صِفَةُ العُمْرَةِ
உம்ரா செய்யும் முறை
لِسَمَاحَةِ الشَّيْخِ العَلَّامَةِ عَبْدِ العَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بَازٍ رَحِمَهُ اللهُ
நூலாசிரியர்.
மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்)
உம்ரா செய்யும் முறை
அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.
இது உம்ராக் கடமையில் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பான சுருக்கமான குறிப்புகளாகும்.
அவற்றை இங்கு வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்:
உம்ரா செய்ய இருப்பவர் தனக்கான பயண எல்லையை (மீகாத்) அடைந்ததும், குளித்து, சுத்தமாகிக் கொள்வது விரும்பத்தக்கதாகும். பெண்களும், மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தப் போக்குடன் இருந்தாலும் இவ்வாறே செய்யலாம். ஆனால் அவர்கள் பூரணமாக சுத்தமாகி குளிக்கும் வரை தவாஃபை செய்யக் கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்கள் தமது இஹ்ராம் ஆடையில் இல்லாமல் உடம்பில் வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ள வேண்டும். மீக்காத்தில் குளிக்க முடியாமல் போனால் அதில் குற்றமில்லை. அவர் மக்காவை வந்தடைந்ததும், முடியுமாயின் தவாஃப் செய்வதற்கு முன்னர் குளித்துக்கொள்வது விரும்பத்தக்கது.
ஆண்கள் உடலின் உறுப்புகளுக்கு ஏற்றவாறு தைக்கப்பட்ட அனைத்து ஆடைகளையும் கலைந்து, இரு புடவைகளை எடுத்து, ஒன்றை வேஷ்டியாகவும் மற்றதை போர்வையாகவும் போர்த்திக் கொள்ள வேண்டும். அவ்விரண்டும் வெண்ணிறமாகவும், சுத்தமாகவும் இருப்பது விரும்பத்தக்கது.
பெண்கள் மஹ்ரம் அல்லாத ஆண்களுக்கு முன் அணியும் ஆடைகளான நிகாப், புர்கா, கையுறை போன்றவற்றைக் கலைந்து முகமும், மணிக்கட்டு வரை இரு கைகளும் மாத்திரம் தெரியும் வகையில் ஆடம்பரமற்ற முறையில், வழமையான ஆடைகள் போன்று தமது ஆடைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்கான இஹ்ராம் ஆடையாகும்.
பின்பு உம்ராக் கடமையை நிறைவேற்ற செல்கிறேன் என்பதை மனதால் நினைத்து,
ﵟ اللَّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً ﵞ அல்லது ﵟ لَبَّيْكَ عُمْرَةً ﵞ
என வாயால் மொழிய வேண்டும். இஹ்ராம் நிய்யத் வைப்பவர், தனது நோயினாலோ, அல்லது பயங்கர சூழ்நிலைகளினாலோ உம்ரா செய்ய முடியாமல் போகும் என அஞ்சினால், தாம் இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது, பின்வருமாறு முன்நிபந்தனையிட்டு நிய்யத் வைக்க வேண்டும்:
ﵟ فَإِنْ حَبَسَنِي حَابِسٌ فَمَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي ﵞ
இதன் பொருள்: "இறைவா! நீ எந்த இடத்தில் (உம்ரா கடமையை செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுவே நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்"1
பின்பு கஃபாவை வந்தடையும் வரை நபியவர்கள் கூறிய முறையில் பின்வரும் தல்பியாவை அதிகம் மொழிந்து, திக்ர்களிலும், துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட வேண்டும்.
ﵟ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ ﵞ
பொருள்: “வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.”
மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும், வலது காலை முன்வைத்து, ஏனைய பள்ளிவாயில்களுக்குள் நுழையும் போது ஓதும் துஆவைக் கூற வேண்டும்:
ﵟ بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ﵞ
பொருள்: “அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் மீது அருளும் சாந்தியும் உண்டாகட்டும். தூக்கியெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து மகத்துவம் பொருந்திய அல்லாஹ்வைக் கொண்டும், அவனது மகத்தான திருமுகத்தைக் கொண்டும், நிரந்தரமான அவனது அதிகாரத்தைக் கொண்டும் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லாஹ்வே! எனக்காக உமது கருணையின் கதவுகளைத் திறந்து விடுவாயாக.”
பள்ளியினுள் நுழைந்ததும், தல்பியாவை நிறுத்தி விட்டு, ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். சனநெறிசல் ஏற்பட்டு, மக்களுக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் அதன் முன் நின்று, வலது கையால் அதைத் தடவ வேண்டும். முடியுமானால் அதற்கு முத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு தொடும் போது,
ﵟ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ﵞ
எனக் கூற வேண்டும். முத்தமிட முடியால் போனால் தனது கை, கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட வேண்டும். பின்பு எதைக்கொண்டு தொட்டாரோ அதை முத்தமிட்டுக்கொள்ளவேண்டும். அவ்வாறும் தொட முடியாமல் போனால் அது இருக்கும் திசையை நோக்கி கையசைக்க வேண்டும். இதன் போது,
ﵟ اللَّهُ أَكْبَرُ ﵞ
எனக் கூறிக்கொள்ள வேண்டும். அவ்வாறு சைகை செய்யும் போது கையை முத்தமிடமாட்டார்.
