مَنْ خَلَقَ الكَونَ؟ وَمَنْ خَلَقَنِي؟ وَلِمَاذَا؟
பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;?
(எனது படைப்பின் இலக்குதான் என்ன?)
اللَّجْنَةُ العِلْمِيَّةُ
بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ
மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மத விவகாரங்களுக்கான தலைமைத்துவத்தின் அறிவியல் குழு
بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ
பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்;? (எனது படைப்பின் இலக்குதான் என்ன?)
நான் சரியான பாதையில் தானா பயணித்துக்கொண்டிருக்கிறேன் ?
வானங்கள்,பூமி மற்றும் அவற்றில் உள்ள அறிந்திரமுடியாத மிகப்பிரமாண்ட படைப்புகளையெல்லாம் படைத்தவன் யார்?
வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்?
மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்?
உமது உடல் உறுப்புக்களில் துல்லியமான கைவினைத்திறனை உருவாக்கி, உமது உருவத்தை எவ்வித முன்மாதிரியுமின்றி அழகாக்கி வடிவமைத்தவன் யார்?
பல்வேறு வித்தியாசங்களுடனும், பன்முகத் தன்மையுடனும் இவ்வுயிரினங்களைப் படைத்துள்ளமை பற்றி சிந்தித்துப் பார், எண்ணிலடங்காத பல்வேறு தோற்றங்களில் அவற்றை அற்புதமாகப் படைத்தவன் யார்?
மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல ஆண்டுகளாக மிகவும் துல்லியமாக கட்டுக்கோப்புடன் இயங்கி நிலைபெறுவதற்கு எவ்வாறு ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது?
இவ்வுலகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது ஆளக்கூடிய முறைமைகளை (வாழ்வு, மரணம், உயிரினங்களின் இனப்பெருக்கம், இரவு பகல், பருவகால மாற்றங்கள் போன்றவை) வகுத்தவன் -நிறுவியவன்- யார்?
இப்பிரபஞ்சம் தன்னைத்தானே படைத்துக்கொண்டதுவா? அல்லது இல்லாமையிலிருந்து வந்ததா? அல்லது எதேச்சையாக உருவானதா? இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :
﴿أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ٣٥ أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ بَلْ لَا يُوقِنُونَ 36﴾
ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா? (35)
இவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். (36)
( அத்தூர் : 35-36)
நாமே எம்மைப்டைத்துக் கொள்ளவில்லையெனில், இல்லாமையிலிருந்து, எதேச்சையாக நாம் வந்தோம் என்பதும் அசாத்தியமானது எனில், எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லாது வல்லமையும் மகத்துவமிக்க இப்பிரபஞ்சத்ததை படைத்த ஒருவன் உள்ளான் என்பதை இது உறுதிப்படுத்துகிறதல்லவா? இப்பிரபஞ்சம் தன்னை தானே சிருஷ்டித்துக்கொண்டது! அல்லது இல்லாமையிலிருந்து வந்தது! அல்லது எதேச்சையாக தோன்றியது என்பது போன்ற கருத்துக்கள் யாவும் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள முடியாத அசாத்தியமான வாதங்களே .
புரிதல், பகுத்தறிவு, ஆன்மா, உணர்வுகள், பாசம் போன்ற, மனிதன் தனது புறக்கண்களால் காணாத விடயங்களை நம்புவது ஏன்? அவைகளின் பிரதிபலிப்புகளை –விளைவுகளை தனது புறக்கண்களால் அவன் காண்பதால் அல்லவா! அவ்வாறாயின் இந்த மிகப்பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்தவனின் பிரதிபலிப்புகளான –விளைவுகளான- உயிரினங்களையும், அவனின் நேர்த்தியான கைவினைகளையும், அவனின் அளப்பரிய கருணையையும் காணும் மனிதன் அவனின் இருப்பை எப்படி ஏற்றுக்கொள்ளாது இருக்க முடியும்?
இந்த வீடு எவரும் நிர்மாணிக்காமலே உருவானது! அல்லது இந்த வீட்டை இல்லாமை என்பது உருவாக்கியது என்று கூறினால் பகுத்தறிவுள்ள எவரும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா! அதே போன்று இம்மாபெரும் பிரபஞ்சம், படைப்பாளன் இன்றி உருவானது என்று கூறுவோரை எப்படித்தான் சிலர் நம்புகிறார்களோ தெரியவில்லை! அதே போன்று இம்மாபெரும் பிரபஞ்சத்தின் நேர்த்தியான ஒழுங்கு தற்செயலாக உருவானது என்று கூறப்படுவதை ஒரு பகுத்தறிவுள்ள ஒருவர், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இவை அனைத்தும், நம்மை ஒரே முடிவின்பால் தான் இட்டுச்செல்லுகிறன. அதாவது, இந்த பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் மாபெரும் சக்திவாய்ந்த ஒர் இறைவன் இருக்கிறான், அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன், அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் செல்லுபடியற்றவை. அவை வணங்குவதற்கான எத்தகைய தகுதியுமற்றவை!
மாபெரும் சிருஷ்டிகர்த்தா எனும் இரட்சகன்
இந்தப்பிரபஞ்சத்தைப் படைத்த ஒர் இறைவன் உள்ளான். அவன்தான் இப்பிரபஞ்சத்தின் உரிமையாளனும் நிர்வகிப்பாளனுமாவான். அவனே இங்குள்ள உயிரினங்களுக்கு தேவையான அத்துனை வாழ்வாதாரங்களை வழங்குபவன். உயிர் கொடுப்பவன், மரணிக்கச்செய்பவன். இப்பூமியை படைத்து அதனை உயிரினங்கள் வாழ்வதற்கு பொருத்தமானதாகவும், இசைவானதாகவும் அவனே ஆக்கினான். மேலும் வானங்களையும் அதிலுள்ள மிகவும் பிரமாண்டமான அம்சங்களையும் அவனே சிருஷ்டித்தான். அத்துடன் சூரியன், சந்திரன், இரவு பகல் போன்றவைகளுக்கான நுனுக்கமான, சீரிய இயக்க ஒழுங்கொன்றை ஏற்படுத்தியிருப்பது அவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் எடுத்துக் காட்டுகிறது.
