லாஹ் கூறுகிறான்:

﴿كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ 105﴾

நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர். (அஷ்ஷுஅராஃ : 105). அச்சமூகத்தினர் நபி நூஹ் அவர்களைப் பொய்ப்பித்த வேளை வேறு தூதர்கள் யாருமில்லாமிலிருந்தும் அனைத்துத் தூதர்களையும் நிராகரித்தவர்களாகவே அல்லாஹ் அவர்களை ஆக்கியுள்ளான். இதன்படி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றாது பொய்ப்பித்த கிறிஸ்தவர்கள், ஈஸா (அலை) அவர்களையும் பின்பற்றாது அவர்களையும் சேர்த்தே பொய்ப்பிக்கின்றனர். அவர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்களது வருகை பற்றி முன்னறிவிப்பு செய்தே இருந்தார்கள். அதாவது அல்லாஹ் அவர்களை வழிகேட்டில் இருந்து காத்து நேர்வழியின் பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்ட தூதரே இவர் என்பதைத் தவிர இந்த முன்னறிவிப்பிற்கு வேறு அர்த்தம் கிடையாது.

2. அவர்களில் முஹம்மத் (ஸல்), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), நூஹ் (அலை) என பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அவர்களுடைய பெயர்களுடன் ஈமான் கொள்ளல் வேண்டும். இந்த ஐவரும் உலுல் அஸ்ம் (மன உறுதிமிக்க இறைத்தூதர்கள்) என்ற சிறப்பை பெற்றவர்களாவர். இவர்களை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இரு இடங்களில் ஒன்றாகவே கூறியுள்ளான் :

﴿وَإِذۡ أَخَذۡنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمۡ وَمِنكَ وَمِن نُّوحٖ وَإِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۖ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا 7﴾

எல்லா நபிமார்களிடமும் (அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்று) அவர்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், (அதே வாக்குறுதியை) உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை நாம் வாங்கினோம். (அல்அஹ்ஸாப் : 7) மேலும் அல்லாஹ் கூறுகிறான்

﴿شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِۚ ٱللَّهُ يَجۡتَبِيٓ إِلَيۡهِ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَن يُنِيبُ 13﴾

அவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்ய் அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான். (அஷ்ஷூரா : 13)

அவர்களில் நாம் பெயரறியாதோரைப் பொதுப்படியாக நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ...﴾

திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. (ஃகாபிர் :78)

3. அவர்கள் கொண்டு வந்த செய்திகளில் ஆதாரபூர்வமானதை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. அவர்களில் எமக்கு அனுப்பப்பட்ட தூதர் கொணடு வந்த சட்டத்தின் (ஷரீஆவின்) படியே செயல்பட வேண்டும். அவர்தான் அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவர். அல்லாஹ் கூறுகிறான் :

﴿فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا 65﴾

ஆக, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் அவர்கள் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் அறவே அதிருப்தி காணாமல் (-சங்கடத்தை உணராமல்) முழுமையாக (உமது தீர்ப்புக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள். (அந்நிஸா : 65).

இறைத்தூதர்களை ஈமான் கொள்வதால் மகத்தான பல பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில :

1. அல்லாஹ்வினது அருளையும், அவன் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள கரிசனையையும் உணர முடிகிறது. மனித அறிவால் நேர்வழியை சுயமாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதனால் அல்லாஹ் தனது தூதர்களை மக்களை நேர்வழிப்படுத்த அனுப்பினான். அவனை வணங்குவது எப்படி என்று அவர்களே தெளிவுபடுத்தினர். இது அவன் அவர்கள் மீது கொண்ட கரிசனையின் வெளிப்பாடே அன்றி வேரில்லை.

2. அளப்பரிய இந்த அருளை வழங்கியதற்காக அவனுக்கு நன்றி கூற முடிகிறது.

3. அவர்கள் மீது அன்பு கொள்ளவும், அவர்களை கண்ணியப்படுத்தவும், அவர்களது தகுதிக்கு ஏற்ற விதத்தில் அவர்களைப் புகழவும் முடிகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள் என்பதாலும், அவர்கள் அல்லாஹ்வை உறிய முறையில் வணங்கி, அவனது தூதை எத்திவைத்து, அது பற்றி மக்களுக்கு உபதேசம் புரிபவர்களாகவும் இருந்துள்ளனர்.

பிடிவாதக்காரர்கள் இறைத்தூதர்கள் மனிதர்களாக வர முடியாது எனக் கூறி அவர்களை பொய்ப்பித்தனர். இவர்களது இக்கருத்தை நிராகரித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

﴿وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَبَعَثَ ٱللَّهُ بَشَرٗا رَّسُولٗا 94 قُل لَّوۡ كَانَ فِي ٱلۡأَرۡضِ مَلَٰٓئِكَةٞ يَمۡشُونَ مُطۡمَئِنِّينَ لَنَزَّلۡنَا عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكٗا رَّسُولٗا 95﴾

மனிதர்களுக்கு நேர்வழி வந்தபோது, “ஒரு மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறியதைத் தவிர (அந்த நேர்வழியை) அவர்கள் நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லை. பூமியில் நிம்மதியாக நடமாடும் மலக்குகள் இருந்தால், நாங்கள் அவர்களிடம் வானத்திலிருந்து ஒரு மலக்கை தூதராக அனுப்பியிருப்போம் என்று கூறு. (அல்இஸ்ராஃ : 94- 95).

பூமியிலுள்ளவர்கள் மனிதர்களாக இருக்கும் போது அவர்களுக்கு அனுப்பப்படும் தூதரும் மனிதராக இருப்பதே அவசியமெனக் கூறி அல்லாஹ் இவர்களது வாதத்தை நிராகரிக்கின்றான். பூமியிலுள்ளவர்கள் மலக்குகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களது சுபாவத்திற்கேற்ப வானிலிருந்து மலக்கொருவரைத் தூதராக அனுப்பி இருப்பான். இவ்வாறே இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தவர்கள் கூறியதாக பின்வரும் செய்தியை அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ 10 قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ...﴾

“எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(?). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். “நாங்களும் உங்களைப்போன்ற (சாதாரண) மனிதர்களே. ஆனால், அல்லாஹ் தன் அடியார்களில் யாரை வேண்டுமானாலும் (தூதராக) தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களிடம் எந்த ஆதாரத்தையும் கொண்டு வர முடியாது.” (இப்ராஹீம் : 10-11).

இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல்

இறுதி நாள் என்பது விசாரணைக்காகவும், கூலி வழங்கப் படுவதற்காகவும் மக்கள் மீளெழுப்பப்படும் நாளாகும்.

சுவனவாதிகள் தமது இருப்பிடங்களிலும், நரக வாதிகள் தமது இருப்பிடங்களிலும் நிலையாகத் தங்கும் அந்நாளிற்குப் பிறகு வேறு நாளில்லை என்பதனாலேயே இறுதி நாள் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இறுதி நாளை ஈமான் கொள்வது மூன்று அம்சங்களை உட்பொதிந்துள்ளது :

1. மீள எழுப்பப்படுவதை ஈமான் கொள்ளல்:- இரண்டாவது ஸூர் ஊதப்பட்டதும் இறந்தவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கப்படுவதையே இது குறிக்கின்றது. அவ்வாறு உயிரளிக்கப்பட்டதும் அனைத்து மனிதர்களும் பாதணியற்றவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் இறைவன் முன்வந்து நிற்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ﴾

படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம். (அல்அன்பியாஃ : 104).

அல் குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் அனைத்து முஸ்லிம்களினதும் ஏகமான கூற்றின்படியும் மீள எழுப்பப்படுவது நிச்சயம் நிகழக்கூடிய ஒன்றே.

அல்லாஹ் கூறுகிறான் :

﴿ثُمَّ إِنَّكُم بَعۡدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ 15 ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ 16﴾

பிறகு, நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் மரணித்து விடுவீர்கள். பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள். (அல்முஃமினூன் : 15-16).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلًا».

மறுமை நாளில் மனிதர்கள் பாதணியற்றவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவர்".13 (புஹாரி, முஸ்லிம்)

இந் நிகழ்வு நிகழுமென அனைத்து முஸ்லிம்களும் ஏகோபித்துச்சொல்லியுள்ளனர். இதுவே மதிநுட்பம் வேண்டி நிற்கும் ஒரு அம்சமாகும், ஏனெனில் இந்தப் படைப்பினங்களுக்கு ஒரு மீள் நாளை ஏற்படுத்தி, தூதர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட விடயங்களில் விசாரிக்கப்பட்டு, அதற்கமைவாக கூலி கொடுக்கப்படவேண்டுமென்பது மதிநுட்பம் வேண்டி நிற்கும் ஒரு அம்சமே. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ 115﴾

நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (அல்முஃமினூன் : 115) மேலும் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறுகின்றான் :

﴿إِنَّ ٱلَّذِي فَرَضَ عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لَرَآدُّكَ إِلَىٰ مَعَادٖۚ...﴾

நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) மீளுமிடத்திற்கு திரும்பக் கொண்டு வருவான். (அல்கஸஸ் : 85).

2. விசாரணை மற்றும் கூலி வழங்குவதை ஈமான் கொள்ளல்:- அடியான் தனது செயல்களுக்காக விசாரனை செய்யப்பட்டு, அதற்கேற்ப கூலியும் கொடுக்கப்படுவான். இதனை அல் குர்ஆனும், ஸுன்னாவும், அனைத்து முஸ்லிம்களினது ஒருமித்த கருத்தும் அறிவித்துள்ளது.

அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ 25 ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم 26﴾

நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது. பின்னர் நிச்சயமாக அவர்களின் விசாரணை நமக்கே உரியது. (அல் gஃகாஷியா : 25-26) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿مَن جَآءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا يُظۡلَمُونَ 160﴾

எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். இன்னும், (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்அன்ஆம் : 160). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ 47﴾

மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும் விசாரணைக்கு) நாம் கொண்டு வருவோம். இன்னும், (அவர்களை) விசாரிப்பதற்கு நாமே போதுமானவர்கள். (அல்அன்பியாஃ : 47).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :

«إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ، فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ - أَيْ سَتْرَهُ - وَيَسْتُرُهُ: فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: نَعَمْ أَيْ رَبِّ، حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ، وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ: سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ، وَأَمَّا الْكُفَّارُ وَالْمُنَافِقُونَ فَيُنَادَى بِهِمْ عَلَى رُؤُوسِ الْخَلَائِقِ: هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ، أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ».

“நிச்சயமாக அல்லாஹுதஆலா ஒரு முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு அவன், ‘ஆம், என் இறைவா!’ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், ‘நாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது, (அல்லாஹ்) ‘இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். ஆனால் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை அனைத்து படைப்பினங்கள் முன்னிலையிலும் அழைக்கப்பட்டு, ‘இவர்கள் தான், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்’ என்று சொல்லப்படும்.”14 இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்.

ஆதாரப்பூர்வமான ஓர் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«أَنَّ مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا؛ كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِئَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَأَنَّ مَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَعَمِلَهَا؛ كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً».

ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை தன்னிடத்தில் பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரேயொரு தீய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான்."15

அடியார்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு அதற்கேற்ப கூலியளிக்கப்படுவதை அனைத்து முஸ்லிம்களும் ஏகமானதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவே மதிநுட்பத்தின் தேற்றத்திற்குட்பட்டதாகும். ஏனெனில் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான், தூதர்களை அனுப்பியுள்ளான். அவர்கள் கொண்டுவந்தவற்றை ஏற்று அமுல்படுத்தும்படி அடியார்களைப் பணித்துள்ளான். அவனுக்கு முரண்படுவோருடன் போரிடுவதை கடமையாக்கியுள்ளான். அவர்களுடைய உயிர், உடமை, மனைவி, சந்ததிகளை அபகரிப்பதை அனுமதித்துள்ளான். அங்கு விசாரணையோ, கூலி வழங்கலோ இல்லாவிடில் மதிநுட்பம் மிக்க அல்லாஹ் எதனை விட்டும் தூய்மைப்படுத்தப்படுகிறானோ அத்தகைய வீண் விடயங்களில் இது ஒன்றாகிவிடும். இதனையே அல்லாஹ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றான் :

﴿فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ 6 فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ 7﴾

ஆக, எவர்களிடம் (தூதர்கள்) அனுப்பப்பட்டார்களோ அவர்களை நிச்சயம் விசாரிப்போம். இன்னும், (நமது) தூதர்களை நிச்சயம் விசாரிப்போம். மேலும், நாங்கள் அவர்களிடம் நிச்சயமாக அறிவுடன் விவரிப்போம். நாங்கள் காணாமல் போனவர்கள் அல்ல. (அல்அஃராப் : 6-7).

3. சுவர்க்கம், நரகத்தையும் அவ்விரண்டுமே படைப்பினங்களது நிரந்தர இருப்பிடம் எனவும் ஈமான் கொள்ளல்:-

அல்லாஹ் ஈமான் கொள்ளுமாறு ஏவிய விடயங்களை ஈமான் கொண்டு, அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அவனை தூய்மையுடன் வழிப்பட்டு, அவனது தூதரை பின்பற்றி இறையச்சத்துடன் வாழ்ந்த நல்லடியார்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள இடமே சுவர்க்கமாகும். அதில் பல்வகை இன்பங்கள் உள்ளன.

«مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ».

கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றியிராதவை உள்ளன."16 அல்லாஹுத் தஆலா கூறுகிறான்

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ 7 جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ 8﴾

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்கள்தான் படைப்புகளில் மிகச் சிறந்தோர் ஆவார்கள். அவர்களுக்கான பலன் அவர்களுடைய இறைவனிடத்தில் நிரந்தர சுவன பூங்காக்கள் ஆகும், அவற்றின் அடியில் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் அவர்களிடம் திருப்தியடைந்தார், அவர்களும் அவரிடம் திருப்தியடைந்தார்கள். இதுவே தம் இறைவனைப் பயந்து நடப்பவர்களுக்கு உரியது. (அல்-பய்யினா: 7-8) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ 17﴾

ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்காக (சொர்க்கத்தில்) மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்)தை ஓர் ஆன்மாவும் அறியாது. (அஸ்ஸஜ்தா : 17).

அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களுக்கு மாறுசெய்து அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள இடமே நரகமாகும். இங்கு வேதனை மாத்திரமே அளிக்கப்படும். அங்கு அளிக்கப்படும் வேதனையும், தண்டனையும் உள்ளங்களால் கற்பனை பண்ண முடியாதளவு கடுமையாக இருக்கும். அல்லாஹுத் தஆலா கூறுகிறான்

﴿وَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِيٓ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ 131﴾

இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக) நெருப்பை அஞ்சுங்கள். (ஆல இம்ரான் : 131). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ وَإِن يَسۡتَغِيثُواْ يُغَاثُواْ بِمَآءٖ كَٱلۡمُهۡلِ يَشۡوِي ٱلۡوُجُوهَۚ بِئۡسَ ٱلشَّرَابُ وَسَآءَتۡ مُرۡتَفَقًا 29﴾

இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம், (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும், அவர்கள் இரட்சிப்பை தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திரவத்தைப் போன்ற நீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். அது மகா கெட்ட பானமாகும். இன்னும், அது ஒரு தீய ஓய்விடம் ஆகும். (அல்கஹ்ஃப் : 29). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلۡكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمۡ سَعِيرًا 64 خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا 65 يَوۡمَ تُقَلَّبُ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠66﴾

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். இன்னும், கொழுந்து விட்டெரியும் நரகத்தை அவர்களுக்கு (மறுமையில்) ஏற்படுத்தினான். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஆதரவாளரும், உதவியாளரும் கிடைக்கமாட்டார்கள். அவர்களின் முகங்கள் நரகத்தில் சுழலப்படும் நாளில், அவர்கள்: 'நாங்கள் அல்லாஹ்வையும், தூதரையும் கீழ்ப்படிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.' என்று கூறுவார்கள்.  (அல் அஹ்ஸாப் : 64-66).

மறுமையை ஈமான் கொள்வதால் மகத்தான பல பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில :

1. இறுதி நாளின் போது கிடைக்கவிருக்கும் கூலியை ஆதரவு வைத்து அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்படுவதற்கு ஆசையேற்படுகிறது.

2. அந் நாளின் தண்டனையைப் பயந்து பாவங்களை வெறுத்தும் ஒதுங்கியும் வாழத் தூண்டுகிறது.

3. மனிதன் விரும்பக் கூடிய ஒன்றை உலகில் இழந்து விட்டால் அதை விட சிறப்பான இன்பத்தை, கூலியை மறுமையில் இறைவனிடம் பெறலாம் என்று ஆறுதல் பெறச் செய்கிறது.

எனினும் இது சாத்தியமில்லை எனக்கருதி இறை மறுப்பாளர்கள் மரணத்திற்குப் பின் மீளெழுப்பப்படுவதை நிராகரிக்கின்றனர்.

மார்க்கம், புலனறிவு, பகுத்தறிவு அடிப்படையில் இந்த வாதம் தவறானதாகும்.

மார்க்கம் : அல்லாஹ் கூறுகின்றான் :

﴿زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن لَّن يُبۡعَثُواْۚ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ 7﴾

“அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!” (அத்தஃகாபுன் : 7). அனைத்து வேதங்களும் இதில் ஒன்றுபட்டுள்ளன.

புலனறிவு ரீதியான ஆதாரம் : அல்லாஹ் தனது அடியார்களுக்கு இவ்வுலகிலேயே மரணித்தவர்களை உயிர்ப்பித்துக் காட்டியுள்ளான். ஸூரா பகராவில் ஐந்து உதாரணங்கள் இதற்கு உள்ளன :

1. நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தினர் அவரிடம் கூறிய போது:

﴿...لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ ...﴾

"நாம் கண்கூடாக அல்லாஹ்வை காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்..." [அல்பகரா:55] அதனால் அல்லாஹ் தஅலா அவர்களை மரணிக்கச் செய்தான்; பிறகு (திரும்பவும்) அவர்களை உயிர்ப்பித்தான். இது பற்றி அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களைப் பார்த்து பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ 55 ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ 56﴾

இன்னும் மூஸாவே! “அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ற நிலையில் பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது. (நீங்கள் இறந்து விட்டீர்கள்.) பின்னர், நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்று நீங்கள் இறந்த பின் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தோம். (அல்பகரா : 55- 56).

2. கொலை செய்யப்பட்டவர் விடயத்தில் பனூ இஸ்ரவேலர்கள் வாக்குவாதப்பட்ட சம்பவம். தன்னை யார் கொன்றதென கொல்லப்பட்டவர் அறிவிப்பதற்காக ஒரு மாட்டை அறுத்து, அதன் ஒரு பகுதியால் குறித்த நபரின் சடலத்திற்க்கு அடிக்குமாறு அல்லாஹ் அவர்களுக்குப் பணித்தான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ 72 فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ 73﴾

இன்னும் நீங்கள் ஓர் உயிரைக் கொன்று பிறகு, அ(தை யார் கொன்றார் என்ப)தில் நீங்கள் தர்க்கித்ததை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன் ஆவான். பின்னர், 'அ(தன்) சில பகுதியால் அதை அடியுங்கள்' என்று நாம் கூறினோம். இவ்வாறு அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றான், மேலும் உங்களுக்கு அவனது அடையாளங்களை காண்பிக்கின்றான், நீங்கள் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கலாம். (அல்பகரா : 72 - 73).

