أَحْكَامُ الهَدْيِ وَالأَضَاحِي وَالتَّذْكِيَةِ
குர்பானியின் சட்டங்கள்
اللَّجْنَةُ العِلْمِيَّةُ
بِرِئَاسَةِ الشُّؤُونِ الدِّينِيَّةِ بِالمَسْجِدِ الحَرَامِ وَالمَسْجِدِ النَّبَوِيِّ
மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மத விவகாரங்களுக்கான தலைமைத்துவத்தின் கல்விக்குழு குழு
بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ
குர்பானியின் சட்டங்கள்
முன்னுரை
புகழ் அனைத்தும் அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனின் அருளும், ஈடேற்றமும் உலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை நாள் வரை அவர் கூறிய முறைப்படி யாரெல்லாம் வாழ்வார்களோ அவர்கள் அனைவருக்கும் உண்டாவதாக!
இது, ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய குர்பானி தொடர்பான சட்டங்கள் பற்றி சுருக்கமாகக் கூறும் ஒரு கையேடாகும். இரு புனிதஸ்தலங்களையும் தரிசிக்க வரும் அல்லாஹ்வின் விருந்தாளிகள் தமது மார்க்க விவகாரங்களில் அறிவுடனும், தெளிவுடனும் இருக்க வேண்டும என்பதற்காக நாம் இதனைத் தொகுத்துள்ளோம். கொடைவள்ளலான எமது இறைவன் இதனை பயனுள்ள, நல்ல செயலாக ஆக்கி, அவனது திருமுகத்தை நாடி செய்த செயலாக ஏற்றுக்கொள்வானாக! அவனே கேட்கத்தக்கவர்களில் மிகவும் சிறந்தவன், எதிர்பார்க்கத்தக்கவர்களில் மிகவும் பெருமைக்குரியவன்.
பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்வதற்கான சங்கத்தின் கல்விக் குழு.
குர்பானியின் சட்டங்கள்
குர்பானி என்பது அரபியில் இரு பெயர்களால் அழைக்கப்படுகிறது:
ஹத்யு: புனித பூமியில் அறுத்துப் பலியிடப்படும் கால்நடைகளுக்கு அரபியில் "ஹத்யு" எனக் கூறப்படும். இவை அல்லாஹ்வுக்கு அன்பளிப்பு செய்யப்படுவதனால் இப்பெயரைப் பெற்றுள்ளது.
உழ்ஹிய்யா: ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும், அதற்கு அடுத்துள்ள தஷ்ரீக்குடைய மூன்று நாட்களிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக அறுக்கப்படும் கால்நடைகளுக்கு அரபியில் "உழ்ஹிய்யா" எனக் கூறப்படும்.
ஹத்யு, உழ்ஹிய்யா ஆகிய இரு குர்பானி முறையும் மார்க்கத்தில் உள்ளவை என அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.
மக்காவில் அறுத்துப் பலியிடும் பிராணிகளில் (ஹத்யு) மிகவும் சிறந்தது ஒட்டகமாகும். அதற்கு அடுத்து மாடு ஆகும். இவை இரண்டும் விலை கூடுதலாக இருப்பதாலும், அதிக இறைச்சி ஏழைகளுக்கு கிடைக்கும் என்பதாலும் சிறப்பில் முதல் இரு இடங்களைிலும் உள்ளன. அதற்கு அடுத்த அந்தஸ்த்தில் ஆடு உள்ளது.
ஒவ்வொரு இனத்திலும் அவற்றின் கொழுத்த பிராணி அதிக சிறப்பைப் பெறுகிறது. அதற்கு அடுத்து விலை கூடிய பிராணி சிறப்பானது. அல்லாஹ் கூறுகிறான்,
﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ 32﴾
"இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்." (அல்குர்ஆன் 22 : 32).
செம்மறி ஆடாக இருந்தால் ஆறு மாதங்கள் பூர்த்தியாகியதையும், வெள்ளாடாக இருந்தால் ஒரு வருடம் பூர்த்தியாகியதையும், மாடாக இருந்தால் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியதையும், ஒட்டகமாக இருந்தால் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியதையும் அறுத்துப் பலியிட வேண்டும்.