அவன்தான் நாம் உயிர்வாழ்வதற்கு அவசியமான, காற்றை எமக்கு வசப்படுத்தித் தந்தவன். அவன்தான் எமக்குப் மழையைப் பொழியச் செய்து கடல்களையும், நதிகளையும் வசப்படுத்தித் தந்தான். தாயின் வயிற்றில் நாம் கருவாக, மிகவும் பலயீனமானவர்களாக இருந்த போது எமக்கு ஊட்டச்சத்தை தந்து நம்மை வளர்த்து பாதுகாத்து, நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம் நரம்புகளில் இரத்தத்தை ஒடச்செய்பவனும் அவனே!
படைத்து, பரிபாலித்து வாழ்க்கை வசதிகளை தருகின்ற அந்த இறைவன் அவன்தான் உயர்வும் கண்ணியமும் தூய்மையும் நிறைந்த அல்லாஹ்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ 54﴾
நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
(அல் அஃராப் : 54)
அல்லாஹ்வே, இந்த பிரபஞ்சம் முழுவதிலும் நாம் கண்களால் காணும் மற்றும் காணாத அனைத்தினதும் சிருஷ்டி கர்த்தாவும் இறைவனும் ஆவான். அவனைத் தவிரவுள்ள அனைத்தும் அவனின் படைப்புகளாகும். அவன் ஒருவன் மாத்திரமே வணங்கி வழிபட (நாம்) வணக்கங்களை செலுத்த தகுதி பெற்றவன். அவனுடன் இணைத்து எவரையும் வணங்குதல் கூடாது. அவனின் ஆட்சியிலோ, படைத்தலிலோ, நிர்வாகத்திலோ மற்றும் வணக்கத்திலோ அவனுக்கு இணையான எவரும் கிடையாது.
ஒரு வாதத்திற்கு நாம் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனான அல்லாஹ்வுடன் வேறுகடவுளர்கள் உள்ளார்கள் என்று வைத்துக்கொண்டால், இப்பிரபஞ்சத்தின் இயக்க ஒழுங்கு சீர்குழைந்து விடும்! ஒரே நேரத்தில் இப்பிரபஞ்சத்தின் விவகாரங்களை திட்டமிடும் இரு கடவுளர்கள் இருப்பது பொருத்தமாக ஒரு போதும் அமையாது. அங்கே சீர்கேடும், குழப்பமும் உருவாகிவிடும். இது குறித்து உண்மையான இறைவனாகிய அல்லாஹ் ,இவ்வாறு பிரஸ்தாபிக்கிறான் :
﴿لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا...﴾
(வானம், பூமி) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்திருக்கும்.
(அல் அன்பியா : 22)
படைத்து பரிபாலித்து இரட்சிக்கும் இறைவனின் பண்புகள்;
இரட்கனான அல்லாஹ்விற்கு கணக்கிடமுடியாத அளவிற்கு அழகிய திருநாமங்கள் உண்டு. அதே போன்று அவனின் பரிபூரணத்தன்மையையும் மகிமையையும் எடுத்துக்காட்டும் அதிகமான உயர் பண்புகளும் அவனுக்குண்டு. அல்காலிக் (சிருஷ்டிகர்த்தா) அல்லாஹ் (அதன் கருத்து வணக்கத்திற்கு தகுதியான ,இணை துணையற்ற ஒரே இறைவன்.) அல் ஹய்யு (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிர்வகிப்பவன்) அர்ராஸிக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்) அல்கரீம் (மிகப்பெரும் கொடையாளன்) போன்றன அவனுக்கே உரித்தான சில பெயர்களாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :
﴿اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ 255﴾
அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்.
(பகரா :255).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١ اللَّهُ الصَّمَدُ ٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ 4﴾
(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.(1)
அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்). (2)
(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.) (3)
இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. (4)
(இஃலாஸ் : 1- 4).
வணங்கி வழிபடக்கூடிய இறைவன் நிறைவான பண்புகளைப் பெற்றுள்ளான்.
இறைவனாக ஏற்று வழிபடத்தகுதியானவன் என்பது அவன் பெற்றிருக்கும் பண்புகளில் ஒன்றாகும். எனவே அவன் தவிரவுள்ள அத்துனை உயிரினங்கள் மற்றும் படைப்புகள் யாவும் சிருஷ்டிக்கப்பட்டவை என்பதுடன் பணிகள் சுமத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் செயல்படுபவைகளாகும்.
அல் ஹய்யுல் கய்யூம் என்பது அவனின் பண்புகளில் உள்ளவையாகும். இதன் கருத்து உயிரோடிருப்பவன் நிலையானவன் நிர்வகிப்பவன் என்பதாகும். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உயிர்கொடுத்து, அவற்றை இல்லாமையிலிருந்து படைத்தான். எனவே அவன்தான் அதன் இருப்பிற்கும்; வாழ்வாதாரத்திற்கும், தேவைக்கும் பொறுப்பாளனாவான். ஆகவே இறைவன் என்றும் உயிரோடு இருப்பவன் அவன் மரணிப்பதில்லை அழிவென்பதே அவனுக்குக் கிடையாது அது சாத்தியமற்றது. அவன் நிலையானவன் அவன் ஒரு போதும் தூங்குவதுமில்லை. மாறாக சிறுதூக்கமோ பெரும் தூக்கமோ அவனை பீடிப்பதில்லை. இவ்வகை அற்பமான குறைகளை விட்டும் அவன் தூய்மையானவன்.
அவனின் பண்புகளுள்; (அல் அலீம்) யாவற்றையும் அறிந்தவன் என்பதும் ஒன்றாகும். அதாவது வானம் பூமியில் உள்ள எந்த ஒன்றும் அவனுக்கு மறைந்தவை அல்ல என்பது இதன் அர்த்தமாகும்.
அஸ்ஸமீஉல் பஸீர் (நன்கு செவிமடுப்பவன் பார்ப்பவன்) என்பது அவனின் பண்புகளில் உள்ளவையாகும். எல்லாவகையான ஓசையையும் செவிமடுப்பவன்; எல்லாப்படைப்புகளையும் பார்ப்பவன் என்பது இதன் கருத்தாகும். உள்ளத்தின் ஊசாட்டங்களையும் இதயங்கள் தன்னுள் புதைத்து மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் அறிகிறான். வானம் பூமியில் உள்ள எந்த ஒன்றும் அவனுக்கு மறைந்தவை அல்ல.