3. மரணத்திற்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம். அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்து, மீண்டும் உயிர்ப்பித்தான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ243﴾

(நபியே!) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்’ எனக் கூறினான். பிறகு, அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள். (அல்பகரா : 243).

4. வரண்டிருந்த ஒரு கிராமத்திற்கருகில் நடந்து சென்று, இதனை மீண்டும் அல்லாஹ் உயிர்ப்பித்து எவ்வாறு செழிப்பாக்குவான் என்பதை ஆச்சரியத்துடன் பார்த்த ஒருவரின் சம்பவம். அல்லாஹ் அவரை நூறு வருடங்கள் மரணிக்கச் செய்து பின் உயிர்ப்பித்து அவரின் ஆச்சரியத்தைப் போக்கினான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

﴿أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 259﴾

அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார். (அல்பகரா : 259).

5. இப்ராஹீம் (அலை) அவர்களின் சம்பவம், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் முறையைத் தனக்குக்காட்டுமாறு அல்லாஹ்விடம் அவர் கேட்ட போது, நான்கு பறவைகளை அறுத்து பல கூறுகளாக்கி சுற்றியுள்ள மலைகளில் அவற்றைப் பிரித்து வைத்து, பின் அவற்றை அழைக்குமாறு அல்லாஹ் அவர்களுக்குப் பணித்தான். அப்போது அக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வேகமாக வந்தன. இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ 260﴾

இன்னும், இப்ராஹீம் “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(இப்ராஹீமே!) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ எனக் கூறினான். (அல்லாஹ்வே!) அவ்வாறில்லை. “(நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) எனினும், எனது உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காண்பிக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன்)’’ எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம்முடன் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி உம்மை சுற்றி உள்ள மலைகளில்) ஒவ்வொரு மலையின் மீதும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஆக்குவீராக! பிறகு, அவற்றை அழைப்பீராக! அவை (உயிர் பெற்று) உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!” (அல் பகரா : 260).

இவை மரணித்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கச்செய்ய முடியும் என்பதை அறிவிக்கும் நடைமுறையில் இடம் பெற்ற உணர்ச்சிபூர்வமான உதாரணங்களாகும். ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் இறந்தவர்களை உயிர் பெறச் செய்யவும், அவர்களை மண்ணறையிலிருந்து வெளியில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றிருந்த அத்தாட்சிகளை முன்னர் குறிப்பிட்டோம்.

பகுத்தறிவு சான்றும் இரண்டு விதங்களில் அமைகிறது :

1) வானங்கள் பூமி அதிலுள்ளவை அனைத்தையும் அல்லாஹ்வே படைத்தான். இவற்றை ஆரம்பமாக படைக்க ஆற்றல் பெற்றவன் மீட்டெடுக்கவும் ஆற்றல் பெற்றவனாகவே இருப்பான்? இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :

﴿وَهُوَ ٱلَّذِي يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهۡوَنُ عَلَيۡهِۚ...﴾

அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைப்பான். அதுவோ அவனுக்கு மிக இலகுவானதாகும். (அர்ரூம் : 27) மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿...كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ﴾

படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம். (அல்அன்பியாஃ : 104). உக்கிப் போன எலும்பை உயிர்ப்பிப்பதை மறுத்தவனுக்கு பின்வருமாறு பதிலளிக்கும்படி அல்லாஹ் ஏவுகின்றான் :

﴿قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ 79﴾

(நபியே!) கூறுவீராக! “அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.” (யாஸீன் : 79).

2. பூமி காய்ந்து வரண்டு பசுமையான மரங்கள் அற்றிருக்கும் போது அவன் மழையைப் பெய்வித்து, அந்நிலம் உயிர்பெற்று பச்சைப் பசேலென காட்சிளிக்கும் பலவகைத் தாவரங்கள் முளைக்கின்றன. வரண்ட பூமியை உயிர்ப்பிக்க சக்தியுள்ளவன் மரணித்தவர்களையும் உயிர்ப்பிக்க சக்தியுள்ளவனே. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ 39﴾

இன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். (ஃபுஸ்ஸிலத் : 39). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ 9 وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ 10 رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ 11﴾

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்). (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது. (காஃப் : 9, 10, 11).

மரணத்திற்குப் பின் நிகழும் அனைத்தையும் ஈமான் கொள்வது இறுதி நாளை நம்பிக்கை கொள்வதில் உள்ளடங்குகின்றது : பின்வரும் நிகழ்வுகளை உதாரணத்திற்கு கூறமுடியும்.

1. மண்ணறையின் சோதனை : இது இறந்தவரிடம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவருடைய இரட்சகன், மார்க்கம், நபி பற்றி வினவப்படுவதைக் குறிக்கின்றது. விசுவாசிகளை அல்லாஹ் உறுதியான வார்த்தை மூலம் உறுதிப்படுத்துவான். எனது இரட்சகன் அல்லாஹ், எனது மார்க்கம் இஸ்லாம், எனது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என பதிலளிப்பர். அநீதியிழைத்தவர்களை அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான். எனவே காபிர் ஆஹ், ஆஹ் எனக்குத் தெரியாது என்றும், நயவஞ்சகன் அல்லது சந்தேகங் கொண்டவன் எனக்குத் தெரியாது, மக்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தார்கள், நானும் கூறினேன் என்றும் கூறுவான்.

2. மண்ணறையின் வேதனையும் சுகபோகமும் : நயவஞ்சகர்கள், காபிர்கள் போன்ற அநியாயக்காரர்களுக்கு இங்கு வேதனைகள் உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِي غَمَرَٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓاْ أَيۡدِيهِمۡ أَخۡرِجُوٓاْ أَنفُسَكُمُۖ ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَايَٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ﴾

(இந்த) அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும் சமயத்தில் நீர் (அவர்களைப்) பார்த்தால், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களை நோக்கி) "உங்கள் உயிர்களை வெளியேற்றுங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக்கொண்டிருந்த காரணத்தாலும், நீங்கள் அவனுடைய வசனங்களை மறுத்து பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்று இழிவான வேதனையை கூலி கொடுக்கப்படுவீர்கள்'' (என்று கூறுவார்கள்). (அல்அன்ஆம் : 93).

மேலும் அல்லாஹ் பிர்அவ்னின் கூட்டத்தைப் பற்றி கூறுகின்றான் :

﴿ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ 46﴾

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு வரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்). (gஃகாபிர் : 46).

ஸஹீஹ் முஸ்லிமில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:

«فَلَوْلَا أَنْ لَا تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ مِنْ عَذَابِ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ».

நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன். பின்னர் நபியவர்கள் தமது முகத்தை எங்கள்பக்கம் திருப்பி பின்வருமாறு கூறினார்கள் :

«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ».

«நீங்கள் நரக வேதனையைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்». அவர்கள் “அல்லாஹ்விடம் நரகத்தின் வேதனையிலிருந்து நாங்கள் அடைக்கலம் கேட்கிறோம்” என்றார்கள்; அப்போது நபியவர்கள், 

«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ».

“அல்லாஹ்விடம் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேடுங்கள்.” என்று கூறினார்கள்.  அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘நாங்கள் மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்.’’ பின்னர் நபியவர்கள், 

«تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفِتَنِ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ».

வெளிப்படையான, மறைவான சோதனைகளிலிருந்தும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுங்கள். என்று கூறினார்கள்.  அப்பொழுது அவர்கள், “வெளிப்படையான, மறைவான சோதனைகளிலிருந்தும் நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்” என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 

«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ».

“தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்.” என்று கூறினார்கள்.  அப்போது அவர்கள், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம். என்று கூறினார்கள்17.

மண்ணறையின் இன்பங்கள் உண்மையான விசுவாசிகளுக்கே கிடைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் :

﴿إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ تَتَنَزَّلُ عَلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَبۡشِرُواْ بِٱلۡجَنَّةِ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ 30﴾

நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!” (என்று கூறுவார்கள்). (புஸ்ஸிலத் : 30).

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ 83 وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ 84 وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ 85 فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ 86 تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ 87 فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ 88 فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ 89﴾

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே! (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின், அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. (அல்வாகிஅ : 83-89).

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பராஃ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "விசுவாசி தனது மண்ணறையில் மலக்குகளின் வினாக்களுக்கு பதிலளித்ததும்:

«يُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ صَدَقَ عَبْدِي، فَافْرِشُوهُ مِنَ الْجَنَّةِ، وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ، قَالَ: فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا، وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ».