ஆட்டை ஹத்யு முறையில் குர்பானி கொடுப்பதானால் தனித்தே அறுத்துப் பலியிட வேண்டும். உழ்ஹிய்யா முறையில் குர்பானி கொடுப்பதானால் ஒருவருக்கும் அவரது குடும்பத்திற்கும் போதுமாக இருக்கும். ஹத்யு முறையிலும், உழ்ஹிய்யா முறையிலும் மாட்டையும் ஒட்டகத்தையும் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஏழு பேர் கூட்டாக சேர்ந்து அறுத்துப் பலியிடலாம். ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ».
"நாம் ஹுதைபிய்யா நடைபெற்ற ஆண்டில் நபி ﷺ அவர்களுடன் ஏழு பேர் கூட்டாக சேர்ந்து ஒட்டகத்தை அறுத்தோம். ஏழு பேர் கூட்டாக சேர்ந்து மாட்டை அறுத்தோம்" இன்னொரு அறிவிப்பில்:
«خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِّنَّا فِي بَدَنَةٍ».
"நாம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் ஹஜ்ஜுக்காக புறப்பட்டுச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களுக்கு ஒட்டகங்களிலும் மாடுகளிலும் ஏழு பேருக்கு ஒரு விலங்காகக் கூட்டாகப் பங்கேற்க உத்தரவிட்டார்கள்." மற்றொரு அறிவிப்பில்:
«حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَحَرْنَا الْبَعِيرَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ».
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தோம். அப்போது ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாடையும் அறுத்தோம்."1
அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், நபி ﷺ அவர்களின் காலத்தில் குர்பானிகள் எவ்வாறு இருந்தன என்று கேட்கப்பட்டபோது,
«كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالْشَاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ، وَيُطْعِمُونَ، حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى».
"ஒரு மனிதர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் போதுமான ஒரு ஆட்டை அறுத்து, தாமும் சாப்பிட்டு, பிறருக்கும் கொடுப்பார்கள். நீங்கள் பார்ப்பது இப்போதைய மக்கள் பெருமைக்காக (ஒரு குடும்பம் அதிக ஆடுகளை) அறுக்கிறார்கள்" .2
ஒட்டகத்திலும், மாட்டிலும் ஏழு பேரில் ஒருவராக சேர்வதை விட ஒரு ஆட்டை குர்பான் கொடுப்பது மிகவும் சிறந்தது.
ஹத்யு, உழ்ஹிய்யா ஆகிய இரு குர்பானி முறைகளிலும் நோய்கள், உடல் குறைகள் அற்ற அறுப்புப் பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, குருடு, எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு, ஆரோக்கியமான கால்நடைகளுடன் நடந்துசெல்ல முடியாத அளவுக்கு உள்ள நொண்டி, முன்புறப் பற்கள் முழுமையாக விழுந்தவை, வயது முதிர்வால் பால் சுரக்காதவைகள், வெளிப்படையாகத் தெரியும் நோய் உள்ளவை போன்ற கால்நடைகளை குர்பானிக்காக பயன்படுத்தக் கூடாது. பரா இப்னு ஆதிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ﷺ அவர்கள் எமக்கு முன்னால் எழுந்து இவ்வாறு கூறினார்கள்,
«أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الْأَضَاحِي: الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْعَجْفَاءُ الَّتِي لا تُنْقِي».
"தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் ஒற்றைக்கண் குருடு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய நான்கு வகையான குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது" (3)3
இமாம் திர்மிதி (ரஹ்) கூறினார்கள்: "இதன்படியே அறிஞர்கள் செயற்பட்டார்கள்"4.
ஹத்யு, உழ்ஹிய்யா முறைகளில் குர்பானி கொடுக்கும் நேரம் - சரியான கருத்தின் படி - ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து தஷ்ரீக்குடைய இறுதி நாள் வரை நீடிக்கும்.
தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவர் தாம் அறுத்த பிராணியிலிருந்து உண்பது விரும்பத்தக்கது. உழ்ஹிய்யா முறை குர்பானியை மூன்றாகப் பிரித்து, தாமும் உண்டு, உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்,
﴿...فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ﴾
"எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்." (ஸூரா அல்ஹஜ்: 28).
ஆனால் இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்ட ஒன்றை செய்தால் அல்லது ஹஜ், உம்ராக் கடமைகளில் ஏதேனும் ஒன்றை விட்டு விட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு குற்றப்பரிகாரம் வழங்க வேண்டும். இக்குற்றப்பரிகாரத்திற்காக அறுக்கப்படும் கால்நடைகளிலிருந்து கொடுப்பவர் எதையும் சாப்பிட முடியாது.