அல்கதீர் என்பது (மிகவும் சக்தியுள்ளவன் -வல்லமைமிக்கோன்- ) அவனின் பண்புகளில் ஒன்றாகும். எனவே அவனை இயலாமல் செய்கிற எந்த ஒன்றும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது. அவனின் நாட்டத்தை எவராலும் புறந்தள்ளவோ நிராகரிக்கவோ முடியாது. நாடியதை அவன் செய்து முடிப்பான். நாடியதை கொடுக்காது தடுத்துக் கொள்வான். எந்தக் காரியத்தையும் முற்படுத்துவான்; பிற்படுத்துவான் அதில் அவனுக்கே உரித்தான ஆழமான ஞானமும் நுட்பமும் பொதிந்திருக்கும்.
படைத்து,போசித்து திட்டமிடுபவன் என்பது அவனின் பண்புகளில் சிலதாகும். அவனே சிருஷ்டிகளை படைத்து அவற்றை திட்டமிட்டு நிர்வகிக்கிறான்.படைப்புகள் அனைத்தும் அவனின் அதிகாரத்திற்கும் ஆளுகைக்குக் கீழுமே உள்ளன.
அவனின் பண்புகளில், நிர்க்கதிக்குள்ளானவரின்-தேவையுடையோரின் பிரார்த்தனைக்கு பதிலளித்தல்; துன்பப்படுபவர்களுக்கு நிவாரணம் அளித்தல்; மற்றும் பேரிடரை நீக்குதல் போன்றன உள்ளன. உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவை கடும் துயர் அல்லது நெருக்கடி போன்றவற்றில் வீழ்ந்து விட்டால் நிர்கதியினால் அவனிடமே புகழிடம் தேடி ஓதுங்குகின்றன.
வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும். ஏனெனில் அவன் மாத்திரமே வணக்கத்திற்கு முழுமையான தகுதி படைத்தவன். அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்கப்படும் அனைத்தும் அசத்தியக் கடவுள்களாகும். அவை அனைத்தும் மரணத்திற்கும் அழிவிற்கும் உட்படக்கூடியவையே!
அல்லாஹ்வின் வல்லமை மற்றும் மகத்துவத்தை புரிந்து கொள்ள அவன் எமக்கு பகுத்தறிவை தந்துள்ளான். நல்லதை விரும்பி தீயதை விரும்பாமல் இருக்கும் இயல்பை எம்மில் அவன் விதைத்துள்ளான். அந்த இயல்பு அகிலங்களின் அதிபதி அல்லாஹ்விடம் அடைக்களம் தேடிச்சென்றுவிட்டால் அது அமைதிபெறுகிறது. (அவன் படைத்துள்ள) இந்த இயல்பு அவன் பூரணமானவன் குறையற்றவன் என்பதை காட்டுகின்றது.
ஆகவே ஒரு பகுத்தறிவு படைத்த புத்தியுள்ளவன், எல்லாப்பண்புகளாலும் நிறைவான, எவ்விதக் குறைகளுமற்ற ஒருவனை வணங்குவதே அவனுக்குப் தகுதியான விடயமாகும். ஆகவே மனிதன்; குறைகளுடைய அவனைவிட தகுதியில் குறைந்த ஒன்றை எப்படி வணங்கிட முடியும?
இந்த அடிப்படையில், கடவுள் என்பவன் மனிதனாகவோ அல்லது சிலையாகவோ அல்லது மரமாகவோ அல்லது மிருகமாகவோ , இருக்க முடியாது!
இறைவன் -அல்லாஹ் வானங்களுக்கு மேலால் அர்ஷிற்கு அப்பால் உள்ளான். தனது படைப்புகளை விட்டும் அவன் வேறுபட்டவன்; தனித்துவமானவன். அவனின் மெய்நிலையில் படைப்புகளின் பண்புகள் எதுவும் கிடையாது. அதே போன்று படைப்புகளில் அவனின் மெய்நிலைப்பண்புகள் ஏதும் கிடையாது. அவன் எந்தப்படைப்பினுள்ளும் சங்கமிப்பதோ, இறங்குவதோ பிரதிபலிப்பதோ கிடையாது.
இறைவனுக்கு ஒப்பான எதுவும் கிடையாது. அவன் நன்கு செவிமடுப்பவனும் யாவற்றையும் பார்ப்பவனுமாவான். அவனுக்கு நிகராக எவரும் கிடையாது. அவன் படைப்பினங்களிலிருந்து தேவையற்றவன் மற்றும் தன்னிறைவானாவன். அவன் தூங்கவோ சாப்பிடவோ மாட்டான். அவன் மகத்தானவன். அவனுக்கு மனைவியோ மக்களோ இருக்கமுடியாது. சிருஷ்டிகர்த்தாவுக்கென மகத்தான பண்புகள் உண்டு. அவன் ஒரு போதும் தேவை அல்லது குறை போன்ற பண்புகளை கொண்டவனாக இருக்க மாட்டான்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ ٧٣ مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ 74﴾
மக்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்பட்டுள்ளது, அதைக் கவனமாக கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்குகிறவர்கள், எல்லோரும் கூடினாலும் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ ஒரு பொருளை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டால், அதை மீட்டெடுக்க முடியாது. தேடுபவர் மற்றும் தேடப்படும் பொருள் இருவரும் பலவீனமானவர்கள். (73)
அவர்கள் அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்குத் தக்கவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா வலிமையுடையவன் மிகைத்தவன் ஆவான். (74)
(அல் ஹஜ் : 73-74)
மகத்துவம் நிறைந்த சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் -இறைவன்- எம்மைப்படைத்தது ஏன்? அவன் எம்மிடமிருந்து எதனை விரும்புகிறான்?
ஞானமும், முக்காலம் பற்றிய அறிவும் குறைவின்றி நிறைவாகப் பெற்ற அல்லாஹ் இந்த உயிரினங்களை எவ்வித இலக்கின்றி படைத்திருப்பான்? அல்லது வீணாக படைத்தான்? என்பதை பகுத்தறிவு கூட ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
இவ்வளவு நுணுக்கமாகவும்; கச்சிதமாகவும் -செம்மையாகவும்- நம்மைப் படைத்து, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் நமக்குக் வசப்படுத்தித் தந்தோனாகிய அல்லாஹ்-இறைவன்- எந்த நோக்கமும் இல்லாமல் நம்மைப் படைத்துள்ளான்! அல்லது நம்மை ஆட்கொள்ளும் மிக முக்கியமான கேள்விகளான ஏன் நாம் இங்கே வந்தோம்? இறந்த பிறகு எமது நிலை என்ன? நமது படைப்பின் நோக்கம் யாது? போன்ற வினாக்களுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டான் என்பதை எமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
அநியாயக்காரனுக்கு- தண்டனையோ, நல்லவருக்கு வெகுமதியோ கிடையாது என்பதை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்;
﴿أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ 115﴾
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?