வானிலிருந்து அல்லாஹ் : "எனது அடியான் உண்மையுரைத்து விட்டான், சுவனத்திலிருந்து அவனுக்கு விரிப்பை விரித்துக் கொடுங்கள், சுவனத்திலிருந்து ஆடை அணிவியுங்கள், சுவனத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விடுங்கள்" என்று கூறுவான். அப்போது அதிலிருந்து தென்றல் காற்றும், நறுமணமும் அவனை வந்தடையும். பார்வை எட்டுமளவு அவனது மண்ணறை விசாலமாக்கப்படும். இமாம்களான அஹ்மத், அபூ தாவுத் ஆகியோர் ஒரு நீண்ட ஹதீஸில் இதனை பதிவு செய்துள்ளனர்.(18)18

மண்ணறையின் இன்பமும், துன்பமும் நடைமுறைக்கு முரணானது, எனவே அது சாத்தியமற்றது எனக் கூறி, அதனை மறுத்து ஒரு கூட்டத்தார் வழிதவறிச்சென்றுள்ளனர். ஒரு கப்ரைத் திறந்து பார்த்தால் அதிலே வைக்கப்பட்ட உடல் அவ்வாறே இருக்கிறது, அது சுருங்கியோ, விரிந்தோ எவ்வித மாற்றமுமின்றியே இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

மார்க்கம், புலனறிவு, பகுத்தறிவின் அடிப்படையில் இந்த வாதம் தவறானதாகும் :

மார்க்க ரீதியாக மண்ணறையின் இன்ப, துன்பங்களை அறிவிக்கக் கூடிய பல ஆதாரங்கள் ஏற்கனவே கூறப்பட்டு விட்டன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபிகளார் மதீனாவின் ஒரு சில அடக்கஸ்தலங்களின் பக்கம் சென்றார்கள். அச்சமயம் இருவர் மண்ணறைகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்றார்கள். (ஆதாரம் : புஹாரி). அவர்கள் ஹதீஸை மேலும் விவரித்தார்கள்; அதில்:

«أَنَّ أَحَدَهُمَا كَانَ لَا يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ».

“அவ்விருவரில் ஒருவர் அச்சிறுநீர் தனது உடல் மற்றும் ஆடையில் படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதை பொருட்படுத்தாது இருந்தவர்.” மற்றொரு அறிவிப்பில்,

«مِنْ بَوْلِهِ».

“அவரது சிறுநீரிலிருந்து” (என்று வந்துள்ளது). 

«وَأَنَّ الْآخَرَ كَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ».

மற்றொருவர், புறம் பேசித் திரிபவர். (என்றும் வந்துள்ளது)  முஸ்லிமின் அறிவிப்பில்

«لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ».

“அவர் சிறுநீரிலிருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவர்.” (19) என்று வந்துள்ளது.19

புலனறிவு : நித்திரையில் இருக்கக் கூடிய ஒருவர், தான் ஒரு பரந்து விரிந்த ஓரிடத்தில் பல இன்பங்களை அனுபவிப்பது போன்று காண்கிறார். அல்லது ஓர் வறண்ட நெருக்கடியான இடத்தில் வேதனைபடுவது போன்று காண்கிறார். சில வேளை இடையில் கண் விழிக்கிறார். ஆனால் அவர் கண் விழித்ததும் இவற்றை தனது படுக்கையிலே அனுபவித்ததை பார்க்கிறார். உறக்கம் மரணத்திற்கு சமமாகும். இதனாலேயே அல்லாஹ் தூக்கத்திற்கு மரணம் என்று பெயரிட்டுள்ளான். அவன் கூறுகின்றான் :

﴿ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّى...﴾

அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (அவ்வாறே இது வரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன்தான் உயிர் கைப்பற்றுகிறான். (தூங்கும்போது) மரணத்தை எதன் மீது விதித்து விட்டானோ அதை (-அதனுடைய உயிரை தூக்கத்திலேயே) அவன் தடுத்துக் கொள்கிறான். (மரணம் விதிக்கப்படாத) மற்றொன்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) அவன் விட்டு வைக்கிறான்... (அஸ்ஸுமர் : 42).

பகுத்தறிவு : சில சமயங்களில் உறங்கிக் கொண்டிருப்பவர் நடைமுறைக்கு ஒத்துப்போகும் உண்மையான கனவைக் காண்பார். சிலவேளை ஒருவர் நபி (ஸல்) அவர்களைக்கூட அவரது பண்புகளுடன் கனவில் காண்பார். யாராயினும் அவ்வாறு நபி (ஸல்) அவர்களைக் கண்டால் அது முற்றிலும் உண்மையானதே. ஆயினும் உறங்குபவர் தனது அரையில் படுக்கை விரிப்பிலேயே இருக்கிறார், தான் கண்ட கனவை விட்டும் வெகு தூரத்தில் இருக்கிறார். உலக நிலமைகளில் இது இடம் பெற சாத்தியமிருப்பின் மறுமையின் நிலைகளில் இடம்பெற சாத்தியம் இருக்காதா?!

ஒரு கப்ரைத் திறந்து பார்த்தால் அதிலே வைக்கப்பட்ட உடல் அவ்வாறே இருப்பதுடன், அது சுருங்கியோ, விரிந்தோ எவ்வித மாற்றமுமின்றியே உள்ளது என்பதை ஆதாரமாகக் காட்டி இதனை அவர்கள் மறுப்பதற்குப் பல விதங்களில் பதில் கூறலாம், அவற்றில் சில பின்வருமாறு :

1. இது போன்ற அற்பமான, போலியான சந்தேகங்களை வைத்து மார்க்கம் கொண்டுவந்த செய்திக்கு ஒரு போதும் முரண்பட முடியாது. இவ்வாறு முரண்படுபவர் அச் சந்தேகங்களை முறையாகக் கவனித்தால் அதன் போலித்தன்மையை அறிந்து கொள்வார். என்று கூறப்பட்டுள்ளது:

எத்தனை பேர்தான் சரியான கருத்தை குறைகூறுகின்றனர்!

(ஆனால்) அதன் ஆபத்தோ அவர்களின் தவறான புரிதலினால் ஏற்பட்டதாகும்.

2.பர்ஸஹ் எனும் மறைவான வாழ்வின் நிலைகள் புலனுறுப்புக்களால் அறிய முடியாத மறைவான விடயங்களில் உள்ளதாகும். அவ்வாறு புலனுறுப்புக்களால் அறிய முடியுமாயிருந்தால் மறைவானவற்றை இறைவிசுவாசிப்பதற்கு எப்பயனும் இருக்காது. மறைவானவற்றை விசுவாசிப்போரும், அதனை மறுப்போரும் சமனாகிவிடுவர்.

3. வேதனை, இன்பம், மண்ணறை விசாலம், அதன் நெருக்கடி அனைத்தையும் மரணித்தவர் மாத்திரமே அறிய முடியும். இது நித்திரையில் இருக்கக் கூடிய ஒருவர் தான் ஒரு பரந்து விரிந்த பல இன்பங்கள் நிறைந்த ஓரிடத்தில் இருப்பதைப்போன்று காண்கிறார். அல்லது ஒரு நெருக்கடியான இடத்தில் இருப்பதைப்போன்று காண்கிறார். அவரைச் சூழவுள்ளோர் யாரும் அதனைக் காணவோ, உணரவோ முடியாது என்பதைப் போன்றுதான் இதுவும். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு மத்தியில் இருக்கும் போதும் அன்னாருக்கு வஹீ அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், அதனை அவர் செவிமடுப்பார், தோழர்கள் செவிமடுக்கமாட்டார்கள். சில வேளை அம்மலக்கு மனித உருவெடுத்து வந்து நபியுடன் உரையாடுவார், தோழர்களோ அவரைக் காணவோ, அவர்கள் பேசுவதைக் கேட்கவோ மாட்டார்கள்.

4. படைப்பினங்களின் புரிதல், அல்லாஹ் அவர்களுக்கு புரிந்துகொள்ள வைத்த அளவுடன் வரையறுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏழு வானங்கள், பூமி, அவற்றிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வை யதார்த்தமாகவே துதிக்கின்றன. சிலவேளை அல்லாஹ் தனது படைப்பினங்களில் தான் நாடியோருக்கு அதனைக் கேட்கவும் வைக்கிறான். அப்படியிருந்தும் கூட அது எம்மை விட்டும் மறைக்கப்பட்டே உள்ளன. இதுபற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

﴿تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبۡعُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ وَإِن مِّن شَيۡءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهِۦ وَلَٰكِن لَّا تَفۡقَهُونَ تَسۡبِيحَهُمۡۚ...﴾

ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள்... (அல்இஸ்ராஃ : 44). இவ்வாறுதான் ஷைதான், ஜின்களும் பூமியில் நடமாடுகின்றனர், நபி ஸல் அவர்களிடம் ஜின்கள் சமூகமளித்து, அன்னாருடை ஓதலை மௌனம் காத்து, செவிசாய்த்தனர், பின்னர் தமது சமூகத்திற்கு எச்சரிக்கை செய்யச் சென்றனர். அவ்வாறிருந்தும் அவர்கள் எம்மை விட்டும் மறைக்கப்பட்டே இருந்தனர். இது பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

﴿يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ 27﴾

ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை, அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவன் அவ்விருவரை விட்டு அவ்விருவரின் ஆடையை கழட்டியவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (ஏமாற்றி)யது போன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய அழகிய வார்த்தைகள் கூறி) உங்களை ஏமாற்றி விடவேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு உங்களைப் பார்க்கிறார்கள். நிச்சயமாக நாம், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கினோம். (அல்அஃராப் : 27) படைப்பினங்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாதிருக்கும் போது மறைவான விடயங்களில் ஆதாரபூர்வமாக உறுதியான, அவர்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை மறுக்க முடியாது.

இறை விதியை ஈமான் கொள்ளல் (நம்புதல்)

அல்லாஹ்வின் முன்னைய அறிவின் படியும், அவனது மதிநுட்பத்திற்கமையவும் அவன் உயிரினங்களில் நிர்ணயித்த விடயங்களையே கதர் என அரபியில் கூறப்படுகின்றது.