தவாஃப் என்பது தொழுகை போன்ற வணக்கம் என்பதால், அது நிறைவேறுவதற்கு, சிறு, பெரும் தொடக்குகளிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனினும், இதன்போது பேசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கஃபாவை தனது இடது பக்க திசையில் வைத்து தவாஃபை ஆரம்பித்து, ஏழு சுற்றுக்கள் செய்யவேண்டும். கஃபாவின் நான்காவது மூலையான, ருக்னுல் யமானியை அடைந்ததும், முடியுமானால் முத்தமிடால் அதைத் தொட வேண்டும். இதன் போது,
ﵟ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ﵞ
எனக் கூற வேண்டும். தொட முடியாமல் போனால் கையால் சைகினை காட்டாமலும், தக்பீர் கூறாமலும் கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் நபியவர்கள் அவ்வாறு செய்ததாக அறிவிக்கப்படவில்லை.
ஒவ்வொரு தடவையிலும் ஹஜருல் அஸ்வதை அடையும் போதும் நாம் ஏலவே கூறியது போன்று, அதைத் தொட்டு முத்தமிடவேண்டும். அவ்வறில்லாவிட்டால் சைக்கினை செய்து தக்பீர் கூறுவார். அதிலும் குறிப்பாக ஆண்கள், தவாபுல் குதூமின் (மக்காவுள் வந்தவுடன் முதலில் செய்யப்படும் தவாப்) முதல் மூன்று சுற்றுகளிலும் சற்று துள்ளித் துள்ளி ஓடுவது ஸுன்னாவாகும்.
தவாஃபின் போது ஆண்கள் எல்லா சுற்றுக்களிலும், இழ்திபாஃ அணியவேண்டும். மேலாடையின் நடுஓரப் பகுதியை தமது வலது கையின் அக்குளுக்கு கீழ் வைத்து, இரு ஓரப் பகுதிகளையும் இடது கை தோல் புயத்திற்கு மேல் போட வேண்டும்.
தவாஃபின் அனைத்து சுற்றுகளிலும் துஆப் பிரார்த்தனைகளிலும், திக்ருகளிலும் அதிகம் ஈடுபடுவது ஸுன்னாவாகும்.
தவாஃபிற்கு என பிரத்தியேகமான எவ்வித துஆக்களோ, திக்ர்களோ இல்லை. ஆகையால் முடியுமான அனைத்து துஆக்களையும், திக்ர்களையும் இதில் ஓதிக்கொள்ள முடியும். கஃபாவின் நான்காவது மூலையான ருக்னுல் யமானியைக் கடந்து ஹஜருல் அஸ்வத் உள்ள முதல் மூலைக்கு வரும் போது:
ﵟ …رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١ﵞ [البقرة:201]
எனக் கூற வேண்டும்.
"பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகத்திலும், மறுமையிலும் அழகானதை எங்களுக்கு நல்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக! "
இது நபியவர்களிடமிருந்து உறுதியாக வந்துள்ளதால், ஒவ்வொரு சுற்றிலும் இவ்வாறு கூறுவார்.
ஏழாம் சுற்றை முடிக்கும் போது, ஏற்கனவே கூறப்பட்டது போல் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு, அல்லது அதை நோக்கி கையசைத்துவிட்டு தக்பீருடன் முடித்துக்கொள்ள வேண்டும். அதோடு மேலாடையை மீண்டும் மார்பின் இருபுறமும் தொங்கும் வகையில் அணிந்து கொள்ள வேண்டும்.
பின்பு, முடியுமானால், மகாமு இப்றாஹிமுக்குப் பின் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ள வேண்டும். அவ்வாறு தொழ முடியாமல் போனால் பள்ளியில் எப்பகுதியிலிருந்தாவது இரண்டு ரக்அத்களை தொழுது கொள்ளலாம். அதில் முதல் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவிற்கு பின் சூறதுல் காஃபிரூனையும், இரண்டாம் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவிற்கு பின் சூறதுல் இஃலாஸையும் ஓதிக்கொள்ளவது மிகவும் ஏற்றமானது. இது தவிர வேறு சூறாக்களை ஓதிக்கொள்ளவும் முடியும். இரண்டு ரக்அத்களையும் தொழுது முடித்த பின் முடியுமானால் ஹஜருல் அஸ்வதிடம் சென்று வரலாம்.