(முஃமினூன் : 115)
மாறாக அல்லாஹ் இப்பிரபஞ்சத்தின் எமது இருப்புக்கான இலக்கை எமக்கு அறிமுகப்படுத்தி தருவதற்காக இறைத்தூதர்களை அனுப்பி, நாம் அவனை எப்படி வணங்குவது, அவனை நெருங்குவதற்கான வழிமுறை யாது? அவன் எம்மிடம் எதை விரும்புகிறான்? அவனின் திருப்தியை பெரும் வழி முறை யாது? மரணத்தின் பின்னரான எமது நிலை குறித்த விடயங்களையெல்லாம் அவர்களினூடாக காட்டித் தந்தான்.
வணங்கி வழிபடுபவதற்கும், வணக்கங்களை செலுத்துவதற்கும் தகுதியான ஒருவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை எமக்கு அறியத்தரவும் அவனை எப்படி வணங்க வேண்டும் என்ற வழிமுறைகளை கற்றுத் தரவுமே அல்லாஹ் அவனது தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தான். அவர்கள் எமக்கு அவனின் கட்டளைகளையும், (தவிர்ந்து நடக்க வேண்டிய) தடுக்கப் பட்ட விடயங்களையும் எமக்கு எத்திவைத்தார்கள். மேலும் அவர்கள் சிறந்த பண்பாடுகளையும் உயர் பெருமானங்களையும் எமக்கு போதித்தார்கள். அவற்றை நாம் எமது வாழ்வில் பின்பற்றி ஒழுகினால் பாக்கியங்களும் அருள்வளமும் நிறைந்ததாக எமது வாழ்வு ஜொலித்திடும்.
அல்லாஹ், (நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா )போன்ற அதிகமான தூதர்களை மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் அனுப்பி வைத்தான். அவர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர்கள் என்பதை நிரூபிக்கவும் அத்தாட்சிகள், மற்றும் அற்புதங்களை வழங்கி அவர்களுக்கு உதவிசெய்தான். இத்தூதர்களுள் இறுதியாக வந்தவராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உள்ளார்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட அத்தூதர்கள், இந்த வாழ்க்கை தற்காலிகமானது; இது ஒரு சோதனை என்பதையும், உண்மையான, நிலையான வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்பதையும் மிகத்தெளிவாக எமக்கு அறிவித்துள்ளார்கள்.
மேலும் இறைத்தூதர்கள் அனைவரையும் விசுவாசித்து, இணையில்லாத அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்ட முஃமின்களுக்கு- இறைவிசுவாசிகளுக்கு- சுவர்க்கம் உண்டு எனவும் அல்லாஹ்வுடன் பிறகடவுள்களை வணங்கியவர்கள் அல்லது அல்லாஹ்வின் தூதர்களில் எவரையாவது ஏற்காதோர் ஆகிய அனைவருக்கும் அல்லாஹ் நரகத்தை சித்தப் படுத்தியுள்ளான் என்பதையும் அத்தூதர்கள் எமக்கு போதித்துள்ளார்கள்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ٣٥ وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ 36﴾
ஆதமின் சந்ததிகளே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் என் வசனங்களை உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால், (அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் அவர்கள் கொண்டு வந்ததை பின்பற்றுங்கள்!) எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ, இன்னும், (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். (35)
இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
(அல் அஃராப் : 35-36)
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ٢١ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ ٢٢ وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ٢٣ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ ٢٤ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ 25﴾
மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்.
அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள்.
நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்).
ஆக, நீங்கள் (அப்படி ஒரு வேதத்தை) உருவாக்கவில்லையென்றால், - நீங்கள் (அப்படி) உருவாக்கவே முடியாது - (நரக) நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் (நபியே!) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனி உணவாக அவர்களுக்கு வழங்கப்படும்போதெல்லாம் இது, முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான் என்று அவர்கள் கூறுவார்கள். இன்னும் (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அது (-கனி) அவர்களிடம் கொண்டு வரப்படும். இன்னும், தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. இன்னும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
(அல்பகரா: 21-25)
பல தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்;?
அல்லாஹ் தனது தூதர்களை எல்லா சமூகங்களுக்கும் தேசங்களுக்கும் அனுப்பி வைத்தான். தனது ஏவல்களையும், விலக்கல்களையும்; அந்த சமுதாயத்தவருக்கு எத்திவைத்து தன்னை மாத்திரமே இறைவனாக ஏற்று வணங்க வேண்டும் என்பதின் பால் அழைப்புவிடுக்கவும் அவர்களை அனுப்பி வைத்தான். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வை மாத்திரம் வழிபடுவதே அவர்கள் அனைவரது பிரச்சாரத்தின் குறிக்கோளாக இருந்தது. ஒரு சமுதாயம் தனது தூதர் கொண்டுவந்த ஏகத்துவம் தொடர்பான கட்டளைகளை கைவிட்டு அல்லது அவற்றை அலங்கோலப்படுத்தும் போதெல்லாம், அவர்களை சீர்படுத்தி அம்மக்களை திரும்பவும் சீரான வழியில் செலுத்தவும் அல்லாஹ்வை மாத்திரம் கடவுளாக ஏற்று அவனுக்கு கீழ்படிந்து நடக்கவும் வழிகாட்ட இன்னுமொரு தூதரை அல்லாஹ் நியமிக்கிறான்.
இவ்வாறு அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கு தூதர்களை அனுப்பும் நிலையை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களை இறுதித்தூதராக அனுப்பி முடிவுக்குக் கொண்டுவந்தான். நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை வரையில் தோன்றும் மனித சமூகத்திற்கான நிரந்தரமானதும் பரிபூரணமானதுமான மார்க்கத்தை கொண்டுவந்துள்ளார்கள். இம்மார்க்கம் முழுமைத்துவம் பெற்றதாகவும் இதற்கு முன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட இறைசட்டங்களை மாற்றக் கூடியதாகவும் உள்ளது. அதுமாத்திரமின்றி மறுமை வரையில்- இவ்வுலகம் அழிவுறும் வரையில் இம்மார்க்கம் நிலைத்திருக்கும் என்பதையும் அல்லாஹ் உத்தரவாதப்படுத்தியுள்ளான்.