விதியை இறை விசுவாசிப்பது நான்கு விடயங்களை உட்பொதிந்துள்ளது :

1. சிறிய பெரிய விடயங்கள் அனைத்தையும் பொதுவாகவும் விவரமாகவும், அசலாகவும் என்றும் அல்லாஹ் நன்கறிகிறான் என ஈமான் கொள்ளல். அவனது செயல்கள், அவனது அடியார்களின் செயல்களோடு தொடர்பு பட்ட அனைத்தும் அவற்றில் உள்ளடங்கும்.

2. அவற்றை அல்லாஹ் பாதுகாக்கப்பட்ட பலகையில் எழுதி வைத்துள்ளான் என ஈமான் கொள்ளல். இந்த இரண்டு விடயங்களையும் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான் :

﴿أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ 70﴾

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (அனைத்தும்) ‘லவ்ஹுல் மஹ்பூல்’ எனும் பதிவேட்டில் இருக்கிறது. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக சுலபமானதே! (அல் ஹஜ் : 70)

முஸ்லிமின் அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்:

«كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ».

வானங்கள், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே அல்லாஹ் படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்"20.

3. அனைத்து செயல்களும் அவனது நாட்டப்படியே நடை பெறுகின்றன என ஈமான் கொள்ளல். அவன் செயல் சார்ந்ததும் அவனது படைப்பினங்களின் செயல்கள் சார்ந்த அனைத்தும் அதில் உள்ளடங்கும். அவனது செயல் தொடர்பாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿وَرَبُّكَ يَخۡلُقُ مَا يَشَآءُ وَيَخۡتَارُۗ...﴾

இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான். (அல்கஸஸ் : 68) மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿...وَيَفۡعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ﴾

இன்னும், அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான். (இப்ராஹீம் : 27) மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿هُوَ ٱلَّذِي يُصَوِّرُكُمۡ فِي ٱلۡأَرۡحَامِ كَيۡفَ يَشَآءُۚ...﴾

அவன் கர்ப்பப்பைகளில் தான் நாடியவாறு உங்களை உருவமைக்கிறான்;... (ஆல இம்ரான் : 6). படைப்பினங்களது செயல் தொடர்பாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

﴿...وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ...﴾

(அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான். அவர்கள் உங்களிடம் போரிட்டிருப்பார்கள். (அந்நிஸாஃ : 90) மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿...وَلَوۡ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُون﴾

உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதையும் விட்டுவிடுவீராக. (அல்அன்ஆம் : 112)

4. அனைத்துப் பொருட்களும், அவற்றின் உள்ளமைகள், பண்புகள், அசைவுகள் உட்பட அனைத்தும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன என நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் :

﴿ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ 62﴾

அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் படைப்பாளன் ஆவான். அவன்தான் எல்லாவற்றையும் (கண்காணித்து) பாதுகாப்பவன் ஆவான். ( அஸ்ஸுமர் : 62) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

﴿...وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا﴾

இன்னும், எல்லாவற்றையும் அவனே படைத்தான். அதுமட்டுமல்ல, அவற்றை (எப்படி படைக்க வேண்டுமோ அப்படி) சீராக நிர்ணயம் செய்(து, அவற்றை படைத்)தான். (அல்ஃபுர்கான் : 2) இப்ராஹீம் (அலை) தனது சமூகத்திற்குக் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான் :

﴿وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ 96﴾

அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான். (அஸ்ஸாப்பாத் : 96).

நாம் கூறிய முறைப்படி விதியை இறைவிசுவாசிப்பது அடியானுக்கு அவனது சுய செயல்களில் நாட்டம் கொள்வதற்கோ, அல்லது அவற்றை செய்வதற்கான ஆற்றல் பெற்றிருப்பதற்கோ முடியாது என்ற பொருள் கிடையாது. ஏனெனில் மார்க்கமும், நடைமுறையும் மனிதனுக்கென்று ஆற்றல், விருப்பம், நாட்டங்கள் இருப்பதனையே எடுத்துக்காட்டுகின்றன.

மார்க்கம் : நாட்டம் பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

﴿...فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا﴾

ஆக, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் (தனக்கு) மீளுமிடத்தை (-தங்குமிடத்தை) ஆக்கிக்கொள்வார். (அந்நபஃ : 39). மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿...فَأۡتُواْ حَرۡثَكُمۡ أَنَّىٰ شِئۡتُمۡۖ...﴾

உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். (அல்பகரா : 223) மேலும் வல்லமை பற்றி பின்வருமாறு கூறுகின்றான் :

﴿فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ وَٱسۡمَعُواْ وَأَطِيعُواْ...﴾

ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! (அத்தஃகாபுன் : 16). மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ...﴾

அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். (அல் பகரா : 286)

நடைமுறை : ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு நாட்டமும், ஆற்றலும் இருப்பதை நன்கறிவான். இவ்விரண்டின் மூலமும் ஒரு செயலைச் செய்யவோ, அல்லது செய்யாது விடவோ முடியும். அவனது நாட்டத்திற்கு உதாரணமாக அவன் நடப்பதைக் கூறலாம். அவனது நாட்டமின்றி நடைபெறுவதற்கு உதாரணமாக அவனையறியாமல் அவனது உடம்பில் ஏற்படும் நடுக்கத்தைக் கூறலாம். எனினும் ஓர் அடியானின் நாட்டமும் அதைச் செயல்படச் செய்வதற்கான ஆற்றலும் அல்லாஹ்வின் நாட்டத்தாலும், சக்தியாலும்தான் இடம்பெறுகின்றன; அல்லாஹ் கூறுகிறான்:

﴿لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ 28 وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ29﴾

உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்). நீங்கள் (அதை) நாடுவதில்லை, அல்லாஹ், உலகங்களின் இறைவன், நாடியிருப்பதைத் தவிர. (தக்வீர் : 28-29) மேலும் இப்பிரபஞ்சம் முழுதும் அல்லாஹ்விற்கு சொந்தமானது. அவனது அறிவு, நாட்டமின்றி அதில் எதுவும் நடக்கமாட்டாது.

நாம் கூறிய முறைப்படி விதியை இறைவிசுவாசிப்பது ஒரு அடியானுக்கு கடமையாக்கப்பட்டவற்றை விடுவதற்கோ, அல்லது தடுக்கப்பட்டவற்றை செய்வதற்கோ ஆதாரமாக அமையாது. இந்த எண்ணம் தவறானது என்பதை கீழ்வரக் கூடியவற்றின் மூலம் அறிந்த கொள்ள முடியும் :

முதலாவது: அல்லாஹ் கூறியுள்ளான் :

﴿سَيَقُولُ ٱلَّذِينَ أَشۡرَكُواْ لَوۡ شَآءَ ٱللَّهُ مَآ أَشۡرَكۡنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِن شَيۡءٖۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ حَتَّىٰ ذَاقُواْ بَأۡسَنَاۗ قُلۡ هَلۡ عِندَكُم مِّنۡ عِلۡمٖ فَتُخۡرِجُوهُ لَنَآۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ أَنتُمۡ إِلَّا تَخۡرُصُونَ 148﴾

“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் இணைவைத்திருக்க மாட்டோம்; இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர் (-அனுபவித்தனர்). (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: (“நீங்கள் இவ்வாறு செய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) அறிவு (ஆதாரம்) ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வீண் சந்தேகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. இன்னும், (பொய்யை) கற்பனை செய்பவர்களாகவே தவிர நீங்கள் இல்லை.’’ (அல் அன்ஆம் : 148) விதியை ஆதாரமாகக் கொள்ள முடியுமாயிருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு அவனின் வேதனையைச் சுவைக்கச்செய்திருக்கமாட்டான்.

இரண்டாவது : அல்லாஹ் கூறுகிறான் :

﴿رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا 165﴾

தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). இன்னும், அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். (அந்நிஸாஃ : 165). முரண்படுபவர்களுக்கு விதி ஓர் ஆதாரமாக இருப்பின் தூதர்களை அனுப்புவதன் மூலமும் அவை இல்லாமல் போயிருக்காது. ஏனெனில் அவர்களது வருகைக்குப் பின்னரும் அல்லாஹ்வின் விதியின் பிரகாரம் பாவங்கள் நிகழவே செய்கின்றன.

3. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீ தாலிப் (ரலி) கூறினார்கள் : (புஹாரி, முஸ்லிம்) -குறித்த ஹதீத் புஹாரியின் வாசகமாகும்-.

«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا قَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الْجَنَّةِ».

சொர்க்கம் அல்லது நரகத்தில் தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை. அப்போது மக்களிலிருந்த ஒரு மனிதன்: 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதை) நம்பி இருக்க வேண்டாமா?' என்று வினவினான். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:

«لَا، اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ».

“இல்லை, செயலாற்றுங்கள்! நீங்கள் ஒவ்வொருவருவரும் இலகுபடுத்தப்படுவீர்கள்.” இவ்வாறு கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதினார்:

﴿فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ 5﴾

ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ, ( அல்லைல் :5) முஸ்லிமின் அறிவிப்பில் இவ்வாறு உள்ளது:

«فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ».

ஒவ்வொருவரும் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளார்களோ அதன்பால் இலகுபடுத்தப்பட்டுள்ளனர்"21 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்செயலில் ஈடுபடுமாறு பணித்தார்கள்; விதியைச் சார்ந்திருப்பதைத் தடுத்தார்கள்.