உழ்ஹிய்யா முறையில் குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆரம்பித்து விட்டால் தனது கால்நடையை அறுக்கும் வரை தலைமுடியையோ, நகங்களையோ வெட்டக் கூடாது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்,
«إِذَا دَخَلَ الْعَشَرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ؛ فَلَا يَأْخُذُ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ شَيْئًا، حَتَّى يُضَحِّيَ».
"நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!" (5)5
யாராவது, அவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். அவருக்கு குற்றப் பரிகாரம் ஏதுமில்லை.
ஹத்யு, உழ்ஹிய்யா போன்ற குர்பானிகளை அறுக்கும் முறை:
1. புத்திசுவாதீனமுள்ள, நல்லது கெட்டதை பிரித்தறியக் கூடிய ஒரு முஸ்லிமே அறுப்புப் பிராணியை அறுக்க வேண்டும். அல்லது வேதக்காரர்களில் நன்கு அறுக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அறுப்பவர் நாடிய நிலையில் அறுக்கவேண்டும். அல்லாஹ் அல்லாதவர் பெயரில் அறுக்கவோ, அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்து படையல் செய்யவோ கூடாது. அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும். அறுப்பதற்காக பற்கள், கூரிய நகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் கூரிய கத்தியைப் பயன்படுத்த வேண்டும். அதே இடத்திலேயே இரத்தம் ஓடவேண்டும். அறுப்பவர் மார்க்க அடிப்படையில் அனுமதி பெற்றவராக இருத்தல் வேண்டும். (6)6
2. குர்பானிக்கான கால்நடை தெரிவுசெய்யும் போது, அனைத்து அம்சங்களும் பூரணமாக இருக்கும் கால்நடை ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
«ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى، وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا».
"நபி ﷺ அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். அப்போது தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தமது கரத்தால் அவற்றை அறுப்பார்கள்."7
3- அறுப்புப் பிராணியுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். அறுக்கும் போது அதன் உயிர் இலகுவாகப் பிரிவதற்குரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். அறுக்கும் பகுதி வெகு விரைவில் துண்டிக்கப்படும் வகையில் கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். நல்ல முறையில் நடத்தல் என்பதன் அர்த்தமே அறுப்புப் பிராணிக்கு வேதனை இல்லாமல் மிக இலகுவாக அதன் உயிரை பிரியச் செய்வதாகும். ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களிடமிருந்து இரு விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்:
«إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ».
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்."8
அறுப்புப் பிராணி பார்த்துக்கொண்டிருக்கும் போது அதற்கு முன்னால் கத்தியை கூர்மையாக்குவது கூடாது. இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்,
أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَدِّ الشَّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَقَالَ: «إِذَا ذَبَحَ أَحَدُكُمْ؛ فَلْيُجْهِزْ».
"கத்தியை கூர்மையாக்குமாறும், அதை கால்நடைகளிலிருந்து மறைத்து வைக்குமாறும் நபி ﷺ அவர்கள் ஏவினார்கள். 'உங்களில் ஒருவர் அறுக்கும் போது அதை விரைவாகச் செய்யுங்கள்' எனவும் கூறினார்கள்."9
4- குர்பானிக்கான அறுப்புப் பிராணி ஒட்டகமாக இருந்தால் அதன் இடது முன் காலை கட்டி வைத்து, அதை நிற்க வைத்து அறுக்க வேண்டும். அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரழி) அவர்கள் வந்து, "அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் ﷺ அவர்களின் வழிமுறை ஆகும்” எனக் கூறினார்கள். 10
5- குர்பானிக்கான அறுப்புப் பிராணி மாடு அல்லது ஆடாக இருந்தால் அதை இடது பக்கம் படுக்க வைத்து, தமது காலை அதன் பக்கவாட்டின் மீது வைத்து அறுக்க வேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
«ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ، أَمْلَحَيْنِ، أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى، وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا».
"நபி ﷺ அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். அப்போது தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தமது கரத்தால் அவற்றை அறுப்பார்கள்."11
6. அறுத்துப் பலியிடும் போது 'பிஸ்மில்லாஹ்' கூறுதல் கட்டாயமாகும், அல்லாஹ் கூறுகிறான்,
﴿فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ 118﴾
"(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்." (சூரா அல் அன்ஆம் :118) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
﴿وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡق وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ 121﴾
"எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்." (சூரா அல் அன்ஆம்: 121) நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
«مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ؛ فَكُلُوهُ مَا لَمْ يَكُنْ سِنًّا وَلَا ظُفْرًا».