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரையும் விசுவாசிக்காத -ஈமான் கொள்ளாத - வரையில் ஒருவர் இறைவிசுவாசியாக –முஃமினான ஆகிவிட மாட்டார்.
இறைத்தூதர்களை அனுப்பிவைத்தவன் அல்லாஹ்வே. எனவே யார் அவர்களில் ஒருவரை நிராகரிக்கிறாரோ, அவர் அவர்கள் அனைவரையும் நிராகரித்ததற்கு சமமானவராக மாறிவிடுகிறார். அல்லாஹ்வின் இறைவெளிப்பாடான வஹியை நிராகரிப்பது மிகப்பெரும் பாவமாகும்; இப்பாவத்திற்கு ஈடாக எதுவும் கிடையாது. அத்துடன் ஒருவர் சுவர்க்கம் செல்ல அனைத்து நபிமார்களையும் விசுவாசிப்பது - ஈமான் கொள்வது மிக முக்கிய விடயமாகும்.
இன்றைய காலத்தில் வாழும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், இறைத் தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதி நாளை நம்புவதும் கடமையாகும். இது தூதர்களில்-இறுதியானவரும் நிரந்தர அற்புதம்- அல்குர்ஆன் வழங்கப்பட்ட ; முத்திரை நபி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்பி பின்பற்றுவதன் மூலமே சாத்தியமாகும். இப்புனித அல்குர்ஆனை இப்பூமி முழுமையாக அழிக்கப்படும் காலம் வரையில் அல்லாஹ் பாதுகாப்பதாக பொறுப்பேற்றுள்ளான்.
அல்லாஹ் தனது பொதுமறையான அல்குர்ஆனில், யார் அவனின் தூதர்களில் ஒருவரை நிராகரிக்கிறானோ அவன் அல்லாஹ்வை நிராகரித்து அவனின் வஹியை –வேதவெளிப்பாட்டை - பொய்பித்தவர் எனக் குறிப்பிடுகிறான். இது குறித்து அல்லாஹ் பின்வருமறு பிரஸ்தாபிக்கிறான் :
﴿إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا ١٥٠ أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا 151﴾
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரிக்கிறார்களோ; இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்ய விரும்புகிறார்களோ; இன்னும், (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” எனக் கூறுகிறார்களோ; இன்னும் அதற்கு மத்தியில் (வெறுக்கத்தக்க) ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ.
அ(த்தகைய)வர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
அந்நிஸா : 150-151
இதனால், அல்லாஹ் கட்டளையிட்டதிற்கிணங்க முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் -அனைத்து தீர்க்கதரிசிகளையும், அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட முன்னைய வேதங்களையும் ஈமான் கொள்கிறோம். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ 285﴾
தூதரும் நம்பிக்கையாளர்களும் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார்கள். (அவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “அவனுடைய தூதர்களில் யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம். இன்னும், நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.”
அல்பகரா: 285
அல்குர்ஆன் என்றால் என்ன?
புனித அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையும், அவனின் வேத வெளிப்பாடுமாகும். அதனை தனது இறுதித்தூதரான முஹம்மதிற்கு இறக்கியருளினான். இது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தின்- நபித்துவத்தின் உண்மை நிலையை உறுதிப்படுத்தும் மிகப் பெரும் அற்புதமாகும். அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ள சட்டதிட்டங்கள் யாவும் யதார்த்தமானதாகவும், அது கூறும் வரலாற்றுச் சம்பவங்கள் மிகவும் நம்பகமானதாகவும்; காணப்படுகிறது.
இம்மாபெரும் இறைமறையை பொய்ப்பித்தோரிடம் அல்லாஹ் அதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப் போன்ற ஒன்றை கொண்டுவருமாறு சவால்விடுத்தான், என்றாலும் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. காரணம் அல்குர்ஆன் மனிதனோடு தொடர்பான இம்மை மறுமை வாழ்வு குறித்த ஆழமான விடயங்களையும், கட்டாயம் ஈமான் கொள்ள வேண்டிய இறை விசுவாசம் தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
அதே போன்று மனிதன் தனக்கும் தனது ஆன்மாவுக்கு மத்தியிலும், அல்லது தனது இரட்சகனுக்கும் தனக்கும் மத்தியிலும், அல்லது தனக்கும் ஏனைய உயிரினங்கள் மத்தியிலும் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஏவல்கள்-கட்டளைகள்- தவிர்ந்து நடக்க வேண்டிய விடயங்கள் அனைத்தையும் -மிகத்தரமான உயரிய மொழி நடையில்- உள்ளடக்கியுள்ளது.
மேலும் இந்நூலானது-அல்குர்ஆன் -மனித ஆக்கம் அல்ல; இறை ஆக்கம் என்பதை நிரூபிக்கக்கூடிய அறிவியல் மற்றும் பகுத்தறிவுரீதியான அதிகமான ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும் வணக்கத்தின் மூலம் அடிபணிவதும், அவனின் ஷரிஆவை –சட்டதிட்டங்களை முழுத் திருப்தியுடன் ஏற்று நடப்பதும் அவன் அல்லாத வணங்கப்படக்கூடிய அனைத்தையும் நிராகரிப்பதுமாகும்.
அல்லாஹ் தூதர்களை இணையே இல்லாத அவனை மாத்திரம் வணங்குவதின் பால் அழைப்பு விடுத்தல், அவனல்லாத வணங்கப்படும் அனைத்தையும் நிராகரிகரித்தல் என்ற ஒரே தூதுச்செய்தியுடன் அனுப்பி வைத்தான்.
இஸ்லாம், அனைத்து நபிமார்களினதும் மார்க்கமாகும். அவர்களின் அடிப்படை பிரச்சாரம் -அழைப்பு- அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற ஒரே ஒலி நாதமாக இருந்தது, அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள் வித்தியாசமானதாகவும் இருந்தன. இந்த வகையில் நபிமார்கள் அனைவரும் கொண்டுவந்த உண்மையான –சரியான மார்க்கத்தை பின்பற்றி ஒழுகும் ஒரே சமூகமாக இன்று முஸ்லிம்கள் மாத்திரமே உள்ளனர். இன்றைய காலத்தில் இஸ்லாம் ஒன்றே உண்மையான தூதாகும். ஏனெனில் அதுவே மனிதர்களின் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்விடமிருந்து வந்த இறுதித்தூதுமாகும்.