4. அல்லாஹ் அடியார்களுக்கு சிலதை ஏவியும், சிலதைத் தடுத்தும் உள்ளான். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதை பணிக்கவே இல்லை. அல்லாஹ் கூறுகின்றான் :

﴿فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ وَٱسۡمَعُواْ وَأَطِيعُواْ...﴾

ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! (அத்தஃகாபுன் : 16). மேலும் நபியவர்கள் குறிப்பிடுகையில் :

﴿لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ...﴾

அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். (அல்பகரா : 286) ஒரு செயலின் மீது அடியான் நிர்ப்பந்திக்கப்பட்டால் விடுபட முடியாத ஒன்றைக் கொண்டு சிரமப்படுத்தப்பட்டவனாக ஆகி விடுவான். இது தவறாகும். இதனால்தான் அறியாமை, மறதி, பலவந்தம் போன்ற காரணங்களால் பாவம் நிகழ்ந்தால் அவன் மீது குற்றமேதுமில்லை, ஏனெனில் அவன் அதில் மன்னிப்பளிக்கப்பட்டவனாக இருக்கிறான்.

5. அல்லாஹ்வின் விதியானது மறைக்கப்பட்ட இரகசியமாகும், நிகழ்ந்ததற்குப் பின்னரே அதனை அவன் அறிகிறான். ஓர் அடியான் தான் செய்யவிருப்பதை நாடுவதானது அவனது செயலை விட முந்தியதாகும். எனவே அச்செயலை அவன் நாடுவது அதுபற்றிய அல்லாஹ்வின் விதியை ஏற்கனவே அறிந்திராத நிலையிலாகும். இச்சமயம் விதியை ஆதாரமாக எடுக்க முடியாது, ஏனெனில் ஒரு மனிதன் தான் அறியாத ஒரு விடயத்தை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

6. ஒரு நபர் உலக விடயங்களில் தனக்கு எது பொருத்தமானது என்பதில் ஆர்வமாக இருப்பதை நாம் காண்கிறோம்; அவர் அதை உணர்ந்து, தனக்குப் பொருத்தமானதை அடையும் வரை விதியை ஆதாரமாகக் காட்டி வேறொன்றிற்குத் திரும்பமாட்டார். அப்படியானால், அவர் ஏன் தனது மத விவகாரங்களில் தனக்கு நன்மை பயப்பதை விட்டுவிட்டு அவருக்கு தீங்கு விளைவிப்பதன்பால் சென்று, பின்னர் விதியை ஆதாரமாக பயன்படுத்துகிறார்? இரண்டும் ஒன்றல்லவா?!

அதனைத் தெளிவுபடுத்தும் ஓர் உதாரணத்தை உமக்குக் கூறுகின்றேன்:

ஒரு மனிதனின் முன்னிலையில் இரு பாதைகள் இருப்பதென வைத்துக் கொள்வோம். ஒன்று கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்தல், அச்சம், பட்டினி நிறைந்த அராஜகமான ஊரிற்குச் செல்லும் பாதை, மற்றது ஒழுங்கமைப்பான, அச்சமற்ற, செலிப்பான வாழ்வுள்ள, உயிர், உடமை, மானத்திற்கு உத்தரவாதமுள்ள ஊரிற்குச் செல்லும் பாதையாகும். இரண்டில் எப்பாதையில் அவன் செல்வான்?

நிச்சயமாக ஒழுங்கமைப்பும் பாதுகாப்புமுள்ள ஊரிற்குச் செல்லும் பாதையில் தான் அவன் செல்வான். எந்த புத்திசாலியும் அராஜகம் மிகுந்த, அச்சமான பாதையில் சென்று விதியை ஆதாரமாகக் காட்டமாட்டான். அப்படியாயின் மறுமை விடயத்தில் மாத்திரம் சுவனப் பாதையை விட்டுவிட்டு நரகப் பாதையில் சென்று அதற்கு விதியை ஆதாரமாகக்காட்டுவது ஏன்?

மற்றுமோர் உதாரணம் : ஒரு நோயாளிக்கு மாத்திரை குடிக்கும்படி பரிந்துரைக்கப்படுகின்றது, அவனது உள்ளம் விரும்பாமலும் அதனைக் குடிக்கின்றான். தீங்கிழைக்கும் உணவை விட்டும் தடுக்கப்படுகின்றான், அவனது உள்ளம் அதை ஆசைவைத்தும் விட்டுவிடுகிறான். இவையனைத்தும் ஆரோக்கியம், நிவாரணம் கிடைப்பதற்காகவே. விதியை ஆதாரமாகக்காட்டி மாத்திரையை பயன்படுத்தாமல், தீங்குதரும் (தடுக்கப்பட்ட) உணவை உட்கொள்ள முடியாது. அப்படியாயின் மனிதன் ஏன் அல்லாஹ், ரஸூல் ஏவியதை விட்டுவிட்டு, தடுத்ததை செய்து, பின்னர் விதியை ஆதாரமாகக்காட்டுகின்றான்?

7. தான் விட்ட கடமைகளுக்கோ, செய்த தவறுகளுக்கோ விதியை ஆதாரமாகக் காட்டும் ஒருவன் மீது மற்றொருவன் அத்துமீறி அவனது சொத்தை அபகரித்து, மானத்தைப் போக்கிவிட்டு, பின்னர் விதியை ஆதாரமாகக் காட்டி, என்னைக் குற்றம் பிடிக்காதே, அல்லாஹ்வின் விதிப்படிதான் எனது அத்துமீறல் நடந்துள்ளது எனக் கூறினால் பாதிக்கப்பட்ட இம்மனிதன் அவனது ஆதாரத்தை ஏற்கமாட்டானல்லவா?. பிறர் தன்மீது அத்துமீறும் போது விதியை ஆதாரமாக ஏற்காமல், அல்லாஹ்வின் கடமைகளில் தான் அத்துமீறும்போது மாத்திரம் எவ்வாறு அதே விதியை ஆதாரமாகக் காட்டுவது؟!

அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் கை துண்டிக்கப்பட வேண்டிய திருடன் ஒருவன் கொண்டு வரப்பட்டான். அவனுடைய கையைத் துண்டிக்குமாறு பணித்த போது, அவன் சற்று பொறுங்கள் அமீருல் முஃமினீன் அவர்களே, நான் அல்லாஹ்வின் விதிப்படியே திருடினேன் எனக் கூறினான். அப்போது உமர் (ரலி) அவர்கள் நாங்களும் அல்லாஹ்வின் விதிப்படிதான் துண்டிக்கிறோம் என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

விதியை ஈமான் கொள்வதால் பல பயன்கள் கிடைக்கின்றன, அவற்றில் சில பின்வருமாறு :

1. ஒரு செயலைச் செய்யும் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளல். செய்யும் அச்செயலையே சார்ந்திருக்காமல் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்ற முடிவிற்கு வர முடிகிறது.

2. ஒரு மனிதனுக்கு அவன் விரும்பியது நிறைவேறும் போது அவனை தற்பெருமை கொள்ளாமல் இருக்கச் செய்கிறது. ஒருவனது நாட்டம் நிறைவேறுவது அல்லாஹ் அவன் மீது புரிந்துள்ள அருளினாலேயாகும். அவனே அந்த நன்மைக்கான வெற்றிக்கான கரணங்களை ஏற்படுத்திக்கொடுத்தான். எனவேதான், தற்பெருமை கொள்வது அல்லாஹ்வின் இவ்வருளுக்கு நன்றி செலுத்துவதை மறக்கடிக்கச்செய்து விடுகிறது.

3. அல்லாஹ் விதித்ததே அவன் மீது நடைபெறுகிறது என்பதைக்கொண்டு மனநிம்மதியும், ஆறுதலும் கிடைக்கின்றன. தனக்கு விருப்பமான ஒன்றை இழப்பதாலோ வெறுப்பான ஒன்று நிகழ்வதாலோ கலக்கமடையாதிருக்கச் செய்யும். ஏனெனில் இவை, வானம் பூமி எவனுக்கு சொந்தமோ அந்த அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கின்றன [என மன அமைதி கொள்வான்] எனவே, சந்தேகமின்றி அது நிகழ்ந்தே தீரும். இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் :

﴿مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ 22 لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ 23﴾

பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். நீங்கள் இழந்ததற்காக வருந்தாதீர்கள், நீங்கள் பெற்றதற்காக மகிழ்ச்சியடையாதீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு அகந்தையையும் பெருமிதமுள்ளவரையும் விரும்புவதில்லை. (அல்ஹதீத் : 22-23), மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

«عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ».

“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது.”22

விதி விடயத்தில் இரு பிரிவினர் வழிதவறிச் சென்றுள்ளனர் :

1- ஜபரிய்யாக்கள் : மனிதன் அவனது செயல்களில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான் அதிலே அவனுக்கு சக்தியோ சுயவிருப்பமோ இல்லை எனக் கூறுவோர்.

2- கதரிய்யாக்கள் : இவர்கள், அடியார்களுக்கு அவர்களது செயல்களில் தனித்துவமான நாட்டமும் சக்தியும் இருக்கிறது, அவற்றில் அல்லாஹ்வின் நாட்டத்திற்கோ, சக்திக்கோ எந்தப்பிரதிபளிப்பும் இல்லை என்கின்றனர்.

ஜபரிய்யா என்ற முதல் பிரிவினர்க்கு மார்க்க ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் மறுப்பு :

மார்க்க ரீதியிலான மறுப்பு : அல்லாஹ் மனிதனுக்கு நாட்டத்தையும் விருப்பத்தையும் உறுதிப்படுத்தியுள்ளான். மேலும் செயலையும் அவன்பால் இணைத்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

﴿...مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ...﴾

உங்களில் உலக (செல்வ)த்தை நாடி யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடியவரும் உண்டு. (ஆல இம்ரான் : 152). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ...﴾

இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம், (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது... (அல்கஹ்ஃப் : 29), மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿مَّنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ 46﴾

யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். இன்னும், யார் கெட்டதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை. (ஃபுஸ்ஸிலத் : 46).