"இரத்தத்தைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர."12
"பிஸ்மில்லாஹ்" எனக் கூறுவதோடு, "அல்லாஹு அக்பர்" எனும் தக்பீரையும் சேர்த்துக் கூறுவது விரும்பத்தக்கது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக தொழுமிடம் ஒன்றுக்கு நான் நபி ﷺ அவர்களுடன் சென்றேன். நபியவர்கள் பெருநாள் உரையை முடித்து இறங்கும் போது, அவரிடம் ஒரு ஆடு கொண்டுவரப்பட்டது. அதை தனது கையால் அறுக்கும் போது,
«بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ، هَذَا عَنِّي وَعَنْ مَنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي».
"பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்", இதை எனக்காகவும், எனது சமுதாயத்தில் யாரெல்லாம் குர்பான் கொடுக்காமல் இருக்கிறார்களோ அவர்களுக்காகவும் அறுக்கிறேன்" எனக் கூறினார்கள்.13
7- தொண்டை, உணவுக் குழாய், இரு இரத்தக் குழாய்கள் ஆகியவற்றை துண்டித்து, இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், "ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றை முறையாக அறுப்பதற்கு மூன்று நிலைகள் உள்ளன:
முதலாவது நிலை: அறுப்பவர் தொண்டை, உணவுக் குழாய், இரு இரத்தக் குழாய்கள் என்பவற்றை அறுக்க வேண்டும். இதுவே பூரணமான, சிறந்த அறுப்பு முறையாகும். இந்த நான்கையும் அறுக்கும் போது அவ் அறுப்புப் பிராணி ஹலாலானதாக மாறிவிடுகின்றது என சட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாவது நிலை: தொண்டை, உணவுக் குழாய், ஒரு இரத்தக் குழாய் என இம்மூன்றையும் அறுத்தால், முதல் நிலையை விட இது சற்று குறைந்திருந்தாலும் இதுவும் சரியான, இறைச்சியை ஹலாலாக்கும் அறுப்பு முறையாகும்.
மூன்றாவது நிலை: தொண்டை, உணவுக் குழாய் ஆகிய இரண்டை மாத்திரம் அறுப்பது. இதுவும் சரியான முறையாகும். இதை சில சட்ட அறிஞர்கள் சரிகண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.
«مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوا، لَيْسَ السِّنَّ وَالظُّفْرَ».
"இரத்தத்தைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர."14 இந்த விவகாரத்தில், இதுவே தெரிவு செய்யப்பட்ட முறையாகும். (15)15
கேட்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே. நாம் கற்றவற்றை எமக்கு பிரயோசனமாக ஆக்குமாறும், எமக்கு பிரயோசனமாவற்றையே கற்றுத் தருமாறும் நாம் அவனிடம் வேண்டுகிறேன். அவனே சிறந்த கொடையாளன். நபி ﷺ அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ் அருளும், சாந்தியும் உண்டாவதாக.
***
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா
ஆதாரம்: திர்மிதி 1417, அபூதாவுத் 4293, நஸாஈ 4294.
ஆதாரம்: திர்மிதி (2/51)
ஆதாரம்: முஸ்லிம் 1977.
உழ்ஹிய்யாவின் சட்டங்கள், ஆசிரியர்: இப்னு உஸைமீன் (ரஹ்), பக்கம்: 56-87.
ஆதாரம்: புஹாரி 5564, முஸ்லிம் 1966.
ஆதாரம் : முஸ்லிம் 1955.
ஆதாரம் : அஹ்மத் 5864, இப்னு மாஜா 3172.
ஆதாரம்: புஹாரி 1713, முஸ்லிம் 1320.
ஆதாரம்: புஹாரி 5564, முஸ்லிம் 1966.
ஆதாரம்: புஹாரி 5544, முஸ்லிம் 1968.
ஆதாரம்: திர்மிதி 1521, அபூதாவுத் 2810. இமாம் அல்பானி அவர்கள், இது ஆதாரப்பூர்வமானது எனக் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: புஹாரி 5544, முஸ்லிம் 1968.
பார்க்க; பின் பாஸ் (ரஹ்) அவர்களின் மார்க்கத் தீர்ப்புக்கள் தொகுப்பு (18/26)
ஆதாரம்: முஸ்லிம்