மூஸாவையும் ஈஸாவையும் அனுப்பிய இறைவன்தான் இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் தூதராக அனுப்பினான். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் யாவும் அதற்கு முன்னுள்ள சட்டங்களை மாற்றியமைத்துவிட்டது.
மக்கள் இன்று ஏற்று வழிபடும் -இஸ்லாம் தவிர்ந்த- ஒவ்வொரு மதமும் ஒன்றில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. அல்லது இறைவானால் இறக்கியருளப்பட்ட மார்க்கமாக இருந்து மனிதக்கரங்களின் திருவிளையாடல்களினால் மூடநம்பிக்ககைள், பரம்பரை கட்டுகதைகள், மனித சிந்தனைகள் ஆகியவற்றின் கலவையாக காணப்படுகிறது.
ஆனால் முஸ்லிம்களின் மார்க்கத்தைப் பொறுத்த வரை அது எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத தெளிவான ஒரு மார்க்கமாக திகழ்கிறது. அவர்கள் அல்லாஹ் ஒருவனுக்காக செய்யும் வழிபாடுகள் யாவும் ஒன்றாகவே உள்ளன. அவர்கள் அனைவரும் ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றி, தங்களின் செல்வத்தின் ஒரு பகுதியை ஸகாத்தாக வழங்குவதோடு ரமழான் மாதத்தில் நோன்பும் நோற்கின்றனர். அவர்களின் சட்டயாப்புக்குறித்து சிந்தித்துப் பாரும்! அதுதான். எல்லா தேசங்களில் காணப்படுகின்ற ஒரே நூலான அல்குர்ஆன் ஆகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு அவனது உலகப்பொதுமறையில் பிரஸ்தாபிக்கிறான் :
﴿...ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ فَمَنِ ٱضۡطُرَّ فِي مَخۡمَصَةٍ غَيۡرَ مُتَجَانِفٖ لِّإِثۡمٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ﴾
இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
(ஸூரா அல்மாஇதா : 3).
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் :
﴿قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ ٨٤ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ 85﴾
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம். (84)
இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
(ஆல இம்ரான் :84-85).
எனவே இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது மனித இயல்பூக்கத்துடனும், பகுத்தறிவுடனும் இயைந்து செல்கிறது. சீரான உள்ளங்கள் இதனை அங்கிகரித்து ஏற்றுக்கொள்கிறன. இதனை மாபெரும் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் தனது சிரேஷ்ட படைப்புகளுக்காக வகுத்தருளினான். இது மனிதர்கள் அனைவருக்கும் இம்மை மறுமையில் மகிழ்ச்சியையும், பாக்கியங்களையும் பெற்றுத்தரவல்ல உன்னத மார்க்கமாகும். இம்மார்க்கம் இனத்தால், நிறத்தால் எவரையும் வித்தியாசப்படுத்துவதில்லை. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பது இதன் அடிப்படையாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதர் மேற்கொள்ளும் நல்லறங்களின் அடிப்படையிலேதான் வித்தியாசப்படுத்தப்படுகிறார்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
(مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ 97)
ஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
(அன்நஹ்ல் : 97)
இஸ்லாம் சுபீட்சத்திற்கான வழியாகும்.
இஸ்லாம் அனைத்து தீர்க்கதரிசிகளின் மார்க்கம் அது மட்டுமல்லாது உலக மாந்தர் அனைவருக்குமான அல்லாஹ்வின் மார்க்கமாகும் இது அரபுகளுக்கு மாத்திரமான மார்க்கம் அல்ல.
இஸ்லாம் இவ்வுலகில் யதார்த்தமான சுபீட்ஷத்திற்கும், மறுமையில் நிரந்தர இன்பத்திற்குமான மார்க்கமாகும்.
ஆன்மா மற்றும் உடலியல் தேவைகள், மனித இனத்தின் அனைத்து வகையான பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
﴿قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلا يَضِلُّ وَلا يَشْقَى 123 وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى 124﴾
(அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் இருவரும் (இப்லீஸ் உட்பட) அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர், சிலருக்கு எதிரி ஆவர். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார். இன்னும், அவர் (மறுமையில்) சிரமப்பட மாட்டார். (123)
இன்னும், எவன் என் அறிவுரையை புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு (மண்ணறையில்) மிக நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. இன்னும், மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்.
(தாஹா : 123-124)
இவ்வுலகிலும் மறுமையிலும் முஸ்லிம் பெறும் நன்மைகள் என்ன?
இஸ்லாத்தில் மகத்தான பலன்கள் உள்ளன, அவற்றுள் சில :
- அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட அடிமையாக இருப்பதன் மூலம்; அவனுக்கு இவ்வுலகில் மரியாதையும், (கௌரவம்) வெற்றியும் கிடைக்கிறது. இல்லாவிட்டால் அவன் மனோ இச்சைக்கும், ஷைத்தானுக்கும், ஆசைகளுக்கும் கட்டுப்பட்ட அடியானாக மாறிவிடுகிறான்.
- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதன் மூலம் அவனுக்கு மறுமையில் வெற்றி கிடைக்கிறது. அல்லாஹ்வின் அருளும் அவனை சூழ்ந்து கொள்கிறது. அந்த நபரை அல்லாஹ் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கிறான். அவனுக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் நித்திய பேரின்பமும் கிடைப்பதுடன் நரக வேதனையிலிந்தும் தப்பித்து விடுகிறான்.
- ஒரு முஃமினைப் -இறைவிசுவாசியைப்- பொறுத்தவரை மறுமையில் அவன் நபிமார்களுடனும் , உயிர்தியாகிகளுடனும், சான்றோர்களுடனும் இருப்பான். இது எவ்வளவு அழகிய தோழமை. ஆனால் யார் அல்லாஹ்வை நம்பவில்லையோ அவன் கொடுங்கோலர்களுடனும், தீயவர்களுடனும், குற்றவாளிகளுடனும், குழப்பவாதிகளுடனும் இருப்பான்.
- அல்லாஹ் யாரை சொர்க்கத்தில் அனுமதிக்கிறானோ; அவர்கள் மரணம், நோய், வலி, முதுமை, சோகம் எதுவுமின்றி நித்திய பேரின்பத்தில் வாழ்வார்கள், மேலும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவன் அவர்களுக்கு வழங்குவான், மேலும் நரகத்தில் நுழைபவர்கள் நிரந்தரமான, முடிவில்லா வேதனையில் இருப்பார்கள்.