நடைமுறை ரீதியிலான மறுப்பு : ஒவ்வொரு மனிதனும் அவனுடைய நாட்டத்தோடு செய்யும் செயல்களையும், நாட்டமில்லாமல் நடைபெறும் நிகழ்வுகளையும் பிரித்தறிகிறான். உதாரணமாக உண்ணல், பருகல், வியாபாரம் செய்தல், வாங்குதல் போன்றவை அவனுடைய நாட்டத்தில் நடைபெறுகின்றன. காய்ச்சலால் நடுக்கம் ஏற்படல், உயர்ந்த இடத்திலிருந்து விழுதல் போன்றவை அவனது நாட்டம் விருப்பமின்றி இடம்பெறுகின்றன. முதல் உதாரணத்தில் எந்த நிர்ப்பந்தமுமின்றி அவனுடைய சுயவிருப்பத்தில் நிறைவேற்றுகிறான். இரண்டாவது உதாரணத்தில் அவனுடைய விருப்பமோ நாட்டமோ இல்லாமலேயே அவை நிகழ்கின்றன.

கதரிய்யா என்ற இரண்டாவது பிரிவினருக்கு மார்க்க ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் மறுப்பு :

மார்க்க ரீதியிலான மறுப்பு : அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான். அவனுடைய நாட்டபடியே அனைத்தும் உண்டாகின. மனிதர்களுடைய செயல்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதை அவனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான் :

﴿...وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ﴾

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான். (அல்பகரா : 253). மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

﴿وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ 13﴾

நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் (நரகத்திற்குத் தகுதியானவர்களைக் கொண்டு) நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது. (அஸ்ஸஜ்தா : 13).

பகுத்தறிவு சார்ந்த மறுப்பு : இப்பிரபஞ்சம் முழுவதிற்கும் இறைவனே சொந்தக்காரன். மனிதனும் இப்பிரபஞ்சத்திற்குள் அடங்குகிறான். எனவே அவனும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவன். சொந்தக்காரனின் அனுமதியோ நாட்டமோ இன்றி, அவனது கட்டுப்பாட்டிலுள்ளவற்றில் அவ்வடியானுக்கு எதுவொன்றும் செய்ய முடியாது.

 

இஸ்லாமிய கொள்கையின் இலக்குகள் :

ஹதஃப்" எனும் அரபு வார்த்தைக்கு எறிவதற்காக வைக்கப்படும் குறி, அனைத்துவித குறிக்கோள்கள், நோக்கங்கள் என பல அர்த்தங்கள் உள்ளன.

இஸ்லாமியக் கொள்கையின் இலக்குகள் என்பது அவற்றைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் உன்னதமான நோக்கங்கள், இலக்குகளை குறிக்கின்றன. இவை அதிகமாக உள்ளன. அவற்றுள் சில :

1. அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, உளத்தூய்மையுடன் செயல்படுதலாகும். ஏனெனில் அவனே படைப்பாளன், அவனுக்கு இணை யாருமில்லை. எனவே நோக்கம், வணக்கம் அனைத்தும் அவனை நோக்கி மாத்திரமே இருப்பது அவசியமாகிறது.

2. இதயத்தில் இந்த நம்பிக்கை இல்லாததால் எழும் குழப்பமான தடுமாற்றத்திலிருந்து பகுத்தறிவையும் சிந்தனையையும் விடுவித்தல். ஏனெனில் இந்நம்பிக்கையில்லாத உள்ளம் ஒன்று எந்தவொரு நம்பிக்கையில்லாது வெறுமையாகி, உணர்வுகளுக்கு மாத்திரம் அடிமையாக இருக்கும், அல்லது பல வழிகெட்ட கோட்பாடுகள் மூட நம்பிக்கைகளில் தத்தளிக்கக் கூடியதாக இருக்கும்.

3. உளவியல் மற்றும் சிந்தனை ரீதியான அமைதி ஏற்படல், உள்ளத்தில் கலக்கமில்லை, சிந்தனையில் தடுமாற்றமில்லை. ஏனெனில் இந்தக் கொள்கை ஒரு விசுவாசியை தனது இரட்சகனுடன் இணைக்கின்றது, நிர்வகிக்கும் இரட்சகனாக, சட்டமியற்றும் தீர்ப்பாளனாக அவனை இவ்வடியான் பொருந்திக் கொள்கின்றான். எனவே அவனது விதியை வைத்து உள்ளம் அமைதியடைகின்றது. இஸ்லாத்திற்காக அவனது உள்ளம் விரிந்து கொடுக்கின்றது. மாற்று வழியொன்றை அவன் தேடமாட்டான்.

4. அல்லாஹ்வை வணங்குவதில், அல்லது படைப்பினங்களுடனான தொடர்பில் நெறிபிறழ்வதிலிருந்து நோக்கம், செயல் ஈடேற்றமடைகின்றன. ஏனெனில் இதன் அடிப்படைகளில் இறைத்தூதர்களை விசுவாசம் கொள்வதும் ஒன்றாகும். அது நோக்கத்திலும் செயலிலும் அனைத்து தீய நோக்கங்களிலிருந்தும் ஈடேற்றம் பெற்ற வழிமுறையை உட்பொதிந்துள்ளது.

5. செயல்களில் உறுதியோடும் தீவிரமாகவும் செயற்படல். அதாவது, ஸாலிஹான நல் அமல் செய்யக் கிடைக்கும் எச்சந்தர்ப்பத்தையும் அல்லாஹ்வின் நற்கூலியை ஆதரவு வைத்து தவறவிடாமலிருப்பார், அதே போல் எங்கு தீங்கு நடக்கக் கண்டாலும் அல்லாஹ்வின் தன்டனையைப்பயந்து அவ்விடத்தை விட்டும் தூரமாகிவிடுவார். ஏனெனில், மறுமையில் மீட்டெழுப்பப்பட்டு பின்னர் நமது செயல்கள் அடிப்படையில் கூலிகள் வழங்கப்படுவதை நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது.

அல்லாஹுத் தஆலா கூறுகிறான்:

﴿وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ 132﴾

இன்னும், எல்லோருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை. (அல்அன்ஆம் : 132) மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது கூற்றில் இந்த இலக்கை அடைவதற்காக ஊக்குவித்தார்கள் :

«الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللَّهِ، وَلَا تَعْجِزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ: قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ؛ فَإِنَّ (لَوْ) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ».

பலசாலியான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவனும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவனுமாவான்; மேலும் இருவரிலும் நன்மை உண்டு. உமக்குப் பயனுள்ளவற்றில் ஆர்வம் கொள்வீராக. அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள், இயலாதவராக உணராதீர்கள். உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், 'நான் அப்படிச் செய்திருந்தால், இப்படி நடந்திருக்குமே' என்று சொல்லாதீர்கள். மாறாக, 'இது அல்லாஹ்வின் விதியாகும்; அவன் விரும்பியதைச் செய்கிறான்' என்று கூறுங்கள். உண்மையில், 'இவ்வாறிருந்தால்' என்ற சொல் ஷைத்தான் செயல்படுவதற்கான வழியைத் திறந்து விடும். (ஆதாரம் : முஸ்லிம்23).

6. தனது மார்க்கத்தை நிலைநிறுத்தவும், அதன் தூண்களை உறுதிப்படுத்தவும் அனைத்து வகையான அர்ப்பணிப்புக்களையும் செய்யக்கூடிய ஒரு பலமான சமூகத்தை உருவாக்குதல். இப்பாதையில் தமக்கு ஏற்படும் எச்சிரமத்தையும் அச்சமூகம் பொருட்படுத்தவேமாட்டாது. இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

﴿إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ 15﴾

நம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள்தான். பிறகு அவர்கள் சந்தேகிக்கவில்லை. இன்னும், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்கள். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள். (அல்ஹுஜுராத் : 15).

7. தனிநபர் மற்றும் சமூகத்தை சீர்திருத்துவதன் மூலம் ஈருலக வெற்றியையும் கண்ணியங்களையும் பெற்றுக்கொள்ளல். இது பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

﴿مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ 97﴾

ஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம். (அந்நஹ்லு : 97).

இவைதான் இஸ்லாமியக் (அகீதா) கொள்கையின் சில நோக்கங்களாகும். இவற்றை நாமும் அனைத்து முஸ்லிம்களும் அடைய அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறோம். நிச்சயமாக அவன் கொடையாளன், தயாளன். அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதிலும் அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் உண்டாவதாக

நூலாசிரியரால் எழுதப்பட்ட இவ்வாக்கம் இத்துடன் முடிவுற்றது.

முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)

 

 

 

***

பொருளடக்கம்

 

முன்னுரை 2

இஸ்லாமிய மார்க்கம் 6

இஸ்லாத்தின் அடிப்படைகள் 16

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் 23

அல்லாஹ்வை நம்புதல் ( ஈமான் கொள்ளுதல்) 26

மலக்குகளை ஈமான் கொள்ளல் 64

இறை வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) 76

இறைத்தூதர்களை நம்புதல் (ஈமான் கொள்ளல்) 80

இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் 96

இறை விதியை ஈமான் கொள்ளல் (நம்புதல்) 140

இஸ்லாமிய கொள்கையின் இலக்குகள் : 166

 

***

 


ஆதாரம் : புஹாரி - அத்தியாயம் : ஈமான் - ஹதீஸ் எண்: 8, முஸ்லிம் - அத்தியாயம் : ஈமான் - பாடம்: நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் ஐந்து தூண்களின்மேல் கட்டப்படுள்ளது” என்று கூறியமை - ஹதீஸ் எண்: 16.