பின்பு ஸஃபா மலைக்கு செல்ல வேண்டும். அதன் அடிப்பாகத்தில் நின்றுகொண்டோ அல்லது மேல்பகுதிக்கு ஏறியோ (ஏறுவது ஏற்றமாகும்):
﴿إِنَّ ٱلصَّفَا وَٱلمَروَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ..﴾ [البقرة: 158]
எனும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்கொள்ள வேண்டும்.
"பொருள்: நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. "ஸூரா அல்பகரா: 158
அங்கிருந்து கிப்லாவை முன்னோக்கி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, தக்பீர் கூறி, பின்வரும் துஆவை ஓதிக்கொள்வது ஸுன்னாவாகும்.
ﵟ لَا إِلَـٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لَا إِلَـٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَـٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ.ﵞ
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்.
இதை ஓதிவிட்டு, இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மீண்டும் மேற்கூறப்பட்ட துஆவை ஓதி பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும்.
பின்பு அங்கிருந்து மர்வா மலையை நோக்கி நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் போது இடையில் காணப்படும் பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடைந்ததும், அடுத்த பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடையும் வரை ஆண்கள் சற்று விரைந்து செல்லவேண்டும்.
பெண்களின் அவ்ரத் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் அவ்வாறு ஓடக் கூடாது. பின்பு மர்வா மலையை அடைந்து, அதன் அடிவாரத்தில் நின்றோ, அல்லது மேல் ஏறியோ (ஏறுவது முடியுமாக இருப்பின் அதுவே ஏற்றமாகும்) ஸஃபா மலையில் செய்தது போல் செய்ய வேண்டும். பின்பு அதிலிருந்து இறங்கி ஸஃபா நோக்கி நடக்க வேண்டும். அதிலும் பச்சை நிற மின்விளக்குப் பகுதியில் ஆண்கள் விரைந்து செல்லவேண்டும். ஒரு மலையிலிருந்து மறு மலைக்குச் செல்வது ஒரு சுற்றாக கருதப்படும். இவ்வாறு ஏழு சுற்றுகள் இரு மலைக்களுக்குமிடையில் செய்ய வேண்டும். வாகனங்களில் ஏறிப்போனாலும், குறிப்பாகத் தேவையேற்படும் போது, பிழையில்லை.
ஸஈ செய்யும் போது, முடியுமான அளவு அதிகமாக துஆப் பிரார்த்தனைகளிலும், திக்ருகளிலும் ஈடுபட வேண்டும். இதன் போது சிறு, பெரு தொடக்குகளிலிருந்து சுத்தமாக இருப்பது மிகவும் சிறந்தது. சுத்தமின்றி ஸஈ செய்தாலும் அதுவும் நிறைவேறும்.
ஸஈ செய்து முடிந்ததும் ஆண்கள் தமது தலைமுடியை மலித்துக்கொள்ளவோ, குறைத்துக்கொள்ளவோ வேண்டும். மலித்துக்கொள்வது மிகவும் ஏற்றமானது. அவர் மக்காவுக்கு வந்தது, ஹஜ்ஜுடைய காலம் சமீபமாக இருக்கும் போதாக இருந்தால், ஹஜ்ஜை நிறைவு செய்யும் போது முழுமையாக மலித்துக்கொள்வதற்காக, இப்போது தலை முடியை குறைத்துக்கொள்வது மிகவும் ஏற்றமானது. பெண்களைப் பொறுத்தவரையில் தங்களது முடியை ஒன்று சேர்த்து, விரல் நுனியளவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ முடிகளை வெட்டிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்தவர் இவை அனைத்தையும் செய்து முடித்தால் அவரது உம்ரா நிறைவேறி விடும். - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அவருக்கு இஹ்ராம் நிய்யத் வைத்தவுடன் தடுக்கப்பட்ட அனைத்துத் தடைகளும் நீங்கிவிடும்.
எமக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தை சரியாக விளங்கி, அதில் உறுதியாக இருந்து, அதன் படி நடப்பதற்கு வல்ல இறைவன் அருள்புரிவானாக. எம் அனைவரிடமிருந்தும் நற்கருமங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. தூய அவனே, கொடையாளன், கண்ணியமானவன்.
அல்லாஹ் தனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் இறுதி நாள் வரை அவரைப் பின்பற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவானாக.
இது அஷ்ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் காரியாலயத்தில் இருந்து ஹி 1426.02.13 அன்று வெளியிடப்பட்ட உம்ரா தொடர்பான சுருக்கமான குறிப்பாகும். (இது ஷேக் அவர்களின் ஃபத்வா களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளது. 17/425 )
இது ழுபாஆ பின்த் ஸுபைர் (ரழி) அவர்களுக்கு நபியவர்கள் கற்றுக்கொடுத்ததாகும். நூற்கள்: புஹாரி 5089, முஸ்லிம் 1207.