சுவர்க்கத்தில் கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் சிந்தையிலும் தோன்றியிராத இன்பங்கள் காணக்கிடைக்கும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்;
﴿مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ 97﴾
ஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
(அன்நஹ்ல் : 97)
மேலும் அல்லாஹ் கூறினான்:
﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ 17﴾
ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்காக (சொர்க்கத்தில்) மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்) தை ஓர் ஆன்மாவும் அறியாது.
ஸூறதுஸ் ஸஜ்தா வசனம் 17
முஸ்லிமல்லாதவர் இழப்பது என்ன?
ஒருவர் இஸ்லாத்தை ஏற்காததினால் மிகப்பெரும் அறிவான அல்லாஹ் பற்றிய அறிவை இழந்திடுவான். அத்துடன் அல்லாஹ்வை விசுவாசிப்பதினால் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் இவ்வுலகத்தின் நிம்மதி மற்றும் பாதுகாப்பையும், மறுமையின் நித்திய பேரின்பத்தையும் இழந்துவிடுவார்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாது இருப்பதினால், அல்லாஹ் மனித சமூகத்திற்கு இறக்கியருளியிருக்கும் அல்குர்ஆனை அறிந்து அம்மாபெரும் வேதத்தை விசுவாசம் கொள்ளும் பாக்கியத்தை இழந்து நிற்பார்.
மேலும் கண்ணியமிகு தீர்க்கதரிசிகளை நம்பும் பாக்கியம் கிடைக்காது; அதே போல் மறுமையில் அவர்களுடன் சுவர்க்க பூஞ்சோலையில் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்பதுடன், ஷைத்தான்களுடனும், குற்றவாளிகளுடனும், கொடுங்கோளர்களுடனும் இருப்பார். அவரின் தங்குமிடமும், சுற்றுப்புறமும் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ 15 لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَا عِبَادِ فَاتَّقُونِ 16﴾
நபியே! கூறுவீராக! “நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள்தான்.” அறிந்து கொள்ளுங்கள்! “இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.” (15)
அவர்களுக்கு அவர்களின் மேலிருந்து நரகத்தின் நிழல்கள் (அடுக்கடுக்காக நரகத்தின் புகைகளும் ஜுவாலைகளும் இருக்கும்.) இன்னும் அவர்களுக்கு கீழிருந்து (நரகத்தின்) நிழல்கள் உண்டு. இ(ந்த தண்டனையான)து - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்!
(அஸ்ஸுமர் : 15-16).
எனவே யார் மறுமையில் விமோசனம் பெற விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து, முஸ்லிமாக இருந்து, நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
அல்லாஹ்வை மாத்திரம் ரப்பாக எஜமானாக ஏற்று விசுவாசித்து, அவனை வணங்கி வழிபடுவதில் அவனுக்கு நிகராக எவரையும், இணையாக்காது இருந்த முஸ்லிம்கள் தவிர்ந்த எவருக்கும் மறுமையில் விமோசனம் கிடைக்காது என்பதில் எல்லா தீர்க்கதரிசிகளும், இறைத்தூதர்களும் ஒன்றுபட்டு ஏற்றுக் கொண்ட உண்மைகளுள் ஒன்றாகும். ஆகவே இறைத்தூதர்களை ஏற்று விசுவாசித்து அவர்களை நம்பிப் பின்பற்றியோர் மாத்திரமே சுவர்க்கம் நுழைவதோடு நரகிலிருந்தும் காப்பாற்றப்படுவர்.
இந்த அடிப்படையில் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தோர் அவர்களை நம்பி அவர்களின் போதனைகளை பின்பற்றி நடந்திருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் சிறந்த இறைவிசுவாசிகளுமாவர். என்றாலும் நபி ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை அல்லாஹ் அனுப்பிய பின்னர், மூஸா நபியைப் பின்பற்றியோர் அவர்களையும் ஏற்று பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு ஈஸா நபியை யார் விசுவாசித்தார்களோ -நம்பினார்களோ-அவர்களே சிறந்த முஸ்லிம்களாவர். அவர்களில் யார் ஈஸாவை நபியாக ஏற்றுக்கொள்ளாது, தான் மூஸாவின் மார்க்கத்தில்தான் தொடர்ந்தும் இருப்பேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபியை ஈமான் கொள்ளாது மறுத்ததினால், அவர் ஓரு முஃமினாக கருதப்படமாட்டார்.
அதன் பின் அல்லாஹ் தூதர்களில் இறுதியானவராக முஹம்மதை அனுப்பி வைத்தான் எனவே உலக மாந்தர் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு அவரின் போதனைகளை பின்பற்றி ஓழுகுவது கடமையாகும். காரணம் இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளனான அல்லாஹ் மூஸாவையும், ஈஸாவையும் தூதராக அனுப்பினான். அவனே தூதர்களின் இறுதியானவராக முஹம்மதையும் தூதராக அனுப்பி வைத்தான். எனவே யார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்ளாது, தான் நபிமார்களான மூஸா அல்லது ஈஸா போன்றோரது மார்க்கத்திலோதான் இருப்பேன் என்று கூறினால் அவர் ஒரு இறைவிசுவாசியாக –முஸ்லிமாக கருதப்படமாட்டார்.
அதேபோன்று ஒருவர் தான் முஸ்லிம்களை கௌரவப்படுத்துவதாக –மதிப்பதாக கூறுவது, அல்லது ஏழைகளுக்கு தர்மம் மற்றும் உதவிகளைப்புரிவது ஒரு போதும் மறுமையில் விமோசனம் கிடைக்க வழியாக அமையாது. இந்த நற்காரியங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள அவர் அல்லாஹ்வையும் அவனின் வேதங்களையும் தூதர்களையும் இறுதி நாளையும் நம்பி ஏற்றுக்கொண்டவராக இருப்பது அவசியமாகும். இணைவைத்தல், அல்லாஹ்வை உண்மையான இறைவானக ஏற்றுக்கொள்ளாமை, அல்லாஹ் இறக்கியருளிய வேத வெளிப்பாடுகளை மறுத்தல், அவனின் இறுதித்தூதரான முஹம்மதை புறக்கணித்தல் போன்ற செயல்களை விடவும் மிகப்பெரும் குற்றச் செயல் ஒன்று கிடையாது!