ஆதாரம் : முஸ்லிம், கிதாபுல் ஈமான், ஹதீஸ் எண் 8, அபூதாவூத், கிதாபுஸ் ஸுன்னா, விதி பற்றிய பாடம், ஹதீஸ் எண் 4695.

ஆதாரம் : புஹாரி, ஜனாஇஸ் பற்றிய பாடம், ‘ஒரு குழந்தை இஸ்லாமை ஏற்று பின்னர் இறந்து விட்டால், அவன் மீது ஜனாஸா தொழுகை செய்யப்படுமா? மேலும், குழந்தைக்கு இஸ்லாம் முன்வைக்கப்பட வேண்டுமா?’ என்ற தலைப்பு, ஹதீஸ் எண் (1292), முஸ்லிம், விதி பற்றிய பாடம், ‘ஒவ்வொரு புதிதாகப் பிறக்கும் குழந்தையும் இஸ்லாம் எனும் இயற்கை மார்க்கத்தின் மீது பிறக்கிறது என்ற வாக்கியத்தின் அர்த்தம் மற்றும் இறந்த காபிர்களின் குழந்தைகள் மற்றும் முஸ்லிம்களின் குழந்தைகள் பற்றிய தீர்ப்பு’ என்ற தலைப்பு, ஹதீஸ் எண் (2658).

ஆதாரம் : புஹாரி, ஸூரா அத்தூர், ஹதீஸ் எண் : 4854

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம்: ஜும்ஆ - பாடம்: வெள்ளிக்கிழமைப் பிரசங்கத்தில் மழை வேண்டுதல் - ஹதீஸ் எண்: 891.

ஆதாரம் : புஹாரி - அத்தியாயம்: ஜுமுஆ - பாடம்: வெள்ளிக்கிழமைப் பிரசங்கத்தில் மழை வேண்டுதல் - ஹதீஸ் எண்: 891, முஸ்லிம் - அத்தியாயம்: மழை வேண்டித் தொழுகை - பாடம்: மழை வேண்டுதலில் துஆ - ஹதீஸ் எண்: 897.

ஆதாரம் : முஸ்லிமில் ஈமான் என்ற பாடத்தில், ஈமான், இஸ்லாம், இஹ்சான் ஆகியவற்றின் விளக்கம் மற்றும் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஅாலாவின் இறைவிதி இருப்பதாக ஈமான் கொள்வது கட்டாயம் என்பதையும் விளக்கும் பாடம் (8).

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம்: படைப்பின் ஆரம்பம், மலக்குகள் குறித்த பாடம், ஹதீஸ் எண் 3037, முஸ்லிம்: நற்பண்பு, உறவினைப் பேணுதல் மற்றும் ஒழுக்கம் பற்றிய அத்தியாயம், 'அல்லாஹ் ஒரு அடியாரை நேசித்தால், அவனைத் தனது அடியார்களுக்கு நேசமாக்குவான்' என்ற பாடம்,, ஹதீஸ் எண் 2637.

ஆதாரம்: புஹாரி, ஜும்ஆ பற்றிய அத்தியாயம்,  குத்பாவை (உரையை) செவிசாய்த்து கேட்பது என்ற பாடம், ஹதீஸ் எண்: 887, முஸ்லிம், ஜும்ஆ என்ற  அத்தியாயம், ஜும்ஆ நாளில் முன்னதாகச் செல்வதின் மேன்மை என்ற பாடம், ஹதீஸ் எண்: 850.

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம் : தௌஹீத், பாடம்: அல்லாஹ் தாலா, “என் இரு கரங்களாலும் படைத்த ஒன்றுக்காக” என்று கூறியமை, ஹதீஸ் எண்: 7410, முஸ்லிம், அத்தியாயம் : ஈமான், பாடம்: சொர்க்க வாசிகளிலேயே மிகத் தாழ்ந்த நிலை உடையவர், ஹதீஸ் எண்: 193.

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம் : கிப்லா பற்றிய பாடங்கள், பாடம்: எங்கு இருந்தாலும் கிப்லாவை நோக்கித் திரும்புதல், ஹதீஸ் எண்: 392, முஸ்லிம், அத்தியாயம்: பள்ளிகளும், தொழுகை நடைபெறும் இடங்களும், பாடம்: தொழுகையில் மறதி மற்றும் அதற்கான ஸஜ்தா, ஹதீஸ் எண்: 572.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் சொர்க்கம், அதன் இன்ப நலன்கள் மற்றும் அதைச் சார்ந்த மக்களின் விவரணம் பற்றிய அத்தியாயத்தின் கீழ்; உலகம் அழிவது மற்றும் நியாயத் தீர்ப்பு நாளில் மக்களை ஒன்று திரட்டுவது பற்றிய பாடம், ஹதீஸ் எண் 2859 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : புஹாரி, அத்தியாயம் : மழாலிம் (அநீதிகள்), பாடம் : ‘அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள்மேல் உண்டாகட்டும்!’  என்று அல்லாஹ் தஆலா கூறியமை, ஹதீஸ் எண் 2309, முஸ்லிம், அத்தியாயம் : தவ்பா, பாடம் : கொலையாளியின் தவ்பாவை ஏற்குதல்; அவன் பலரை கொன்றிருந்தாலும்கூட, ஹதீஸ் எண் 2768.

ஸஹீஹ் முஸ்லிம், அத்தியாயம்: ஈமான், பாடம் : ஒருவர் நல்ல செயலைச் செய்ய நினைத்தால் அது எழுதப்படும்; ஒருவர் தீய செயலைச் செய்ய நினைத்தால் அது எழுதப்படமாட்டாது, ஹதீஸ் இலக்கம் :131

ஆதாரம் : புஹாரி: தஃப்ஸீர் (விளக்கவுரை) அத்தியாயம், “அவர்களுக்காக (சொர்க்கத்தில்) மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்)தை ஓர் ஆன்மாவும் அறியாது” என்று வரும் வசனத்தைப் பற்றிய பாடம், எண் (4501), முஸ்லிம்: சொர்க்கமும் அதன் இன்பங்களின் பண்புகள் மற்றும் அதன் வாசிகள் (எனும்) நூல், எண் (2824).

முஸ்லிமில்: 'சொர்க்கம், அதன் இன்பங்களின் வர்ணனை மற்றும் அதன் மக்கள்' என்ற நூலில், 'மரணமடைந்தவனுக்குச் சொர்க்கமோ நரகமோ ஆகியவற்றில் உள்ள அவனின் இருப்பிடம் அவனுக்குக் காட்டப்படுதல், மண்ணறை வேதனையை நிலைநிறுத்தலும் அதிலிருந்து பாதுகாவல் தேடுதலும்' என்ற அதிகாரத்தில், ஹதீஸ் எண் 2867 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூதாவூத் அவர்கள் 'ஸுன்னா' எனும் அத்தியாயத்தில், 'கப்ரில் கேள்வி மற்றும் கப்ரின் தண்டனை' என்ற பாடத்தில்; ஹதீஸ் எண் (4753) ல் பதிவு செய்துள்ளார்; மேலும் அஹ்மத் அவர்கள் தனது முஸ்னதில் 'முஸ்னது அல்கூஃபிய்யீன்' பகுதியில், அல் பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸை ஹதீஸ் எண் (18534) ல் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : புஹாரி: வுழூ பற்றிய அத்துயாயம், சிறுநீரை கழுவுதல் பற்றிய பாடம், ஹதீஸ் எண் : 215.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் கதர் பற்றிய அத்தியாயத்தில்;, ஆதம் மற்றும் மூசா (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களுக்கிடையேயான வாதப் பிரதிவாதம் பற்றிய பாடத்தில், ஹதீஸ் எண் 2653 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : புஹாரி, கதர் பற்றிய பாடம், ‘அல்லாஹ்வின் ஆணை நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பாகும்’ என்ற தலைப்பு, ஹதீஸ் எண் (6605), முஸ்லிம், கதர் பற்றிய பாடம், ‘மனிதன் தன் தாயின் கர்ப்பத்தில் எவ்வாறு படைக்கப்படுகிறான் மற்றும் அவனுடைய பிழைப்பு, ஆயுள், செயல், துரதிருஷ்டம் மற்றும் சௌபாக்கியம் எழுதப்படுதல்’ பற்றிய தலைப்பு, ஹதீஸ் எண் (2647).

இந்த ஹதீஸ் முஸ்லிமில், உலகப் பற்றற்ற நிலை மற்றும் நற்பண்புகள் எனும் அத்தியாயத்தில், 'முமினின் எல்லா காரியமும் நன்மையே' என்ற பாடத்தில், ஹதீஸ் எண் 2999 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் முஸ்லிமில், கதர் (விதி) பற்றிய அத்தியாயத்தின் கீழ், பலத்தைக் கொண்டு ஏவுதல், இயலாமையை விட்டு விடுதல், அல்லாஹ்விடம் உதவி நாடுதல், விதிகளை அல்லாஹ்விடம் ஒப்படைத்தல் பற்றிய பாடத்தில், ஹதீஸ் எண் 2664 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிமில் ஈமான் என்ற அத்தியாயத்தில், 'எல்லா மக்களுக்கும் நபி ﷺ அவர்களின் தூதுத்துவத்தில் ஈமான் கொள்வது கட்டாயம் மற்றும் அவரது மார்க்கத்தின் மூலம் மற்ற மதங்கள் செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டுவிட்டன' என்ற பாடத்தில், ஹதீஸ் எண் 153 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.