ஆகவே, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இவர்கள் அல்லாதோர் எவரும் அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதை செவிமடுத்து, அவர்களை தூதராக நம்புவதையும், இஸ்லாத்தினுள் நுழைவதையும் புறக்கணித்தால் அவர்கள் நிரந்தர நரகத்தில் இருப்பார்கள். இந்த தீர்ப்பானது எந்த ஒரு மனிதனின் தீர்ப்பு அல்ல. மாறாக அல்லாஹ்வின் தீர்ப்பாகும். இது குறித்து அல்லாஹ் தனது உலகப் பொதுமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
﴿إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَـٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّة 6﴾
நிச்சயமாக வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் எனும் நரக நெருப்பில் - அதில் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா தீயோர் ஆவார்கள்.
(அல் பய்யினா:6)
ஆகவே இறைவனிடமிருந்து மனித குலத்திற்கான கடைசி இறைச் செய்தி இறக்கியருளப்பட்டுவிட்டதினால், இஸ்லாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைச் செய்தியைக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் அதை நம்பி, அதன் சட்டதிட்டங்களை பின்பற்றி, அவர்களின் ஏவல் -கட்டளை- மற்றும் விலக்கலில் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யார் இந்த கடைசி இறை செய்தியை பற்றி கேள்விப்பட்டு அதை நிராகரிக்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ்; எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மறுமையில் அவனுக்கு நிச்சயம் தண்டனை வழங்குவான்.
இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் சில கூற்றுகள் ஆதாரமாக அமைந்துள்ளன . அவைகளில் :
﴿وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ85﴾
இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
(ஆல இம்ரான் : 85)
மேலும் அல்லாஹ் கூறினான்:
﴿قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ 64﴾
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.
(ஆல இம்ரான் : 64).
ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன?
ஒரு முஸ்லிம் பின்வரும் ஆறு அடிப்படைகளை நம்புதல் வேண்டும்:
முதலில் அல்லாஹ்வை நம்பவேண்டும். இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவும் திட்டமிடுபவனும் உரிமையாளனும் வாழ்வாதாரங்களை வழங்குபவனும் அவனே என்றும், அவனைப்போன்ற எதுவுமில்லை என்றும், அவனுக்கு மனைவியோ மக்களோ கிடையாது என்றும் அவன் ஒருவன் மாத்திரமே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும், அவனை அல்லாத ஒருவனை அவனுக்கு நிகராக வைத்து வணங்குதல் கூடாது. அத்துடன் அவனைத் தவிர்த்து வணங்கப்படுபவகைள் அனைத்தும் அசத்தியமானவை என்று ஆழமாக நம்புதல் வேண்டும்.
மலக்குமார்களை –வானவர்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று நம்ப வேண்டும். அவர்களை அல்லாஹ் ஒளியால் படைத்தான்; அவர்களுக்கு சில பணிகளை ஒப்படைத்துள்ளான்; அப்பணிகளுள் தனது தீர்கதரிசிகளுக்கு இறைவெளிப்பாட்டை –வஹியை- கொண்டு சேர்க்கும் பணியும் ஒன்றாகும்.
மூன்றாவது : தனது தீர்கதரிசிகளுக்கு அல்லாஹ் இறக்கியயருளிய (திரிவுபடுத்த முன்னுள்ள தவ்ராத், இன்ஜீல்) போன்ற அனைத்து வேதங்களுடன் இறுதி வேதமான அல்குர்ஆனையும் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸாவுடன் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போன்ற அனைத்து நபிமார்களையும் நம்புதல் வேண்டும். அவர்கள் அனைவரும் மனிதர்கள்; அவர்களை இறைவெளிப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தி, அவர்கள் இறைவனின் தூதர்கள் என்ற உண்மையை காட்டக்கூடிய அத்தாட்சிகளையும், அற்புதங்களையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.
மறுமை நாளை நம்புதல்: அந்நாளில்தான் அல்லாஹ், ஆரம்பமாக இருந்தோரையும் பின்வந்தோரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ்வை நம்பிய முஃமின்களை சுவர்க்கத்தினுள்ளும் அவனை ஏற்றுக்கொள்ளாத காபிர்களை நரகினுள்ளும் நுழைவிப்பான்.
இறைவிதியை நம்ப வேண்டும். அதாவது முக்காலம் பற்றியும் அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதையும் அவை அனைத்தையும் அறிந்து அதனை பதிவு செய்து வைத்திருப்பதுடன் அவற்றை அவனே நாடுகிறான், அனைத்தையும் அவனே படைக்கிறான் என்பதையும் உறுதியாக நம்பவேண்டும்.
அல்லாஹ்வை அவர் மார்க்கமாக காட்டித்தந்த தொழுகை, ஸகாத், நோன்பு மற்றும் வசதியிருந்தால் ஹஜ் ஆகியவற்றின் மூலம் வணங்க வேண்டும். பின், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி மற்றும் மீட்சிக்கு ஆதாரமாக இருக்கும் தனது மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பொருளடக்கம்
படைத்து, பரிபாலித்து வாழ்க்கை வசதிகளை தருகின்ற அந்த இறைவன் அவன்தான் உயர்வும் கண்ணியமும் தூய்மையும் நிறைந்த அல்லாஹ். 8
படைத்து பரிபாலித்து இரட்சிக்கும் இறைவனின் பண்புகள்; 10
வணங்கி வழிபடக்கூடிய இறைவன் நிறைவான பண்புகளைப் பெற்றுள்ளான். 13
மகத்துவம் நிறைந்த சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ் -இறைவன்- எம்மைப்படைத்தது ஏன்? அவன் எம்மிடமிருந்து எதனை விரும்புகிறான்? 19
பல தூதர்கள் அனுப்பப்பட்டது ஏன்;? 26
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரையும் விசுவாசிக்காத -ஈமான் கொள்ளாத - வரையில் ஒருவர் இறைவிசுவாசியாக –முஃமினான ஆகிவிட மாட்டார். 28
அல்குர்ஆன் என்றால் என்ன? 31
இஸ்லாம் என்றால் என்ன? 33
இஸ்லாம் சுபீட்சத்திற்கான வழியாகும். 39
இவ்வுலகிலும் மறுமையிலும் முஸ்லிம் பெறும் நன்மைகள் என்ன? 40
முஸ்லிமல்லாதவர் இழப்பது என்ன? 43
எனவே யார் மறுமையில் விமோசனம் பெற விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து, முஸ்லிமாக இருந்து, நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும். 45
ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன? 51
***
ta443v1.0 - 02/10/2026